மதுரையில் மகாத்மா காந்தியடிகளின் ஆடைப் புரட்சி நூற்றாண்டு விழா

பதிவு செய்த நாள் : 22 செப்டம்பர் 2021 10:44

மதுரை:

மகாத்மா காந்தியடிகள் மேல் ஆடை துறந்த நாள்,  ஆடைப்புரட்சி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, காமராஜர் சாலை அருகில் உள்ள காந்தி பொட்டலில் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் பி. மூர்த்தி, மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் ஆகியோர் இன்று (22-9-2021) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மகாத்மா மேல் ஆடை துறந்த நாள்  குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

மதுரை மேலமாசி வீதியும் 22-9-1921-ம் இந்திய வரலாற்றின் திசையை மாற்றி எழுதியதன் நூற்றாண்டு!

இந்திய மக்களின் துன்பங்களை உணர்ந்த அண்ணல் காந்தியடிகள் தன் மேலாடையைத் துறந்த அரை ஆடைப் புரட்சி நாள் இன்று!

மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும்!

என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதுரை மேலமாசி வீதியில் உள்ள கதர் விற்பனை நிலையத்தில் காந்தியடிகளின்  உருவச்சிலைக்கு இன்று அமைச்சர் மூர்த்தி மற்றும்  மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் ஆகியோர் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

காந்திஜி அரை ஆடைக்கு மாறிய நூற்றாண்டு நாள்

காந்தியடிகளின் வாழ்க்கையில் குஜராத் மாநிலத்தின் போர்பந்தர், சபர்மதி, தமிழ்நாட்டின் மதுரை ஆகிய 3 இடங்கள் முக்கியமானவை.

வெளிநாட்டில் சட்டப்படிப்பு மேற்கொண்ட மகாத்மா காந்தி 1888ஆம் முதல் கோட்-சூட் அணிவதையே தனது வழக்கமாக வைத்திருந்தார். அதன்பிறகு 33 ஆண்டுகளுக்குப் பிறகு,

1921 செப்டம்பர் 21ஆம் தேதி ரெயிலில் மதுரைக்கு வந்த காந்திக்கு வழி நெடுக ஆரவார வரவேற்பு.
திரண்டு இருந்த மக்களில் அநேகமாக எல்லாருமே விவசாயிகள், தொழிலாளர்கள், சாமானியர்கள். இடுப்பில் ஓர் அரைத்துண்டு மட்டுமே கட்டி இருந்தனர். ‘இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்..?’ இல்லாமை தான்.
‘இந்தியாவில் மிகப்பெரும்பான்மை மக்கள் வறிய நிலையில்தான் இருக்கிறார்கள்; தன்னை நம்பி பின்தொடரும் மக்களுக்கு, 2 முழம் துணிக்குக்கூட வழி இல்லை’
நாட்டின் சாதாரண மக்கள் முழு உடை அணிய வசதியில்லாதபோது, தான் மட்டும் எப்படி முழு உடை அணியலாம் என்ற கேள்வி காந்திக்கு எழுந்தது.
 மதுரை மேலமாசி வீதியில் தங்கி இருந்த காந்திக்கு, இரவு முழுக்க மன வேதனை; முடிவு செய்தார். மறுநாள் காலை ‘அரை ஆடை’ அணிந்தபடி வெளியில் வந்தார்.
காந்தியடிகள் அரை ஆடைக்கு மாறிய அந்த நாள் செப்டம்பர் 22-ந்தேதி 1921-ம் ஆண்டு.

ஒரு மனிதரை மகாத்மாவாக உயர்த்திய மதுரை சம்பவம் நிகழ்ந்து 100 ஆண்டுகளின் நிறைவில் இன்று, அரை ஆடைதான் காந்தியின் அடையாளமாய் நிற்கிறது. தகவல் தொடர்புச்சாதன வசதிகள் ஏதும் இல்லாத நாட்களில் காந்தியடிகள் சென்ற இடமெல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி இருந்தார்களே காந்தி சொல்லை மீறுவதற்கு ஆங்கில ஆட்சியாளர்கள் அஞ்சினார்களே இந்த அதிசயத்தின் பின்னால் அவர் அணிந்த அரை ஆடையின் பங்கு மகத்தானது.