சேலத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து துவக்கினார்

பதிவு செய்த நாள் : 20 செப்டம்பர் 2021 13:07

சேலம்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 20.09.2021 முதல் 25.09.2021 வரை  மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம், நகருக்குள் வனம் அமைக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவ திட்டம் ஆகியவற்றை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு (20.09.2021) இன்று துவக்கி வைத்தார்.

சேலம் சீலாவாரி ஏரியினை தூர்வாரும் பணியினை அமைச்சர்  கே.என்.நேரு இன்று நேரில்  துவக்கிவைத்து, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பருவ மழையினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திடும் வகையில் 20.09.2021 முதல் 25.09.2021 வரை அனைத்து மாநகராட்சி மற்றும் நகரப்பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறையின் மூலம்  மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சேலம் மாநகராட்சி சீலாவரி ஏரியில்  இன்று 20.09.2021  மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாமினையும்,  நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு அவர்கள்  துவக்கி வைத்தார்.

மேலும், நகருக்குள் வனம் அமைக்கும் திட்டத்தின் கீழ் 71 இடங்களில் 1 இலட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் மரம் நடும் திட்டத்தை துவக்கி வைக்கும் வகையில் சேலம் வாய்க்கால் பட்டரை உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மட்டும் 1000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது. 

மக்களை தேடி மருத்துவம் திட்டம் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தும் மக்களை தேடி மருத்துவம் பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களையும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு அவர்கள் வழங்கினார்.

தமிழகத்தில் எதிர்நோக்கியுள்ள வடகிழக்கு பருவமழையினால் நகரப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் மற்றும் மழைநீர் புகும் வாய்ப்பு உள்ளதாலும், அதிகப்படியாக தேக்கமாகும் மழைநீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளதாலும், மழைநீர் கால்வாய்களுடன் கலந்து தேங்குவதால், இதர தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்களுக்கு எந்தவித சுகாதார இடர்பாடுகள் ஏற்டாமல் தவிர்த்திடும் பொருட்டு தமிழகம் முழுவதும் 20.09.2021 முதல் 25.09.2021 வரை "மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மை பணி முகாம்" அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் ஆகியவற்றில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

 இப்பணிக்காக கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் அனைத்தையும் பெரிய மழைநீர் வடிகால், நடுத்தர மழைநீர் வடிகால் மற்றும் சிறிய மழைநீர் வடிகால் என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்களில் சேகரமாகியுள்ள வடிகால் படிவுகளை அகற்றுவதற்கு பொக்லைன், ஜெட்ராடிங் இயந்திரம், ஜேசிபி இயந்திரம் மற்றும் தேவைப்படும் இதர இயந்திரங்களை பயன்படுத்தி இப்பணியானது துரிதமாக செயல்பட அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக உள்ளாட்சிகளிலுள்ள வார்டுகளை 6 பிரிவுகளாக பிரித்து 6 நாட்களுக்குள் பணியினை முடிப்பதற்கு ஏதுவாக நகரப்பகுதிகளை பங்கீடு செய்யப்பட்டு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

சென்னை பெரு மாநகராட்சி மற்றும் 14 மாநகராட்சிகள் 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் 9097 இயந்திரங்கள் மூலம் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பணிக்காக 97,550 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டும், 4,623 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜேந்திரன்,  இயக்குநர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துரை பி. பொன்னையா மாவட்ட ஆட்சித் தலைவர் செ. கார்மேகம் மாநகராட்சி ஆணையாளர் தா. கிறிஸ்துராஜ் மாநகர பொறியாளர் முனைவர் அ.அசோகன், மாநகர நல அலுவலர் மரு. யோகானந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.