அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நியமனம் செல்லும்: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

பதிவு செய்த நாள் : 20 செப்டம்பர் 2021 12:27

சென்னை:

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய தீர்மானத்தை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சட்டவிரோதம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

அதிமுகவில் புதிய பதவி நியமனங்கள் மேற்கொள்ளத் தடை விதிக்கக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்து பொதுக்குழு, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சொத்து வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, தற்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி இணைந்து பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டி, பொதுச் செயலாளர் பதவியை நீக்கித் தீர்மானம் நிறைவேற்றினர்.

பொதுச் செயலாளர் பதவியை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது கட்சியின் விதிகளுக்கு முரணானது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு முரணானது.

கட்சியில் தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய இரட்டைத் தலைமையை உறுப்பினர்கள் விரும்பவில்லை.

2014 அக்டோபரில் நடத்தப்பட்ட உட்கட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைந்து விட்டதால், உட்கட்சித் தேர்தலை நடத்த அதிமுகவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு 2020 ஆகஸ்ட் மாதத்தில் மனு அளித்தேன்.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கு பதில் அளித்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், விரைவில் தேர்தல் நடத்துவதாக உறுதியளித்தனர். ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை.

கட்சி விதிகளுக்கு முரணாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள புதிய விதிகளின்படி செயல்படக் கட்சிக்குத் தடை விதிக்க வேண்டும். பழைய விதிகளின்படி கட்சி செயல்பட உத்தரவிட வேண்டும். மேலும், கட்சியில் புதிய நியமனங்கள் மேற்கொள்வதற்கு அவைத் தலைவர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத் தடை விதிக்க வேண்டும், என்று சூரியமூர்த்தி மனுவில் தெரிவித்திருந்தார்.

ஐகோர்ட் உத்தரவு

இந்த மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற அளித்த உத்தரவின் பேரில்,

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களின் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இன்று இறுதிகட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய தீர்மானத்தை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சட்டவிரோதம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட கட்சியால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் எடுத்த முடிவை தேர்தல் ஆணையம் ஏற்றதில் தவறில்லை எனக் கூறி, ஓபிஎஸ், இபிஎஸ்ஸின் பதவிகளுக்கு எதிரான வழக்கு முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோருக்கு சாதகமாகியுள்ளது.

அதிமுகவை கைப்பற்ற சசிகலா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில்,