பாராலிம்பிக்ஸ் போட்டி- ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கப் பதக்கம் வென்றார்

பதிவு செய்த நாள் : 30 ஆகஸ்ட் 2021 16:55

டோக்கியோ

டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அண்டில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்.

பாரா ஒலிம்பிக்கில் சுமித் அன்டில்லின் உலக சாதனையால் நாடே பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஈட்டி எறிதல் எஃப் 64 பிரிவில் கலந்துகொண்ட இந்திய வீரர் சுமித் அண்டில் முதல்முறை 66.95 மீ. தூரம் வீசினார். இது ஓர் உலக சாதனையாகும்.

2-வது முறை அதை விடவும் அதிகத் தூரம் வீசி மற்றொரு உலக சாதனையை நிகழ்த்தினார். 68.08 மீ. ஒரே போட்டியில் மூன்று முறை உலக சாதனை படைத்து அனைவர் கவனத்தையும் சுமித் அண்டில் ஈர்த்துள்ளார்.

5-வது முயற்சியில் 68.55 மீ. தூரம் எறிந்து மூன்றாவது முறையாக உலக சாதனை படைத்தார்.

இந்தப் போட்டிக்கு முன்பு அதிகபட்சமாக 62.88 மீ. தூரம் மட்டுமே அவர் வீசியிருந்தார். இதனால் அவருடைய இன்றைய ஆட்டத்திறன் அனைவராலும் வெகுவாக ஆச்சர்யத்துடன் பார்க்கப்பட்டது.

இதையடுத்து இறுதிச்சுற்றின் முடிவில் சுமித் அண்டில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற 2-வது இந்தியர் சுமித் அண்டில்.

இதற்கு முன்பு, மகளிருக்கான 10 மீ. ஏர் ரைபிள் போட்டியில் 249.6 புள்ளிகளுடன் தங்கம் வென்று சாதனை படைத்தார் இந்தியாவின் அவனி லெகாரா.

டெல்லி ராம் ஜஸ் கல்லூரியில் சுமித் அண்டில் மாணவர்.

விபத்தில் காலை இழப்பதற்கு முன்பு சுமித் அண்டில் மல்யுத்தம் பயின்று வந்தார். அவரது கிராமத்தினர் வேறு ஏதாவது துறைக்கு மாறும்படி கேட்டுக் கொண்டனர் கிராமத்தவர் கோரிக்கைக்கு ஏற்ப அவர் ஈட்டி எறிதலில் பயிற்சி பெற்றார் இப்பொழுது ஈட்டியெறிதலில் பாராலிம்பிக் தங்கம் வென்றுள்ளார்.