நெற்பயிர் தாளடியை எரிக்கவிடாமல் தடுக்க புதிய தொழில்நுட்ப முயற்சி

பதிவு செய்த நாள் : 11 அக்டோபர் 2021

நடப்பு 2021 ஆம் ஆண்டில் பஞ்சாப் அரியானா டெல்லி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நெல் பயிரிடப்படும் பகுதிகளில் நெல் தாளடியை எரித்து விடும் பழக்கம் காரணமாக இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

மக்களுக்கு சுவாசிக்க தூய்மையான காற்று கிடைப்பதில்லை என்ற புகார் உள்ளது. இதனை தவிர்ப்பதற்காக கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாப், அரியானா, மத்திய அரசு, உத்தர பிரதேசம் அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் சில முயற்சிகளும் தண்டனை வழங்கும் முயற்சிகளும் ஒரே சமயத்தில் மேற்கொள்ளப்படுகின்றன

இவற்றினால் விவசாயிகள் நெல் தாளடி பயிரைக் கொளுத்திவிடும் பழக்கத்தில் இருந்து விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த முயற்சிகள் எல்லாம் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.

அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக வேளாண் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

தென்மேற்கு பருவக்காற்று காலம் முடிந்ததும் குளிர்கால கோதுமை விதைப்பு பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் துவங்குகிறது. சாதாரணமாக விவசாயிகளுக்கு 7 முதல் 10 நாட்கள் மட்டுமே அவகாசம் கிடைக்கிறது. அதனால் இந்த காலத்தில் விவசாயிகள் தாளடிப் பயிரை மறுபடியும் கூலி ஆட்களை பயன்படுத்தி அறுத்து அகற்றுவது நடக்காத காரியம். விவசாயிகளுக்கு கூடுதல் சிரமம். இந்த காலத்தில் பணியாற்றுவதற்கு விவசாய கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. அதனால் விவசாயிகள் தாளடி நெற்பயிரை கொளுத்திவிடுவது சுலபமான வேலையாக இருந்து வருகிறது இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றம் விவசாயிகள் மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையையும் சீரழிக்கிறது.

நடப்பு ஆண்டு  மத்திய அரசு ரூ 490 கோடியை டெல்லி, உ.பி, பஞ்சாப், அரியானா, ஆகிய 4 மாநிலங்களுக்கும் ஒதுக்கியுள்ளது.

அரியானா தனது மாநிலத்தில் நெற்பயிர் தாளடி கொளுத்தப்படுவதை தடுப்பதற்கு விவசாயிகளுக்கு 200 கோடி ரூபாய் ஊக்குவிப்புத் தொகையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

உபி, தாளடிப் பயிர் எரிப்புக்காக தொடரப்பட்ட 868 வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி தலைநகர்பகுதியில் நெல் பயிரிடப்பட்ட 4000 ஏக்கரிலும் அரசாங்கமே பூசா தாளடிப்பயிரை மக்க வைக்கும் இயற்கை நொதியை இலவசமாக தெளிக்கப்போவதாக டில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

10 லட்சம் ஏக்கரில் சாணம் கலந்த தாளடி பயிரை அழுகச் செய்யும் தெளிப்பு முறை ஒன்றை இந்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநில அரசு துவக்க இருக்கிறது

ஹரியானா மாநிலத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது பஞ்சாபில் 5 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு இருக்கிறது டெல்லியில் 4 ஆயிரம் ஏக்கர் நெல் பயிரிடப்பட்டு உள்ளது

இந்த இந்த நிலங்களில் எல்லாம் நெல் தாளடி பயிரைக் கொளுத்த விடாமல் காப்பாற்றுவது பெரிய சாதனையாக அமையும்.

அரசு தொழில்நுட்பம்

இந்திய அரசின் விவசாய ஆராய்ச்சி நிறுவனம் நெல்தாளடிப் பயிர் எரிப்பைத் தடுக்க தொடர்ந்து தொழில்நுட்ப ஆய்வுகளை நடத்தி வருகிறது. நெல் அறுவடை முடிந்ததும் நிலத்தில் தெளிப்பதற்கு என இயற்கையான என்சைம்களை கொண்ட பூசா என்ற கேப்ஸ்யூலை ஏற்கனவே இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கேப்ஸ்யூலை நெல் அறுவடை முடிந்ததும் விவசாய நிலத்தில் தெளித்து விட வேண்டும். கேப்ஸ்யூல் கரைந்து அதில் உள்ள இயற்கையான என்சைம்கள் நெல் தாளடி பயிரை இயல்பாக அழுகச் செய்யும்.

நெல் தாளடி பயிர்கள் அழுகி மக்கும் பொழுது இயற்கையான கம்போஸ்ட் உரமாக மாறிவிடுகிறது.

நெல் தாளடி பயிர்கள் அகற்றப்படுவதோடு, நிலத்தில் இயற்கையான காம்போசிட் உரம் ஒரேநேரத்தில் கிடைப்பதற்கும் இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சி உதவுகிறது.

