காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம். என்னை கொன்றாலும் நிலைமை மாறாது: பரூக் உருக்கம்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2021 20:24

ஸ்ரீநகர், அக்டோபர் 13,

காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாகும் அந்த நிலை என்னை சுட்டுக் கொன்றால் கூட மாறப்போவதில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

பள்ளிக்கூடத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தலைமையாசிரியர் சுபிந்தர் கவுருக்கு குருத்துவாரா ஒன்றில் அஞ்சலி கூட்டம் நடந்தது அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா. காஷ்மீர் இந்தியாவின் அங்கம் அது ஒருபோதும் பாகிஸ்தானுடன் சேராது. என்னை சுட்டுக் கொன்றாலும் இந்த நிலைமை மாற போவதில்லை என்று பரூக் அப்துல்லா கூறினார்.

இந்த மிருகங்களை நாம் எதிர்த்து போராட வேண்டும். காஷ்மீர்மக்கள் ஒற்றுமையாக இருதயத்தோடு கொலைகாரர்களை எதிர்த்து போராட வேண்டும். நாம் அஞ்சக்கூடாது என்று பரூக் அப்துல்லா கூறினார்.

சுட்டுக்கொல்லப்பட்ட தலைமையாசிரியர் சுபிந்தர் கவுருக்கு அஞ்சலி செலுத்திய பரூக் அப்துல்லா,

எல்லோரும் காஷ்மீரை விட்டு வெளியேறிய பொழுது நீங்கள் மட்டும்தான் தைரியத்தோடு  காஷ்மீர் மண்ணை விட்டு வெளியேறவில்லை.இது எனக்கு பெருமை அளிக்கிறது என்றார்.

சிறு வயது குழந்தைகளுக்கு பாடம் கற்றுத் தந்த ஆசிரியரை சுட்டுக் கொல்வது இஸ்லாமிய மதத்துக்கு செய்யும் சேவை அல்ல. அவர்கள் பிசாசுக்கு ஊழியம் செய்கிறார்கள் என்று பரூக் அப்துல்லா ஆவேசமாக கூறினார்.

குருத்துவாராவுக்கு  வெளியே செய்தியாளர்களிடம் பேசும்போது. தீவிரவாதிகள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது அவர்கள் திட்டம் தோல்வியடையும். ஆனால் அவர்களை எதிர்த்துப் போராட முஸ்லிம்கள் சீக்கியர்கள் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நிற்க வேண்டும். இந்தியாவில் இப்பொழுது வெறுப்பு புயல் வீசுகிறது. இந்துக்கள் முஸ்லீம்கள் சீக்கியர்கள் பிரித்து வைக்கப்படுகிறார்கள்.

இந்தப் பிரிவினை அரசியல் நிறுத்தப்பட வேண்டும் இல்லாவிட்டால் இந்தியா காணாமல் போய்விடும் இந்தியாவை நாம் காப்பாற்ற வேண்டும் என்று பரூக் அப்துல்லா கூறினார்.