தமிழால் முடியும்- தாய்மொழியில் மருத்துவக் கல்வி

பதிவு செய்த நாள் : 05 ஆகஸ்ட் 2021

தமிழால் முடியும்- 

தாய்மொழியில் மருத்துவக் கல்வி

இது அறிவியல் நூற்றாண்டு. அண்மைக் காலத்தில் அறிவியல், பல துறைகளிலும் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. அறிவியல் துறையிலும், தொழில்நுட்பத் துறையிலும் வளர்ச்சி பெற்ற நாடுகள்தான் இன்றைய மனித சமுதாயத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் வலிமையைப் பெற்றள்ளன என்பதை நாம் அறிவோம். உலக நாடுகளோடு இணைந்து நமது நாடும் வளர்ச்சியை வல்லமையைப் பெற வேண்டுமானால் நாமும் அந்த அறிவியல் ஆற்றலைப் பெற வேண்டும்.  அறிவியல் ஆற்றலும் அறிவியல் கல்வியும் பெற மக்களின் முதல் தேவை மனத்தின் உந்து சக்திதான். இச்சக்தியை அளிப்பதில் மொழிக்கு முக்கியப் பங்கு உண்டு .

வளர்ந்து வரும் அறிவியலுக்கு ஈடுகொடுத்து அதற்கான சொற்களைத் தானே உருவாக்கிக் கொடுக்கும் தன்மையும், சிறப்பும் தமிழ் மொழிக்கு உண்டு. ஏனெனில், தமிழ் தொன்மை வாய்ந்த மொழி.  தமிழின் இலக்கிய இலக்கணங்களின் பெருமையையும், சிறப்பையும் உலகம் அறியும்.

நமது முன்னோர்கள் தமிழில் இலக்கியம் அல்லாத மற்ற துறைகளான மருத்துவம், அறிவியல், வானியல் ஆகிய அனைத்தையும் கவிதைகளில் ஆக்கி வைத்தார்கள்.  சங்கப் பாடலாக இருந்தாலும், சித்தர் பாடலாக இருந்தாலும் புலிப்பாணி மருத்துவ நூலாக இருந்தாலும், அகத்தியர் நாடி சோதிடமாக இருந்தாலும் அனைத்தும் கவிதை உருவில் தான் இயற்றப்பட்டன.  இந்தக் கவிதை நூல்கள் அனைத்திலும் இன்றைய அறிவியல் கருத்துக்களுக்கு சமமான சொற்கள் ஏராளமாக இருக்கின்றன.

சமுதாயத்தில் உள்ள எந்த ஒரு மனிதனும் தன் குழந்தைப் பருவம் தொட்டு தன் தாய்மொழியில்தான் சிந்திக்கிறான். அந்தச் சமுதாயத்துடன் தொடர்பு கொள்கிறான். அதன் மூலம் அவனது செய்தித் தொடர்பு அனைத்துமே தாய்மொழி வழியே அமைந்து விடுகிறது. இதுதான். இயல்பானது; எளிதானது; சிறந்தது.

‘தாய்மொழியில் அறிவியலைப் படிக்கும் பொழுது அந்நாட்டுப் பொருளாதாரமும் பகுத்தறிவும் பண்பாடும் முன்னேறும்,” என்ற பெர்ட்ராண்ட் ரசலின் கருத்தும் கருதத்தக்கது. தாய்மொழி வழி அறிவியல் கற்பிக்கப்படின், அறிவியல் கல்விக்கும், சமூகத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு ஏற்படும். இது அந்நாட்டு மக்களின் வாழ்க்கையைச் செம்மையாக்க உதவும் என்பதில் ஐயமில்லை. அறிவியல் வளர்ச்சியுற்ற நாடுகள் எல்லாம் தத்தம் நாட்டுமக்களுக்கு அவரவர்தம் தாய்மொழியில் தான் அறிவியலை விவரித்துச் சொல்கின்றன.

எடுத்துக்காட்டாக, ஜப்பானில், ஜப்பானிய மொழியே பயிற்சி மொழி. ஆங்கிலம் விருப்பப் பாடமாக உயர்நிலைப் பள்ளிகளிலும், கட்டாயப் பாடமாகக் கல்லூரிகளிலும் மொழிப் பயிற்சிக்காகக் கற்பிக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியிலேயே உயர்தர அறிவியல் கற்பிக்கப்படுகிறது. ரஷ்யாவிலும் பல மொழி பேசும் மக்கள் உள்ளார்கள். அவரவர் பேசும் மொழிகளே கல்லூரிகளில் பயிற்சி மொழியாக உள்ளன. மொழிப் பயிற்சிக்காக ரஷ்ய மொழியையும் வேறோர் ஐரோப்பிய மொழியையும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். சுவீடனில் சுவீடிஸ் மொழியே பயிற்சி மொழி. ஜெர்மனியிலும் ஜெர்மனியே பயிற்றுமொழி.

