தென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு பவள விழா – முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பதிவு செய்த நாள் : 27 செப்டம்பர் 2021 11:30

சென்னை

சென்னை, இராயப்பேட்டையில் தென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு பவள விழாவினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இராயப்பேட்டையில் இன்று (27.9.2021) நடைபெற்ற தென்னிந்திய திருச்சபையின் 75ஆம் ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:

அனைவருக்கும் அன்பான வணக்கம். 

பேராயர் பெருமக்களே,  நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களே, மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே

உங்கள் அனைவருக்கும் மீண்டும் அன்பான வணக்கம். 

     "ஒற்றுமை, சகோதரத்துவம், அனைவரும் சமம்" ஆகிய உன்னத நோக்கங்களை நிலைநாட்ட அயராத அர்ப்பணிப்பு மிகுந்த சேவையாற்றி 74 ஆண்டுகளை நிறைவு செய்து இன்றைக்கு 75ஆம் ஆண்டில் நுழையும் பாரம்பரியமும், பழமையும் மிக்க தென்னிந்திய திருச்சபைக்கு என்னுடைய இதயப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

     இந்த நிகழ்ச்சிக்கு 75ஆம் ஆண்டிலே அடியெடுத்து வைக்கக்கூடிய  இந்த திருச்சபைக்கு என்னுடைய வாழ்த்துக்களை நான் ஏற்கனவே தெரிவித்திருந்தாலும் அந்த வாழ்த்தை இந்த நிகழ்ச்சியிலே இப்போது உங்களிடத்திலே நான் தெரிவிக்க விரும்புகிறேன்.  திறந்த உலகில் சிறந்த திருச்சபை அனைவரும் சேர்ந்து எதிர்நோக்குவோம் என்ற பொருளில் கொண்டாடப்படுகின்ற இந்த தென்னிந்திய திருச்சபையின் பவள விழாவினை இன்றைக்கு துவக்கி வைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 

     நாடு முழுக்க கல்வி நிறுவனங்களையும், மருத்துவமனைகளையும் உருவாக்கி "அனைவருக்கும் கல்வி மற்றும் மருத்துவம்" என்ற இலட்சியப் பாதையில் வெற்றிப்பயணம் செய்து கொண்டிருக்கக்கூடிய இந்தத் திருச்சபை தமிழ்நாட்டிற்கும், இந்திய நாட்டிற்கும் கிடைத்த அரிய கருவூலம். சமுதாயப்பணியை ஒரு இயக்கமாகவே தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்து வரக்கூடிய  இந்த திருச்சபையின் பணிகளுக்கு என்னுடைய சார்பில் குறிப்பாக, தமிழ்நாடு அரசின் சார்பில் என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

     இந்தியாவின் மத நல்லிணக்கத்திற்கும் மதசார்பின்மைக்கும் ஏற்ற சாதி, சமயமற்ற நல்வாழ்விற்காகத் தென்னிந்திய திருச்சபை இதுவரை ஆற்றியுள்ள ஆக்கபூர்வமான பணிகளை நன்றியுணர்வுடன் நினைவுகூர்ந்து தென்னிந்தியத் திருச்சபை இன்னும் பல நூறு ஆண்டு காலம் கம்பீரமாக தனது வெற்றிப்பயணத்தை தொடர்ந்திட முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் அமோக வெற்றி காணவும் முழு மனதோடு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு, இன்றைக்கு தமிழகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய அரசு உங்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய அரசு. நான் பலமுறை அடிக்கடி எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பது நான், எனது அரசு என்று சொல்லமாட்டேன் அல்லது எங்களுடைய அரசு என்று கூறமாட்டேன். இது நம்முடைய அரசு. தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறபோது பெரும்பான்மை இடங்களில் திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற செய்தி வந்தபோது நான் அப்போது செய்தியாளர் இடத்தில் சொன்னேன், 

அமையவிருக்கக்கூடிய ஆட்சி மக்களுக்கு பணியாற்றக்கூடிய ஆட்சியாக அமையும்,  வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து என்னுடைய பணி அமையும்.

இன்னொன்றையும் குறிப்பிட்டுச் சொன்னேன். 

வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய வகையிலே, வாக்களிக்கத் தவறியவர்கள், இந்த ஆட்சிக்கு நாம் வாக்களிக்காமல் இருந்து விட்டோமோ என்ற வருந்தக் கூடிய அளவில் இந்த ஆட்சி அமையும் என்று நான் சொல்லியிருக்கிறேன். 

தேர்தல் நேரத்திலே போட்டியிடக்கூடிய கட்சிகளெல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பொறுப்புக்கு வந்தால் என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை வாக்குறுதிகளாக வழங்குவது வழக்கம். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையிலே, சொன்னதைத் தான் செய்வோம் செய்வதைத் தான் சொல்வோம் என்ற அடிப்படையிலே வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

குறிப்பாக, நடந்து முடிந்த பொதுத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும். ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கினோம்.  அந்த 500க்கு மேற்பட்ட வாக்குறுதிகளில் இன்றைக்கு 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று கம்பீரமாக இந்த நேரத்தில் சொல்லுகிறோம். 

ஆகவே, மக்களுக்கு பணியாற்றுகிற அரசாக, உங்களால் உருவாக்கித் தரப்பட்டிருக்கக்கூடிய அரசாக இந்த அரசு என்றைக்கும் இருக்கும். அந்த வகையிலே இன்றைக்கு திருச்சபையின் 75 ஆம் ஆண்டு விழாவிலே கலந்து கொண்டு உங்களை சந்திக்கிற வாய்ப்பினை கிடைத்ததில் நான் மிகுந்த மகிச்சியடைகிறேன். 

பல்வேறு பணிகளின் காரணமாகத்தான் நான் சுருக்கமாக உங்களிடத்திலே உரையாற்றிவிட்டு இந்த விழாவிலே கலந்து கொண்டு உங்களை சந்தித்துவிட்டு விடைபெறவேண்டும் என்ற உணர்வோடு வந்திருக்கிறேன்.  ஆகவே அதற்கு நீங்கள் வழி தரவேண்டும், அதற்கு நீங்கள் அனுமதி அளிக்கவேண்டும் என்று அன்போடு கேட்டு உங்கள் அத்தனை பேருக்கும் என் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.

இவ்வாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உரையில் தெரிவித்தார்.