காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுப்பது தொடர்பாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சருடன் ஆய்வு கூட்டம்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2021 17:20

சென்னை

காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கை குறித்தும், இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT), சென்னை குழு நடத்திய ஆய்வு குறித்தும்  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் இன்று (13.10.2021) ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

காவிரி ஆற்றில் மருந்து பொருட்கள் கலந்து ஆற்றுநீர் மாசடைவதாக மத்திய அறிவியல் தொழில் நுட்ப துறையின் நீர் தொழில் நுட்ப பிரிவு, இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக் கவுன்சில் ஆகியவற்றின் நிதி உதவியுடன், இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT), சென்னை குழு நடத்திய ஆய்வு குறித்து வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தியின் தொடர்ச்சியாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் 13.10.2021 அன்று, சுற்றுச்சூழல் -  காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர். சுப்ரியா ஸாஹூ, பேராசிரியர் லிஜி பிலிப், இந்திய தொழில்நுட்ப கழகம், கண்ணன், உறுப்பினர் செயலர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ச. சங்கர், தலைவர் மற்றும் பேராசிரியர் சுற்றுச்சூழல் நல பொறியியல்துறை, இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, போரூர், முருகன், மல்லாடி மருத்துவ ஆராய்ச்சி நிலையம், சென்னை மற்றும் சுரேஷ், முதன்மை தொழில்நுட்ப இயக்குநர், ஜிலென்ஸ் இன்னோவேஸன் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட், அவர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

ஆய்வுக் கூட்டத்தில்  இந்திய தொழில்நுட்ப கழகம், தங்களின் ஆய்வு குறித்த விரிவான விளக்கத்தை அமைச்சர் அவர்களுக்கு எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து நடைப்பெற்ற கலந்தாய்வின் போது தற்போது காவிரி ஆற்றில் கலந்துள்ள மருந்துப் பொருட்கள், மக்களுக்காக மருத்துவத்திற்கு பயன்படுத்தும் அளவினைவிட மிகமிக குறைந்த அளவில் இருப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்பதாக ச. சங்கர், சுற்றுச்சூழல் நல பொறியியல்துறை, இராமசந்திரா மருத்துவக் கல்லூரி, போரூர் அவர்கள் எடுத்துரைத்தார். மேலும் தற்போது அதிகமாக பயன்பாட்டில் உள்ள மருந்து பொருட்களையும் ஆய்வு செய்வது சிறப்பாக இருக்கும் என்று கூறினார்.

சுரேஷ், முதன்மை தொழில்நுட்ப இயக்குநர், ஜிலென்ஸ் இன்னோவேஸன் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் அவர்கள் ஆற்றுநீரில் இம்மருந்து பொருட்களுடன் நகராட்சி கழிவுகளும் கலப்பதினால் மாசு ஏற்படுகிறது என்பதை உறுதி செய்ய நேரடியாக மருந்து பொருட்களாக ஆய்வு செய்யாமல், அவை உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தினால் உருவாகும் வேதி கலவைகளையும் கருத்தில் கொண்டு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

முருகன், மல்லாடி மருத்துவ ஆராய்ச்சி நிலையம், சென்னை அவர்கள் ஆற்றில் இம்மருந்து பொருட்கள் கலந்துள்ள அளவினை மிகவும் துல்லியமாக ஆய்வு செய்ய தற்போது பயன்படுத்தப்பட்டுள்ள உபகரணங்களை விட நவீன வகை உபகரணங்களை பயன்படுத்துதல் சிறப்பாக இருக்கும் என்று எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் அவர்கள், தற்போதைய அரசு தமிழ்நாட்டில் உள்ள நதிகளை பாதுகாப்பதற்கான தீவிரமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று தெரிவித்தார். மேலும் காவிரி நதி நீர் பாதுகாப்பு கருதி இந்திய தொழில்நுட்ப கழகம் இந்த ஆய்வினை மேற்கொண்டதற்காக தனது பாராட்டினை தெரிவித்தார். ஆய்வில் குறிப்பிடப்பட்ட மருந்து காரணிகள் ஆற்றில் மிகமிக குறைந்த அளவில் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத அளவில் இருந்தாலும் புதிய முயற்சியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது ஒரு சிறப்பம்சம் என்று தெரிவித்தார்.

மேலும் இந்திய தொழில்நுட்ப கழகத்துடன் இணைந்து பல்வேறு மருத்துவதுறை சம்பந்தப்பட்ட வல்லுநர்களுடன் கூடிய ஒரு உயர்மட்ட குழு அமைத்து காவிரி ஆற்றினை தொடர்ந்து கண்காணித்து அதை பாதுகாப்பதற்கான செயல்திட்டத்தினை உருவாக்குவதற்கு இந்த ஆய்வினை மேலும் இரண்டு ஆண்டுகள் தொடர வேண்டும் என்று தெரிவித்தார்.

மனிதர்கள் நோய் தீர்ப்பதற்காக எடுக்கும் மருந்துகள் மனித கழிவுகளிலிருந்து வெளியேறி உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து வெளியேறும் அன்றாட கழிவுநீருடன் நீர் நிலைகளில் கலப்பதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை மருத்துவர்கள் வழிகாட்டுதலின் படி தேவையான அளவிற்கு மட்டும் எடுத்துக்கொண்டு மீதமுள்ள மருந்து பொருட்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகளுடன் கலக்காமல்  பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் மருந்தகங்களில் காலவதியான மருந்து பொருட்களை குப்பை கிடங்குகளில் வெளியேற்றாமல் சேகரித்தும் மற்றும் மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தாத மருந்து பொருட்களை மீண்டும் மருந்தகங்களால் பெறப்பட்டு, தொழிற்சாலைகளுக்கே திரும்ப அனுப்பப்பட்டு முறையாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்காக தமிழ்நாட்டிற்கான தனி “மருந்து பயன்பாடு மற்றும் கழிவு மேலாண்மை கொள்கை” உருவாக்கப்படும் என்பதை அமைச்சர் தெரிவித்தார்.