உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் வாக்குறுதி பேரணி: பிரியங்கா காந்தி துவக்கினார்

பதிவு செய்த நாள் : 25 அக்டோபர் 2021 14:27

லக்னோ, அக்டோபர் 25,

2022ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை மாநில பொது மக்கள் அனைவருக்கும் தெரிவிப்பதற்காக வேண்டி, தேர்தல் வாக்குறுதி பேரணி ஒன்றை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பார்ப்பாங்கி மாவட்டத்தில் தேர்தல் வாக்குறுதியில் பிரியங்கா காந்தி துவக்கி வைத்தார்.

இந்த பிரதிக்யா யாத்திரா பேரணியின்போது இதுவரை அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை கோஷங்கள் எழுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்படி காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளாக எழுப்பப்படவில்லை கோஷங்கள் விவரம் வருமாறு:

மொத்தமுள்ள இடங்களில் 40 சதவீத இடங்களுக்கு பெண் வேட்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

பெண்களின் கல்வி மற்றும் பாதுகாப்பு கருதி 12வது வரை படிக்கிற பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும்.

பட்டப்படிப்பு படிக்கும் மாணவியருக்கு ஸ்கூட்டி வழங்கப்படும்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் படித்த மாணவ மாணவியர் மத்தியில் உள்ள வேலையில்லா திண்டாட்டத்தை போக்க 20 லட்சம் பேருக்கு உடனடியாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

மின்சார கட்டணம் 50% குறைக்கப்படும்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரொக்கமாக ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்படும்.

கோதுமை, நெல் ஆகிய இரண்டுக்கும் ஒரு குவிண்டாலுக்கு கொள்முதல் விலையாக ரூ 2500 வழங்கப்படும்.

கரும்புக்கு ஒரு குவிண்டாலுக்கு கொள்முதல் விலையாக ரூபாய் 400 வழங்கப்படும்.

ரூ. 10 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சைகளுக்கு அரசு பணம் வழங்கும்.

விவசாயிகளின் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும்.

இந்த தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் காங்கிரஸ் வாக்குறுதிகளாக அறிமுகம் செய்யும் நோக்கத்துடன் பேரணி இன்று துவக்கப்பட்டுள்ளது.