ஆனால் இந்த காப்ஸ்யூல்கள் எதிர்பார்த்த அளவுக்கு நிலத்தில் நெல் தாளடி பயிர்களை அழுகச் செய்வதில் 100 சதவீதம் பலன் அளிக்க வில்லை. ஏனென்றால் இவற்றை கூலியாட்கள் மூலமாக நெல் பயிரிடப்பட்ட பகுதிகளில் விதைகளை விதைப்பது போலதெளிக்க வேண்டியுள்ளது.

நெல் தாளடி மீது விழும் காப்ஸ்யூல்கள் கரையும் பொழுது அவற்றிலிருந்து இயற்கைநொதிப் பொருள்கள் வெளியாகின்றன இந்த நொதிப் பொருட்கள் வெளியாக தாமதமாகும் பட்சத்தில் நெல் தாளடிப்பயிர் அழுகி மக்குவதற்கு மிகுந்த காலம் எடுத்துக் கொள்கிறது. இந்த தாமதத்தை தவிர்க்க ஸ்பிரேயர் மூலம் தெளிக்கும் சோதனைகளை டில்லி அரசு மேற்கொண்டது. சோதனைகள் வெற்றியை உறுதி செய்துள்ளன. இந்த சோதனை ஆய்வு அறிக்கைகளை மத்திய அரசுக்கு டெல்லி உடனுக்குடன் தெரிவித்துள்ளது.பூசா கேப்ஸ்யூல் தொழில் நுட்பத்தை ஸ்பிரேயர் தொழில் நுட்பமாக மாற்றியது டெல்லி அரசு. அந்த கை ஸ்பிரேயர் தொழில் நுட்பத்தை பூசா பூம் ஸ்பிரேயர் தொழில் நுட்பமாக மாற்றியுள்ளது பெங்களுரைச் சேர்ந்த நர்ச்சர் பாம் (Nurture Farm) என்ற இளம் கம்பெனி.

கேப்ஸ்யூல் வேண்டாம். கேப்ஸ்யூலில் உள்ள இயற்கை நொதிப்பொருள் எளிதாக நெல் தாளடிப்பயிரை அடைய அதனை பொடி வடிவில் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.அது நமது விவசாயிக்ளுக்கு பழகிய தொழில் நுட்பம்.

இந்த திட்டம் செயலாக்கப்பட்டது. இதன்படி மத்திய அரசின் விவசாய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய பூஷா கேப்ஸ்யூல் இயற்கை நொதி பொருட்களை பொடி வடிவில் தண்ணீரில் கலந்து நெல் தாளடிப் பயிர் மீது பூம் ஸ்பிரேயர் மூலம் தெளித்தார்கள். தண்ணீர் கலந்து இயற்கை நொதிப் பொருளை நெல் பயிர் மீது தெளிக்கும் பொழுது, நெல் தாளடி பயிர்கள் விரைவாக அழுகுவதைக் கண்டறிந்தார்கள். இவ்வாறு நொதிப்பொருள் திரவ வடிவில் தெளிக்கப்பட்ட வயலில் தண்ணீரை ஒரு நான்கு நாட்களுக்கு ஈரம் இருக்கும் வகையில் பாய்ச்சுவதும் அதன் பிறகு நிலத்தை ஒரு முறை உழுவதும் சிறந்த பலனைத் தருவதை கண்டறிந்தனர்.

அதனால் பூசா கேப்ஸ்யூலை பொடி வடிவத்தில் தண்ணீரில் கலந்து தெளிப்பதற்கு புதிய உத்திகளைக் கையாளவும் திட்டமிட்டனர்

மற்ற பூச்சி மருந்து வகைகளை தண்ணீரில்கலந்து தெளிப்பது போல பூசா கேப்ஸ்யூல் பொடியையும் தண்ணீரில் கலந்து தெளித்தனர் இந்த பரீட்சார்த்த முயற்சி நல்ல பலனைத் தந்தது

ஆனால் லட்சக் கணக்கான ஏக்கரில்மற்ற மருந்து வகைகளை தெளிப்பது பூசா கலவையைத் தெளிப்பதற்கு ஏகப்பட்ட நாட்கள் தேவைப்பட்டது அந்த அளவு காத்திருக்க விவசாயிகளுக்கு அவகாசம் இருப்பதில்லை. அதனால் குளிர்கால கோதுமையை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விதைக்க விவசாயிகள் விரும்பினார்கள்.

