ரயில்களில் பயணம் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு ஐஜி கல்பனா நாயக் தலைமையில் விழிப்புணர்வு முகாம்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2021 19:00

சென்னை, செப். 14–

ரயில்களில் பயணம் செய்வது குறித்து கல்லூரி மாணவர்களுக்கு ரயில்வே ஐஜி கல்பனா நாயக் தலைமையில்  விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.

கல்லூரி மாணவர்கள் ரயிலில் பயணம் செய்யும் போது படிக்கட்டில் தொங்கியபடி செல்வதால் விபத்துக்கள், உயிரிழப்புக்கள் நடக்கின்றன. ரயில்களில் பயணம் செய்வதற்கு அரசு சில வழிகாட்டு நெரிமுறைகளை அறிவித்துள்ளது. அதனை கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டும் என்பது குறித்து கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நேற்று ரயில்வே போலீசார் சார்பில் நடத்தப்பட்டது. தமிழக ரயில்வே கூடுதல் டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு ரயில்வே ஐஜி கல்பனா நாயக் தலைமை தாங்கினார். மற்றும் டிஐஜி ஜெயகவுரி, சென்னை ரயில்வே எஸ்பி இளங்கோ, திருச்சி ரயில்வே எஸ்பி அதிவீரபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஐஜி கல்பனா நாயக் இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார்.

ரயில் பயணத்தின் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 200 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். கொரோனா தடுப்புக் கேடயங்களான முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவை குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மாணவர்கள் ரயிலில் ஏறியவுடன் உள்ளே சென்று அமர்ந்து கெண்டு அல்லது நின்றுகொண்டு பயணம் செய்ய வேண்டும். எந்த காரணம் கொண்டும் படியில் நின்றுகொண்டும், தொங்கிக்கொண்டும் பயணம் செய்யக்கூடாது எனவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஓடும் இரயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது, தண்டவாளங்களை கவனக்குறைவாக கடக்கும் போது ஏற்படும் விபத்துகள் குறித்தும் எடுத்துக்கூறப்பட்டது. மேலும் மாணவர்கள் ரயிலில் தகராறில் ஈடுபடும் போது ரயில் பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் ஏற்படும் இடையூறுகள் குறித்தும், இதற்கு முன் மாணவர்கள் ரயிலில் தகராறில் ஈடுபட்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாகவும் மேற்கொண்டுள்ள கைது நடவடிக்கைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் ஏற்படும் பின் விளைவுகள் தொடர்பாகவும் மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் எடுத்துக்கூறப்பட்டது. ரயில் விபத்து மரணங்கள் குறித்த புகைப்படங்களும் மாணவர்கள் காண்பிக்கப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட ரயில் விபத்து மரணங்கள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்வே இன்ஸ்பெக்டர்கள் சென்ட்ரல், கொருக்குப்பேட்டை, பெரம்பூர் மற்றும் எழும்பூர் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பிரிசிடென்சி கல்லூரி முதல்வர் ராமன், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், இனிமேல் ரயில்களில் எவ்வித ஒழுங்கீனமான செயல்களிலும் ஈடுபடமாட்டோம் எனவும் உறுதியளித்தனர். 

ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் நடைபெறும் அனைத்து விதமான குற்ற நடவடிக்கை சம்பந்தமாக தகவலை தெரிவிக்க இருப்புப்பாதை காவல் உதவி மைய எண் 1512 மற்றும் தொலைதொடர்பு எண் 9962500500 அனைத்து பயணிகளுக்கும் தெரியும் வண்ணம் அனைத்து ரயில் நிலையங்களிலும், ரயில் வண்டிகளிலும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இரயில் பயணிகள் மற்றும் மாணவர்கள் மேற்படி எண்களை தொடாப்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் எனவும் ரயில்வே காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.