இதைக் கண்ணுறும் பொழுது, அறிவியல் வளர்ச்சி பெற்ற நாடுகளெல்லாம் தத்தம் நாட்டு மக்களுக்கு அவர்தம் தாய்மொழியிலேயே அறிவியலை விவரித்துச் சொல்கின்றபோது நாம், நமது வாழ்வு உயர வளர் தமிழில் அறிவியல் கற்க வேண்டும் என்று கருதுவதில் தவறில்லை .

அறிவியல் கருத்துக்களைத் தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணம் சென்ற நூற்றாண்டில்தான் தோன்றியது. அதே காலத்தில் தமிழிலும் அறிவியல் நூல்கள் வெளிவந்தன. அப்போதுதான் புதிய அறிவியல் சொற்களைப் பயன்படுத்தும் தேவை ஏற்பட்டது. மருத்துவ இயலைத் தமிழால் கூற இயலுமா என்ற ஐயப்பாடு ஒரு சாராரிடையே உள்ளது. இது தேவையற்றது. ஏனென்றால், மருத்துவச் சொற்களை உருவாக்கத் தமிழால் முடியும். நமது தமிழ் இலக்கியத்தால் முடியும். தமிழ் இலக்கியமே ஆழமான சுரங்கம். சுரங்கத்தைத் தோண்டினால் தான் நமக்குப் பொன்னும் மணியும் கிடைக்கும்.

தமிழ் இலக்கியச் சுரங்கத்தில் வள்ளுவர் பெருமானின் திருக்குறள் தனிச்சிறப்பு பெற்றது. திருக்குறள் பொன்னையும், மணியையும் அள்ளி அள்ளித் தரும் அற்புதச் சுரங்கம். திருவள்ளுவர் தலைசிறந்த மருத்துவ அறிஞர் என்பதற்கு அவர் செய்த மருந்து அதிகாரம் ஒன்று போதுமே! நோயைப் போக்க முக்கியமானது நோயிற்கான காரணத்தை அகற்றுவது (To treat a disease fundamentally - remove the etiology”) என்று மருத்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள். இந்த Etiology -  என்பதற்கு என்ன தமிழ்ச் சொல் என்றால்,

“நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்”

என்ற குறளில் வரும் ‘’நோய்நாடி” என்ற சொல்லே பொருத்தமான சொல். இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு, நீரிழிவு, வயிற்றுப்புண், தலைவலி போன்ற நோய்களுக்கான மூல காரணம் பெருமளவில் உள்ளத்தைச் சார்ந்ததே ஆகும். இதனைத் தவிர்க்க வள்ளுவர் கூறும் மருத்துவம் “எச்சரிக்கையாய் இரு” என்பதுதான்.

‘’வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்”

இது நோய் வராமல் காக்கும் தடுப்புமுறை. கோபம் கொள்ளாதே - இரத்தக் கொதிப்பு வராது. அளவறிந்து உண். உடல் பருமனாகி கொலஸ்டிரால் அதிகமாகி மாரடைப்பு போன்ற பல நோய்கள் வராது. மாறுபாடு இல்லாது உண்டி மறுத்து உண். ஒவ்வாமையை ஓட வைக்கலாம். இதுதான் வள்ளுவரின் மருத்துவம். குறளில் மருந்தைப் பற்றி நேரிடையாக எங்கும் கூறவில்லை. ஆனால், யாக்கைக்கு - உடம்புக்கு எனக் குறிப்பிட்டு, மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு என்கிறார். குறளைப் போலவே நிகண்டு, பதினெண் கீழ்க்கணக்கு போன்ற நூல்களிலும் பல மருத்துவச் செய்திகள் அறியக்கிடக்கின்றன. கம்ப ராமாயணத்தில் உடலில் ஏற்பட்ட சீழ்க்கட்டிக்கான அறுவை மருத்துவம் எவ்வாறு இருந்தது என்பதை,

“உடலிடைத் தோன்றிற்று ஒன்றை

அறுத்து அதன் உதிரம் ஊற்றிச்

சுடலுறச் சுட்டு வேறோர்

மருந்தினால் துயரம் தீர்வீர்’’

எனவரும் இப்பாடலில் சீழ்க்கட்டிக்கான அறுவை மருத்துவம் நான்கு நிலைகளில் நடைபெற்றதாகக் கூறப்படுவதைக் காணலாம்.  கட்டியை அறுத்தல், கெட்ட குருதியையும் சீழையும் அகற்றல், கட்டி தோன்றிய பகுதியைச் சுடுதல் - மருந்திடல் என்பன. இதேபோல் கம்பருக்கு முன் ஆழ்வார் பாடல்களும்,

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்

மாளாத காதல் நோயாளன்

என்று இதே அறுவை மருத்துவச் சிகிச்சைக் கருத்தைத் தெளிவுறுத்துகிறது. பெரிய புராணத்தில், கல்வி அறிவில்லாத வேடன் கண்ணப்பன் காளத்திநாதனான இறைவனின் கண்ணிலிருந்து விழும் குருதி கண்டு பதறி மூலிகை மருத்துவங்களையெல்லாம் முறையே செய்த பின்னும் குருதியொழுக்கு நில்லாமையால் வேறு என்ன செய்யலாம் என்றெண்ணிய போது,

