வெள்ளை மாளிகையில் நடைபெறும் குவாத் மாநாடு: மோடி கலந்து கொள்கிறார்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2021 12:31

வாஷிங்டன், செப்டம்பர் 14,

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் 2021 செப்டம்பர் 24-ஆம் தேதி நடைபெறும் குவாத் உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

இந்த மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் சுகா கலந்து கொள்ள உள்ளனர்.

கொரானா வைரஸ் தொற்றுக்கு பிறகு நேரடியாக கலந்து கொள்ளும் உச்சி மாநாடு முதன் முறையாக நடைபெற உள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பிடேன் வெள்ளை மாளிகையில் உச்சி மாநாட்டை நடத்த முன்வந்துள்ளார்.

இந்தத் தகவலை வெள்ளை மாளிகை பத்திரிகை தகவல் தொடர்பாளர் திங்களன்று வெளியிட்டுள்ளார்.

கொரானா வைரசுக்கு எதிரான போராட்டம், பருவ நிலை மாற்ற நெருக்கடிகள், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் கட்டுப்பாடற்ற சுதந்திரமான கடல் போக்குவரத்து ஆகியவை குறித்து நான்கு தலைவர்களும் நேரடியாக கருத்துப் பரிமாறிக் கொள்வார்கள் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி தெரிவித்தார்.