தேசிய சுகாதார உள்கட்டமைப்பு மிஷன்: வாரணாசியில்துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

பதிவு செய்த நாள் : 25 அக்டோபர் 2021 11:28

வாரணாசி, அக்டோபர் 25,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தேசிய சுகாதார உள்கட்டமைப்பு மிஷனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 9 மருத்துவக் கல்லூரிகளையும் பிரதமர் துவக்கி வைத்தார்.

தனது தொகுதியில் ரூ. 5200 கோடி செலவிலான பல திட்டங்களையும் இந்திய பிரதமர் துவக்கி வைத்தார்.

தேசிய அளவில் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திட்டத்துக்கு ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் உள்கட்டமைப்பு மிஷன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்திய அளவில் சுகாதார கட்டமைப்புக்கான மிகப்பெரிய திட்டமாக அது கருதப்படுகிறது.

சுகாதார கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிறைவு செய்வதற்காக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிராமப் பகுதிகளில் 17788 சுகாதார நல மையங்கள் உள்ளன .

நகர்ப்புறங்களில் 110 24 சுகாதார மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. இவற்றின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து இவை பொது மக்களுக்கு முழு அளவில் சுகாதாரத்துறையில் உதவுவதற்கு தேசிய அளவிலான சுகாதார கட்டமைப்பு மிஷன் பெரிய அளவில் உதவும் என்று கூறப்பட்டுள்ளது. .

நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் அடிப்படை சுகாதார மருத்துவமனைகளோடு மேம்படுத்தப்பட்ட சுகாதார மருத்துவ மையங்களும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அவசியம் என கருதப்படுகிறது.

அதனால் முழு அளவிலான சுகாதார சிகிச்சை மையங்களை எல்லா மாவட்டங்களிலும் உருவாக்க இந்தத் திட்டம் உதவும் என்று கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் மிஷனுக்கு என ஒரு தேசிய நிறுவனமும் வைரஸ் நோய் தொடர்பான நான்கு மையங்களும் உருவாக்கப்படும்.

இவற்றைத் தவிர உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியபிராந்திய மையம் ஒன்றும் இந்தியாவில் துவக்கப்பட்ட இந்த மிஷன் வழிவகுக்கிறது.

இதைத்தவிர 9 உயர் ஆய்வகங்களும் ஐந்து புதிய பிராந்திய தேசிய நோய் கட்டுப்பாட்டு மையங்களும் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 9 மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்படும் என்று தனது உரையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.