‘உற்றநோய் தீர்ப்பது ஊணுக்கு

ஊணெனும் உணரமுன் கண்டார்”

எனவும், அம்முறையிலேயே தன் கண்ணைப் பறித்து இறைவனின் கண்ணில் அப்பிக் குருதியொழுக்கை நிறுத்தினாரெனவும் பெரிய புராணத்தில் காண முடிகிறது. இவைகளெல்லாம் தமிழ் இலக்கியம் தந்த மருத்துவக் குறிப்புகள். இவை அன்றி தமிழ் மருத்துவம் செய்தவர்களும் தேக தத்துவ நூல், நோயைப் பற்றிய நூல், நோய் அணுகாவிதி, இரண மருத்துவம், உணவுப் பொருள் மருத்துவ நூல், விஷங்களை நீக்கும் நஞ்சு நூல், ஞானசாகர நூல், ஜோதிடம் முதலிய நூல்களை எழுதி மாணவர்களுக்கு 12 ஆண்டுகள் பாடம் சொல்லித் தந்த பிறகே மருத்துவம் புரிய அனுமதித்தனர்.

இவ்வாறு படித்த தமிழ் மருத்துவர்கள் நோயாளரைச் சோதித்தறியும் பொழுது நோய் வந்ததற்கான காரணத்தைக் காண்பார்கள். பலதரப்பட்ட மக்களுக்கு அவர்தம் நிலத்தியல்பு, உணவு, கல்வி அறிவு, செய்தொழில் ஆகியவற்றைக் கவனித்து அறிந்த பிறகு,

“நாடியால் முன்னோர் சொன்ன நல்லொலி பரிசத் தாலும்

நீடிய விழியி னாலும் நின்றநாக் குறிப்பி னாலும்

வாடிய மேனியாலும் மலமொடு நீரினாலும்

சூடிய வியாதி தன்னைச் சுகமுடன் அறிந்து பாரோ”

என்றபடி கை நாடி, குரலொலி, உடற்குடறியத் தொடுதல், கண், நாக்கு, உடம்பின் நிறம், நீர், மலம் இந்த எட்டு விதச் சோதனைகளையும் செய்த பின்பே மருந்து கொடுக்கப்பட்டது. இத்தமிழ் வழி மருத்துவம் பதினெண்கீழ்க் கணக்கிலும்  நிகண்டுகளிலும் அறியப்படுகிறது.

தமிழர் மருத்துவம் - ஓலைச் சுவடியில்

அச்செழுத்துக்கள் உருவாகாத கால கட்டத்தில் வழக்கிலிருந்த மருத்துவக் கருத்துக்களைத் தமிழர்கள் ஓலைச் சுவடிகளில் பாடல்வடிவில் பதிவு செய்துள்ளனர். மருத்துவம், கணிதம் பற்றிய அரிய கருத்துக்களும் பாடல் வடிவிலேயே இடம் பெற்றுள்ளன. ஆகவே, தமிழின் அறிவியல் எழுதுமுறை வரலாற்றை ஓலைச் சுவடிகளிலிருந்தே தொடங்க வேண்டும். டேனிஷ் மிஷனரியாகத் தமிழகம் வந்த சீகன் பால்கு (கி.பி. 1700) குறிப்புகள் மூலம் தமிழகத்தில் நிலவிவந்த மருத்துவமுறையையும் தமிழர்களிடம் இருந்த மருத்துவத் தொழில்நுட்பத்தையும் ஓலைச் சுவடிகளிலிருந்து நூலாக்கம் செய்துள்ளனர் என்பதை உறுதி செய்ய முடிகின்றது. மருத்துவம் தமிழ் ஆக்க முயற்சியில் தமிழில் எழுதப்பட்டமையும், அதன் இரண்டாவது கட்டமாக முறையான கலைச் சொல்லாக்கப் பணி நிறுவன ரீதியாக நூற்படைப்பு முயற்சியும் ஏறத்தாழ 150 ஆண்டு வரலாற்றுப் பின்னணியில் காணப்படுகின்றது.