விவசாயிகளின் தேவையை உணர்ந்து அதி விரைவில் பூசா கலவையை தெளிக்க புதிய தொழில்நுட்பத்தை நர்ச்சர் பாம் இப்பொழுது பயன்படுத்துகிறது இதன்படி பூச்சி மருந்து தெளிக்கும் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த எந்திரத்தில் மையத்திலிருந்து வலப்புறமும் இடப்புறமும் 20 அடி நீளமுள்ள ஸ்பிரேயர் குழாய்கள் பொருத்தப்படுகின்றன. இந்தப் ஸ்பிரேயர்களின் கீழ் பகுதியில் சிறிய துளைகள் இடப்பட்டு இருக்கும். இந்த துளைகளின் வழியாக பூசா நொதிகள் வெளிப்பட்டு தாளடிப்பயிரில்பரவும். கிட்டத்தட்ட 7 நிமிடத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் பூசா நொதிப்பொருள் கலவையை தெளித்து விட முடியும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்த ஸ்பிரேயர் இயந்திரத்தை இயக்குவதற்கு ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஒரு லிட்டர் டீசல் போதுமானது என்று ஆய்வுகள் மூலம் உறுதி செய்துள்ளனர்.

இந்த எந்திரத்துக்கு பூசா பூம் ஸ்பிரேயர் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த பூசா பூம் ஸ்பிரேயர் எந்திரத்தை ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் இயக்குவதற்கு இயந்திரத்துக்கான பராமரிப்புச் செலவு உட்பட ஒரு ஏக்கருக்கு 600 ரூபாய் ஆகும் என்று மதிப்பிட்டுள்ளனர்.

நொதிப் பொருளை தாளடி பயிர்கள் உள்ள நிலத்தில் தெளித்த பிறகு அதற்கு தண்ணீர் பாய்ச்சவும் நிலத்தின் மேல் அடி மண்ணை திருப்பி விடும் வகையில் உழவு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ 3000 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என நர்ச்சர் பார்ம் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி திவாரி கூறினார்.

இந்த புதிய தொழில்நுட்ப முயற்சியை விவசாயிகள் மத்தியில் உடனடியாக கொண்டு செல்வது அவசியம் என்று அந்த நிறுவனம் கருதுகிறது. அதனால் பெரிய அளவில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

உடனடியாக விவசாயிகள் தங்கள் நிலத்தில் பூசா என்சைம் நொதிப்பொருள் திரவத்தை தெளிப்பதற்கு இயந்திரத்தை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். அதற்கு அவர்கள் பதிவு செய்வதற்காக ஒரு மொபைல் ஆப் உருவாக்கியுள்ளனர் இதனை கிசான் மித்ராஆப்ஸ்  மூலமே பயன்படுத்தலாம்.

மொபைல் ஆப்ஸ் மூலம் பூசா பூம் ஸ்பிரேயர் எந்திரத்தை தங்கள் நிலத்தில் மருந்து தெளிக்க பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்த விவசாயிகள் நிலத்தில் தாமதம் இல்லாமல் பூசா தெளிப்பதற்கு என 700 இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் மத்தியில் இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யவும், பூசா பூம் ஸ்பிரேயர் பயன்படுத்தும் முறை ஆகியவற்றை விவசாயிகளிடம் கொண்டு போய்சேர்க்க வேண்டும். பூசா பூம் ஸ்பிரேயர் ஆப்ஸ் மூலம் பதிவு செய்யவும் விவசாயிகளுக்கு சொல்லித் தர வேண்டும்.

அனைத்து தகவல்களையும் விவசாயிகளிடம்கொண்டுபோய் சேர்ப்பதற்காக கல்லூரி மாணவிகள் 600 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். .இவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள விவசாயிகளை அணுகி கிசான்மித்ரா ஆப்ஸ் மற்றும் பூசா இயற்கை நொதிப்பொருள்கள் ஆகியவை குறித்தும் விளக்கமாக பேசுவார்கள். விவசாயிகளின் கேள்விக்கு பதில் அளிப்பார்கள்.

இந்த அனைத்து வேலைகளையும் ஒருங்கிணைந்த வகையில் மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் விவசாய பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹரியானா பஞ்சாப் மாநில விவசாயிகளில் சிலர் ஏற்கனவே பூசா நொதிப்பொருள்களை பயன்படுத்துவதற்கு பதிவு செய்து தங்கள் நிலங்களில் நொதிப்பொருள் திரவத்தை பூசா பூம் ஸ்பிரேயர் மூலம் தெளிக்க ஏற்பாடு செய்துள்ளனர் ஆனால் இந்த முயற்சியோடு மத்திய மாநில அரசுகளும் இணைந்து பிரசாரம் செய்வது சிறப்பான பலன் தரும்.

இந்த ஆண்டாவது நெல் மணிகளை நமக்கு ஈன்று தரும் நெல் பயிரை கொளுத்துவது குறைந்தால் இந்தியாவே சந்தோஷப்படும்.

டெல்லியை இந்த ஆண்டாவது காற்று மாசு இல்லாமல் காப்பாற்ற முடியுமா என்பது மிகவும் அனைவர் மனதிலும் எதிரொலிக்கும் கேள்வியாகும்.

கோவிட் 19 தொற்று காரணமாக மூச்சு திணறிய மூத்த குடிமக்கள் நிம்மதியாக சுவாசிக்க வழி பிறக்குமா?


கட்டுரையாளர்: க.சந்தானம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation