நியூயார்க் நகர இரட்டை கோபுர தகர்ப்பு நாள்: தலைவர்கள் அஞ்சலி

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2021 15:26

நியூயார்க், செப்டம்பர் 12,

20 ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரங்களை அல் கொய்தா பயங்கரவாதிகள் விமானம் மூலம் தகர்த்து சாய்த்த நாளான செப்டம்பர் 11ஆம் தேதி தலைவர்களும் அமெரிக்க பொதுமக்களும் உருக்கமாக அஞ்சலி செலுத்தினார்கள்.

இரட்டை கோபுரம் இருந்த இடத்தில் இதயத்தை உருக வைக்கும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பயங்கரவாதத் தாக்குதலில் இறந்தவர்களின் பெயர் ஒவ்வொன்றாக வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர்கள் புஷ், பில் கிளின்டன், ஒபாமா மற்றும் இன்றைய அதிபர் ஜோ பிடேன் ஆகியோர் துணைவியருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

முன்னாள் அதிபர் டிரம்ப் எந்த நிகழ்ச்சியிலும் பங்கு கொள்ளவில்லை.

இரங்கல் நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதிபர்கள் அனைவரும் அணிவகுத்து தங்கள் வலது கையை நெஞ்சின் மீது வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அமெரிக்காவின் எல்லா நகரங்களிலும் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர் நினைவாக பிரார்த்தனை நிகழ்வுகள்  இடம் பெற்றன.