விடுதலைப் போராட்டம், அரசியல் களத்தில் இந்தியாவினுடைய மொழிகள், பண்பாடுகள், சமயங்கள், தத்துவங்கள், கலை, இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றின் வேர்களைத் தேடத் தொடங்கியது. மேலைநாட்டு அறிவியல், கலை, தத்துவம், சமயம் பரப்புரை ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுபட வேண்டுமானால் மண்ணின் வேர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அனைத்திந்திய நிலையில், இத்தகைய போக்கு நிலவும் போது, தமிழகத்தில் ஒரு வகையான மறுமலர்ச்சி எழுந்தது. வைதீகப் பிறவியிலிருந்தும் பிராமணப் பிடியிலிருந்தும் தமிழகத்தை மீட்க வேண்டும் என்ற சிந்தனையும் உருவெடுத்தது. அதன் முதல் கட்டம்தான் திராவிட மொழிகளைச் சமஸ்கிருதத்திலிருந்து மீட்பது. இதற்கான செயலாகத் திராவிட மொழிகளுக்குள் தமிழுக்கு ஓர் இடத்தைக் கொடுத்துக் கால்டுவெல் திராவிட மொழியியலுக்கு வித்திட்டார். அவர் இட்ட வித்திலிருந்து திராவிட அரசியலும், தமிழின் தனித்துவமும் கிளைத்தெழுந்தன. கால்டுவெல் அவர்களே தமிழின் வரலாற்றினை அறிய பின்நோக்கிச் செல்லச் செல்ல சமஸ்கிருத சொற்களின் எண்ணிக்கை தமிழ் சொற்களஞ்சியத்தில் வெகுவாகக் குறைந்துள்ளன என்று குறிப்பிடுகிறார். (டாக்டர் அரங்கன்)

இடைக்காலத்தில் சமயம் தொடர்பாகவும், தத்துவம் தொடர்பாகவும் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழ் நிறைய சொற்களைக் கடனாகப் பெற்றது. புதிய சொற்களின் உதவியினால் தமிழில் ஸ, ஜ, ஷ போன்ற கிரந்த எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சமஸ்கிருத மொழியின் தாக்கத்தால், தமிழில் ஏற்பட்ட மாற்றங்கள் மொழியின் தூய்மையைப் பாதித்துவிட்டதாகக் கருதப்படுகிறது. மொழி மாற்றங்கள் கட்டுப்படாமல் போனால் மொழி சிதைந்துவிடும் என்ற உணர்வு மொழிப் பாதுகாப்பு என்ற நடவடிக்கைக்குப் பொதுவாக நம்மை இட்டுச் செல்லும். இச்சூழல் தான் தூய தமிழ் இயக்கத்திற்கான தோற்றம். கால்டுவெல் விதைத்த விதை ஒரு இயக்கமாகப் பின்னர் வளர்ந்தது. நாம் கால்டுவெல்லை நேரடியாகத் தொடர்புபடுத்த இயலாவிட்டாலும் அவருடைய சிந்தனையும், அவர் தமிழ்பால் கொண்டிருந்த நட்பும் தமிழ் மொழியின் தனிச்சிறப்புகள் குறித்து அவர். வெளியிட்ட கருத்துகளும் பின்னால் தோன்றிய தூய தமிழ் இயக்கத்திற்குக் கருவாக அமைந்தன என்று கூறலாம். இங்கு மொழி இயல் சிந்தனையும், அரசியல் சமூகச் சூழல்களும் மொழி சார்ந்த இயக்கத்திற்கு வித்திட்டன. தமிழில் சொற்களை உருவாக்குகின்ற போக்கையும், தமிழ்மூலம் அனைத்து அறிவியல் செய்திகளையும் வெளியிட முடியும் என்ற தன்னம்பிக்கையும் மேலே சுட்டிக்காட்டிய சூழல்கள்தாம் உருவாக்கின என்பது மிகையான கூற்றல்ல.

தமிழில் முதல் அறிவியல் நூல்

இன்று நாம் படித்துக் கொண்டிருக்கின்ற அறிவியல், வாழ்வியல் படிப்பு பிரிட்டிஷாரால் அறிமுகப்படுத்தப் பட்டதாகும். 1830-களில் அதற்கான தொடக்கம் தமிழகத்திலும், இலங்கையிலும் ஏற்பட்டது. இரேனியுசு பாதிரியார் பூமி சாஸ்திரம் என்கிற நூலைத் தமிழர்களுக்கு அறிவுண்டாகும்படி, இந்துமத புராணக் கருத்துக்களுக்கு மறுப்பாக எழுதி, 1832இல் வெளியிட்டார். இப்பாதிரியாரே, பூமி சாஸ்திரத்திலே குறிக்கப்பட்டிருக்கிற நாமங்களின் அட்டவணை சொற்பெயரில் கலைச் சொற்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார். 1849இல் இலங்கையில் பால கணிதம் என்ற நூல் வெளியாயிற்று. 1885இல் ‘Algebra’ என்பது “இயற்கணிதம்?” எனத் தமிழாக்கப்பட்டு வெளிவந்தது. ‘’வீசகணிதம்” என்ற இன்னொரு நூல் இதே ஆண்டில் வெளிவந்தது. இதுவும் “Algebra”-வைப் பற்றியதுதான். இயற்கணிதம், வீச கணிதம் என்பதன் பின்புலத்தில் தமிழ், வடமொழிப் பார்வை இருப்பதை அறியலாம்.

