3 வயது ஆண் குழந்தை கடத்தல்: புகார் அளித்த 4 மணி நேரத்தில் நாக்பூரில் மீட்ட சென்னை அம்பத்தூர் போலீசார்

பதிவு செய்த நாள் : 19 செப்டம்பர் 2021 18:44

சென்னை, செப். 19

சென்னை, அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் 3 வயது ஆண் குழந்தையை கடத்திய பெண் உள்பட இருவர் வடமாநிலம் தப்பிச் சென்றபோது அவர்களை 4 மணி நேரத்தில் போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மிதிலேஷ் (வயது 23). இவரது மனைவி மீராதேவி. இவர்களுக்கு விஷ்ணு (5 வயது), ஷியாம் (வயது 3) என்ற 2 மகன்கள் உள்ளனர். மிதிலேஷ் சென்னை, பட்டரவாக்கம், மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கணவன், மனைவி இருவரும் பட்டரவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இன்று இருவரும் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த 3 வயது மகன் ஷியாமைக் காணவில்லை. அருகில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இவர்களது வீட்டின் மாடியில் வசித்து வந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஷிவ்குமார் மற்றும் மோனு ஆகியோர் குழந்தை விஷ்ணுவை கடத்திச் சென்றது தெரியவந்தது.

அது தொடர்பாக மிதிலேஷ் அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் புகார் அளித்தார். கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி மேற்பார்வையில் குழந்தையை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது. குழந்தையை அழைத்துச் சென்ற மோனு, ஷிவ்குமார் ஆகியோர் வேலை செய்த இடத்தில் விசாரித்த போது அவர்கள் அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது.  தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தியதில் இருவரும் குழந்தையை வடமாநிலத்திற்கு கடத்திச் சென்றிருக்கலாம் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். அதனையடுத்து வடமாநிலத்திற்கு செல்லும் ரயில்களின் விபரங்கள் பெற்றபோது, நேற்று 3 ரயில்கள் வடமாநிலத்திற்கு சென்றதும், இந்த 3 ரயில்களின் பயணிகள் விவரங்கள் பெற்றதில், எதிரிகள் குழந்தையுடன் வடமாநிலம் செல்லும் ரயிலில் சென்றதும் உறுதியானது. அதனையடுத்து தனிப்படையினர் துரிதமாக செயல்பட்டு நாக்பூர் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு குழந்தை கடத்தப்பட்டது குறித்து தகவல் தெரிவித்தனர். மேலும் குழந்தைகளின் புகைப்படத்தையும் வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தனர்.

அதனையடுத்து நாக்பூர் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் குழந்தையுடன் வந்த ஷிவ்குமார், மோனு ஆகிய இருவரையும் நேற்று மாலை 5.30 மணியளவில் கைது செய்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். அதனையடுத்து அம்பத்துார் தனிப்படை காவல் குழுவினர் மீட்கப்பட்ட குழந்தை மற்றும் கைது செய்யப்பட்ட ஷிவ்குமார், மோனு ஆகிய இருவரையும் அழைத்து வர நாக்பூர் விரைந்துள்ளனர். குழந்தை கடத்தப்பட்டதாக புகார் வந்த 24 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட அம்பத்துார் தனிப்படை போலீசாரை கமிஷனர் சங்கர்ஜிவால் வெகுவாக பாராட்டினார்.