ஐபிஎல் டி20 கோப்பையை 4வது முறை வென்றது சென்னை அணி

பதிவு செய்த நாள் : 16 அக்டோபர் 2021 10:39

சென்னை

கொல்கத்தா அணியுடனான பைனலில், 27 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே) 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று இரவு துபாயில் நடைபெற்ற போட்டியில் வெற்றி வாகை சூடியது.

வெற்றிக்களிப்பால் மக்கள் தூங்கவே இல்லை. இளைஞர்கள் விடிய விடிய பட்டாசுகள் வெடித்த வண்ணம் இருந்தனர்.

நவம்பர் 4ம் தேதி தீபாவளியை விடிய  விடிய முன்கூட்டியே கொண்டாடி தீர்த்தனர்.

சமூக வலைதளங்கள் அனைத்தும் தல தோனியின் படங்கள் மற்றும் காட்சிகளால் நிரம்பி வழிந்தன.

இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் நிலைநாட்டும் விளையாட்டு ஒன்று உண்டென்றால் அது கிரிக்கெட் தான் என்று எழுத்தாளர் சுஜாதா சொன்னது நினைவுக்கு வருகிறது. இல்லை யென்றால் தோனி நமக்கு தல ஆகியிருப்பாரா?

நேற்று நடந்த இறுதி போட்டியையும் சேர்த்து ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில், 300 ஆட்டங்களில் கேப்டன் பொறுப்பு வகித்த ஒரே வீரர் என்ற சிறப்புக்கு கேப்டன் தோனி சொந்தக்காரர் ஆனார்.

சிஎஸ்கே அணியின் வெற்றியை தொடர்ந்து கேப்டன் தோனி கூறுகையில், சென்னை அணி பற்றி பேசுவதற்கு முன் கொல்கத்தா அணியைப் பற்றி பேச வேண்டும். இந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை வெல்வதற்கு மிகவும் தகுதி வாய்ந்த அணி என்றால் அது கொல்கத்தா தான். அவர்களது ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது என்று கூறினார்.