இதன்பின் டாக்டர் ஃபிஷ்கிறீன் என்பவரின் மருத்துவக்கல்வி குறித்த செயல்கள் நமக்கு பிரமிப்பை ஊட்டுகின்றன. இவர் முயற்சியில், இலங்கைத் தமிழர்களுடன் எழுதிய நூல்கள் “மனுஷ அங்காதிபாதம், இரண வைத்தியம், கெமிஸ்தம், மனுஷ சுகரணம்” போன்ற வடமொழிச் சொல் பெயருடைய நூல்கள். இதுபோல வடமொழிக் கலைச் சொற்களையே தம் நூல்களில் மிகையாகப் பயன்படுத்தினார். (இது குறித்து விரிவாகப் பின்னர் காண்போம்.)

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கில கலாச்சார மாற்றம் ஆங்கில மொழி எதிர்ப்பு முதலானவை தோன்றின. விடுதலை வேட்கை கொண்ட இந்தியர்களுக்கு ஆங்கிலேயர் மீது தோன்றிய வெறுப்புணர்ச்சி அவர்தம் மொழியைப் பயன்படுத்துவதில் வெளிப்பட்டது. இந்நிலையில், ஆங்கில மொழி ‘எதிர்ப்பும், தமிழ், சமஸ்கிருத மொழிகளுக்கு ஆதரவும் பெருகின. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டது.

டாக்டர் கிறீனைத்தொடர்ந்து தமிழகத்தில் மேலை மருத்துவத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்து ஏழு நூற்கள் எழுதியவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் டிரசராக வேலை பார்த்த மா. ஜகந்நாத நாயுடு. இவருடைய நூலிலும் வடமொழிக் கலைச் சொற்கள் மிகுந்து காணப்படுகின்றன. நூற்களின் பெயரும் வடமொழிச் சொல்லாக உள்ளது. எ.கா.: பைஷ ஜகல்பம், சாரீர வினாவிடை, பிரசவ வைத்தியம். இவர் நூலில் கலைச்சொல் பட்டியலில் நல்ல தமிழ்ச் சொல் இருந்தாலும், வடமொழிச் சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது அக்காலத்திய சொல்லாட்சியை அறிவுறுத்துகின்றது. இதற்கான காரணங்களை ஆராயும் பொழுது, இவர்களுக்கு மணிப்பிரவாள நடையிலே தமிழ் பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம். அக்கால கட்டத்தில் வடமொழியே அறிவியல் மொழி என எழுதாத சட்டமாக இந்தியா முழுவதும் நிலவியது. மேலும், மேலை நாட்டினருக்கு அடுத்ததாக - ஆங்கிலத்தில் தான்கற்ற அறிவியல் துறைகளைத் தமிழில் அறிமுகப்படுத்திய மேல்மட்டத் தமிழர்களும் பெரிதும் வடமொழிச் சொற்களையே கலைச் சொற்களாகக் கையாண்டனர். அத்துடன் தொடக்க காலத்தில் அறிவியல் நூல்களை எழுதியவர்களில் பெரும்பான்மையோர் வடமொழி கற்றவர்களாகவே இருந்தமையால் கலைச்சொல் உட்பட மொழிநடையில் வடமொழித் தாக்கம் மிகுந்து காணப்படுகிறது. இந்நூலாசிரியர்களின் காலத்திற்கு முன்பே ஃபெப்ரிஷியஸ் (1778), இராட்லர் (1830), வின்சுலோ (1845) ஆகியோரின் அகராதிகள் வெளிவந்துவிட்டன.

இதேபோல் பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாகச் சுகாதார வாழ்விற்குப் பலவித இடையூறுகள் ஏற்பட்டுப் பல நோய்களும், சமூகப் பிரச்சினைகளும் பெருவாரியாகப் பரவின. இங்கு தோன்றிய நூல்கள், உடல் தூய்மை இன்மையைக் கருத்திற் கொண்டு வெளிவந்தன. அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. (எ.கா. 1869இல் சுகாதார விளக்கம்). இதன் பொருள் அட்டவணையில் ஆகாயம், போஜனம், தேகசுத்தம், வஸ்திரம், வாசஸ்தலங்கள் என்ற வடசொற்கள் மிகுந்து காணப்படுகின்றன. இதுபோலவே புதிய கண்டுபிடிப்புகளான எந்திரங்களைப் பற்றிய “ஆயில் என்ஜின்’’, ‘’மோட்டார் ரிப்பேர் இரகசியம்” போன்ற நூற்களும், வடசொற்களும், ஆங்கிலச் சொற்களும் கலந்து எழுதப்பட்டன.

