பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் மாரியப்பன் - முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு

பதிவு செய்த நாள் : 31 ஆகஸ்ட் 2021 18:36

சென்னை

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இன்று நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதல் இறுதிச்சுற்று போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் உள்பட மூன்று இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். 

மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

அமெரிக்க வீரர் சாம் கிரேவ் மற்றும் மாரியப்பன் ஆகியோர் சமமான உயரம் தாண்டியதால் மேலும் 3 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. இதில் அமெரிக்க வீரர் 1.88 மீட்டர் உயரம் தாண்டி முதல் இடம் பிடித்தார். 

மாரியப்பன் 1.86 மீட்டர் உயரம் தாண்டி 2-வது இடம் பிடித்தார்.

மாரியப்பன் ஏற்கனவே பிரேசில் நாட்டில் நடைபெற்ற ரியோ பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிங்ராஜ் அதானா வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு

பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் மற்றும் துப்பாக்கி சுடுதலில் இன்று பதக்கம் வென்றுள்ள இந்திய வீரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.