கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த பிரிட்டிஷ் எம்.பி பலி

பதிவு செய்த நாள் : 15 அக்டோபர் 2021 21:46


எசெக்ஸ், அக்டோபர் 15,

பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி. சர் டேவிட் அமேஸ் கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்தார். அவர் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அந்த இட்த்திலேயே மருத்துவர்கள் அவருக்கு அறுவைச்சிகிச்சை செய்தனர். ஆனாலும் அவர் உயிரிழந்தார். 

பிரிட்டன் உள்ளூர் நேரப்படி பகல் 12 மணியளவில் லீ-ஆன்-சீ-யில் உள்ள தேவாலாயத்தில் தனது தொகுதி மக்களிடம் டேவிட் அமேஸ் பேசிக கொண்டிருந்த பொழுது கத்தியால் குத்தப்பட்டார்.

சம்பவம் நடந்த இடத்தில் செளத் எண்ட் கவுன்சிலர் ஜான் லேம்ப் இருந்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு உடனடியாக வான் வழியாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவம் நடந்தவுடன் மருத்துவமனைக்கு டேவிட் கொண்டு செல்லப்படவில்லை என்றும் சம்பவ பகுதியிலேயே அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர் என்றும் ஜான் லேம்ப் பிபிசியிடம் தெரிவித்தார்.

டேவிட் அமேஸின் உடல்நிலை மிக மோசமாக இருந்ததால், அவரை ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லாமல் சம்பவ பகுதியில் வைத்தே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முற்பட்டனர். ஆனாலும் அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

போலீசாருக்கு உடனே தகவல் தரப்பட்டது. போலீசார் அங்கு வந்து ஒருவரை கைது செய்ததாகவும் எஸ்ஸெக்ஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிடிபட்ட நபரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் கூறினர்.

1983ஆம் ஆண்டு முதல் பிரிட்டனில் எம்.பி ஆக இருக்கும் டேவிட் அமேஸுக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.

அவரது இறப்பு குறித்து பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளர் சஜித் ஜாவேத் கூறுகையில், "டேவிட் ஒரு சிறந்த மனிதர், சிறந்த நண்பர், மற்றும் சிறந்த எம்.பி., தனது ஜனநாயக கடமையை ஆற்றும்போது அவர் கொல்லப்பட்டுள்ளார்," என்று குறிப்பிட்டார். பிரிட்டன் நிதித்துறை செயலாளர் (சான்சலர்) ரிஷி சுனக், "வன்முறையின் மோசமான அம்சமே அது மனிதாபிமானமற்று இருப்பதுதான். அது உலகின் மகிழ்ச்சியைத் திருடுகிறது, நாம் மிகவும் விரும்புவதை நம்மிடமிருந்து பறிக்கிறது," என்று கூறியுள்ளார். "இன்று அது ஒரு தந்தை, கணவர் மற்றும் மரியாதைக்குரிய சக மனிதரை பறித்து விட்டது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் சர் டேவிட்டின் அன்புக்குரியவர்களுடன் உள்ளன," என்று ரிஷி சுனக் கூறியுள்ளார்.

பிரிட்டிஷ் எம்பி ஒருவர் கத்தியால் குத்திக கொல்லப்பட்டது இது இரண்டாவது முறையாகும்.

2016இல் ஜோ காக்ஸ் என்ற எம்பி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.

2021ல் டேவிட் கொல்லப்பட்டார்.