தனித்தமிழில் முயற்சி

இந்நிலையில் தனித்தமிழ் ஆதரவாளர்கள், அமைப்புகள் வாயிலாகக் கலைச்சொல்லாக்க முயற்சிகளை மேற்கொண்டனர். அரசு கலைச்சொல் பட்டியலுக்கு மாற்றாக, பா. வே. மாணிக்கநாயக்கர், காழி. சிவ. கண்ணுசாமி இருவரும் தமிழ் அறிவியல் சொற்கள் பலவற்றைச் செந்தமிழ்ச் செல்வி வாயிலாக (தொகுதி - 10, 1932, 33) வெளியிடத் தொடங்கினர். தமிழ் அளவை நூற் சொற்களை மா. பாலசுப்பிரமணியம் செந்தமிழ் செல்வியில் (தொகுதி - 13, 14-1935) வெளியிட்டார். 1932-இல் வெளியான அரசுக் கலைச்சொல் பட்டியலில் காணப்படும் குறைகளை நீக்கி, எளிதில் புரியும் வகையில் தமிழ்ச் சொற்களைக் கொண்ட கலைச்சொல் பட்டியல் ஒன்று தயாரிக்கும் பணிக்காகச் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் ஒரு கலைச்சொல் குழுவை 01.10.1934-இல் அமைத்தது. இதன் முதற் கூட்டம் 29.09.1935 அன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. அந்நிலையில் இக்கழகத் தலைவராக இசைத் தமிழ்ச் செல்வர் தி. இலக்குமணப் பிள்ளை செயல்பட்டார். அறிவியல் துறைச் சொற்கள் ஒன்பது நாட்கள் ஆராயப்பட்டன. இதன் பயனாக 20.09.1936-இல் கலைச் சொல்லாக்க மாநாடு சென்னையில் நடைபெற்றது. இம்மாநாட்டை ஒட்டி பலதுறை சார்ந்த 5,300 கலைச் சொற்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது.

தனித்தமிழ் இயக்கத்தில் ஈடுபட்டோர்களால் இக்காலத்தில் தனித்தமிழ்க் கலைச்சொற்கள் உருவாக்கப்பெற்றன. ஏனெனில் பிறமொழிகளினின்றும் கடன் வாங்கித் தமிழ் மொழியை உருமாற்றி உயிரற்றதாக்கக் கூடாது. பிறமொழிஓசை தமிழ்மொழி ஓசைக்கு மாறுபட்டது. தமிழ் இலக்கணத்திற்கும் தமிழ் இசைக்கும் பிறமொழி ஒத்து வராது என்பது இவர்கள் கருத்து. எனவே, தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துதல், இலக்கியச் சொற்களை நடைமுறைக்குக் கொண்டுவருதல், சமஸ்கிருத ஆங்கிலச் சொற்களை (குறிப்பாக சமஸ்கிருதச் சொற்களை) புறக்கணிப்பது ஆகியவை இவர்களின் நோக்கமாக இருந்தது.

இதன் விளைவாக அக்கால நூலாசிரியர்களும் கட்டுரை ஆசிரியர்களும் பல தமிழ்ச் சொற்களைப் புதிதாக ஆக்கிக் கட்டுரை படைத்தனர். எ.கா.: Aluminium - சீனாயம், Calcium - நீறியம். இவை புதிதாகப் படைக்கப்பட்ட வேதியல் சொற்கள். இவ்வாறு உலகப் பொதுச் சொற்களுக்கும் கூடத் தமிழ்ச் சொற்களைத் தேடும் முயற்சியில் அக்கால ஆசிரியர்கள் பலரும் ஈடுபட்டனர்.  இதன் பயனாக, சரீர சாஸ்திரம், ‘உடலியல்’ ஆயிற்று. பிராண வாயு, ‘உயிர்வளி’ ஆயிற்று. (டாக்டர் இராம சுந்தரம் )

1936இல் வெளிவந்த கலைச்சொல் பட்டியலின் மறுபதிப்பு 1938-இல் வெளிவந்தது. இதில் கூடுதலாக சுமார் 10,000 வேளாண்மைச் சொற்கள் சேர்த்து வெளியிடப்பட்டது. அப்போதைய சென்னை மாகாண அரசு, தமிழ்ச்சங்கம் தயாரித்த இக்கலைச்சொல் பட்டியலைப் பள்ளிகளில் பயன்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது. இது தமிழ் இயக்கத்தினருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. இம் மறுபதிப்புப் பட்டியலுக்கு இராசாசி முன்னுரை வழங்கினார். இதில் அவர், ‘’பழைய கலைச்சொற்களைத் தேடித் திரட்டுவதும் புதிய சொற்களை ஆக்குவதுமான இந்தப் பணியை, தனித்தமிழ் இயக்கத்துடன் கலந்து கலவரமுண்டாக்கிக் கொள்ளுதல் தவறாகும். தமிழில் கலந்துகொள்ளும் தன்மைகொண்ட சமஸ்கிருத மொழிகளைக் காரணமின்றி வெறுத்தல் கூடாது. தனித்தமிழ் வெறியும், வடமொழி மோகமும் - இரண்டும் இந்தத் தமிழ்ப் பணிக்குத் தடைகளாகும்,” என்று எழுதி இருந்தார்.

தமிழில் மருத்துவ, பொறியியல் நூல்கள்

1959-இல் கல்லூரிகளில் தமிழைப் பயிற்று மொழியாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. 1960-இல் அன்றைய கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியத்தின் முயற்சியால் கல்லூரிகளில் தமிழ், பாட மொழியாயிற்று. இப்படிப்புகளுக்குத் தேவையான பாட நூல்களைத் தயாரிக்க தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் தொடங்கப்பட்டு, 1977 ஏப்ரல் முடிய பல்வேறு துறை சார்ந்த 663 நூல்களை வெளியிட்டது. இதில் 70 விழுக்காடு அறிவியல் சார்ந்தவையாகும். 10 நூல்கள் மருத்துவம் குறித்ததாகும். இது தவிர, கிறித்தவ இலக்கிய சங்கம் 1967-இலிருந்து 8 மருத்துவ நூல்களை வெளியிட்டுள்ளது. 1981-ஆம் ஆண்டு தஞ்சாவூரில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் தமிழ்த்துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இதன் வழியாக 15 மருத்துவ நூல்களும், 14 பொறியியல் நூல்களும் எழுதி வாங்கப்பட்டன.

இந்நூல்கள் மேனாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களின் ஆட்சிக் காலத்தில், முதுமுனைவர் டாக்டர் வ. ஐ. சுப்பிரமணியத்தின் வழிகாட்டுதலில் டாக்டர் இராம. சுந்தரத்தினால், இளநிலை மருத்துவப் படிப்பிற்கும், பொறியியல் படிப்பிற்குமான 29 நூல்கள் எழுதி வாங்கப்பட்டு, அவற்றில் பெரும்பாலான நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை எழுதியவர்கள், அன்றைய மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆறுமுகம், சென்னை மருத்துவக் கல்லூரி நரம்பியல் நோய்க் குறி இயல் நிபுணர் பேரா. டாக்டர் சரசா பாரதி, காது, மூக்கு, தொண்டை இயல் பேரா. டாக்டர் காமேஸ்வரன், மருத்துவக் கல்வி இணை இயக்குநர் டாக்டர் அ. கதிரேசன், குழந்தை நல நிபுணர் பேரா. டாக்டர் ராஜராஜேஸ்வரி, பேரா. டாக்டர் ஜெகதீசன், மருந்தியல் கல்விப் பேராசிரியர் பாண்டிச்சேரி டாக்டர் துளசிமணி, ஜிப்மர் உயிர் வேதியியல் பேரா. இராமச்சந்திரன், அறுவை சிகிச்சைப் பேராசிரியர் டாக்டர் சு. நரேந்திரன் ஆகியோராவர்.  இதன்மூலம் இப்பல்கலைக் கழகம் பொறியியல், மருத்துவம் முதலிய துறைகளில் சிறந்த கலைச் சொற்களைத் தொகுத்தது. இது 1990ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆக, இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது மூலநூல்களை எழுதுவதில் பேராசிரியர்கள் ஜப்பானைப் போல் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதாகும்.

இப்பல்கலைக் கழகத்தில் தமிழ்ச் சொற்களுடன் கலந்து இருக்கும் பிற மொழிச்சொற்களுக்கு இணையான கலைச் சொற்களை அகரமுதலித் துறையானது சொல்லாய்வறிஞர் ப. அருளி மூலம் அயற்சொல் அகராதி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பல மொழிச் சொற்களுக்குத் தமிழில் புதுச் சொற்கள் படைக்கப்பட்டுள்ளன. எ.கா.: அமிலம் (சமஸ்கிருதம்) - புளிகம், அரோரூட் (ஆங்கிலம்) - அம்புக்கிழங்கு, சவுக்கு (உருது) - குச்சிலை மரம், பேரிக்காய், (ஆங்கிலம் + தமிழ்) - நீரிக்காய், மகரந்தம் (சமஸ்கிருதம்) - பூந்தாது.

இதே காலகட்டத்தில் தினமணி நாளிதழின் சனிக்கிழமை இணைப்பு இதழான தினமணிச் சுடரில் சொல்லாக்க மேடை என்னும் பகுதியில் தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதிய ஆசிரியர்கள் பயன்படுத்திய கலைச் சொற்களுள் ஏற்புடைய கலைச் சொற்கள், ஏற்க இயலாத கலைச் சொற்கள், பொருத்தமான புதிய கலைச் சொற்கள் ஆகியவை குறித்து அறிவியல் தமிழ் எழுத்தாளர்களின் விவாதம் இடம் பெற்றன. இதனைச் செம்மை செய்தவர் கரூர் முனைவர் அ. செல்வராசு. இவரது முயற்சியால் நல்ல சொற்கள் உருவாகின. எ.கா.: ஆல்கா - பாசிகள்.  கலைச் சொற்களை உருவாக்குவதில் திருவேங்கடம் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்களாகப் பணியாற்றிய முனைவர் ந. சுப்பு ரெட்டியார், 15 அறிவியல் நூற்களை எழுதி அதில் வரும் கலைச் சொற்களையும் அறிமுகம் செய்த பெருமை அவருக்கு உண்டு . எ.கா.: Sensor - உணர்வி, Genetic - கால்வழி, Yolk - கருப்பொருள்.

தமிழ் அகராதிகளும் களஞ்சியங்களும்

1947இல் தமிழ் வளர்ச்சிக் கழகம் சென்னையில் அறிவியல், வாழ்வியலை உள்ளடக்கிய கலைக் களஞ்சியம் ஒன்றைத் தயாரித்தது. இப்பணி 1968-இல் நிறைவுற்று 10 தொகுதிகள் வெளிவந்தன. 1972-இல் சிறுவர் களஞ்சியம் 10 தொகுதிகள் வெளியாயின. இதற்குப் பெரிதும் துணை நின்றவர் இக்கழகத்தின் தலைவர் தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார். 1990-இல் இக்கழகத்திற்கு வா. செ. குழந்தைசாமி தலைமைப் பொறுப்பேற்ற பிறகு மருத்துவக் களஞ்சியம் 12 தொகுதியும், 13-ஆம் தொகுதி, கலைச் சொல் அடைவாகவும் வெளிவந்தன. பிறகு, சித்த மருத்துவக் களஞ்சியத் தொகுதிகள் ஏழு வெளிவந்தன. இது தவிர 4 அறிவியல் நூற்களையும் வெளியிட்டுள்ளது. இதுபோலவே தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் 10 அறிவியல் களஞ்சியங்கள் வெளிவந்துள்ளன. இத்தொகுதிகள் ஒவ்வொன்றிலும் தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம் - தமிழ் கலைச் சொற்பட்டியல் உள்ளன. அறிவியல் தமிழாக்க முயற்சியில் ஈடுபடும் அனைவருக்கும் பயன்படும் முறையில் இது அமைந்துள்ளது.

அறிவியல் நூல்கள் எழுதுவதற்கு அகராதி இல்லையே என்ற குறையை நிறைவு செய்யும் விதமாக டாக்டர் ஏ. சிதம்பரநாதன் செட்டியாரைக் கொண்டு சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட ஆங்கிலம் - தமிழ் அகராதியில் நூற்றுக்கணக்கான தூய தமிழ் அறிவியல் சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன. இச்சொற்களே சிதம்பரநாதரின் தனித்தமிழ்க் கொள்கைக்குச் சான்றாவன. இதற்கான காரணத்தைத் தமிழ் நாடோறும் பிறமொழிக் கலப்பே பெற்று விட்டால் முடிவில் தமிழ்ச் சொற்கள் சுருங்கிப் பிற சொற்கள் பல்கிப் பெருகிவிடும். அதனால், அடுத்த நூற்றாண்டில் தமிழைப் பார்க்கும் ஒருவன், தமிழ் என ஒரு தனி மொழி இல்லை, எனக் கூறத் தலைப்பட்டுவிடுவான். தமிழ் உரைநடை வழக்கிலும் பேச்சு வழக்கிலும் தமிழ்ச் சொற்களுக்குப் பதிலாக வடமொழிச் சொற்களை வழங்கி வந்தால் தமிழ் வடமொழியினின்றே பிறந்தது என்பார் கூற்று நாளடைவில் வலுத்துப்போம்,” என்று தனித் தமிழின் தேவையை விளக்கி எழுதியுள்ளார்.

இதன்பிறகு, 1994இல் மருத்துவ அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி மணவை முஸ்தபாவினால் வெளிவந்துள்ளது. 1994-இல் அ.கி. மூர்த்தியின் அறிவியல் அகராதி, 1996-இல் டாக்டர் சாமி சண்முகத்தின் மருத்துவ, கால்நடை, சட்டச் சொற்கள் அடங்கிய அகராதி, 2000-இல் டாக்டர் சம்பத் குமாரின் ஆயுர்வேத, அலோபதி, ஹோமியோபதி கலைச் சொற்கள் அடங்கிய அகராதியும் பயன்பாட்டில் உள்ளன. இத்துடன் முனைவர் நே. ஜோசப் தொகுத்த மருத்துவக் கலைச்சொற்கள் அகராதியும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் வெளிவந்துள்ளது. இவ்வகராதிகள் இன்று தமிழில் அறிவியல் நூல்களை எழுதுபவர்களுக்கு மிகவும் உதவிக்கரம் நீட்டுகின்றன. இப்படி இருந்தும், அறிவியலை, அதிலும் குறிப்பாக மருத்துவத்தைத் தமிழில் எழுத முடியுமா என்பதற்கு இன்றும், நாளையும் கேட்கப்படும் முதற் கேள்வி தகுந்த கலைச் சொற்கள் உண்டா என்பதேயாகும். உண்மையில், ஆங்கிலத்தில் படிக்கப்படும் மருத்துவ நூல்களில் பெரும்பாலான சொற்கள் கிரீக்கும், இலத்தீனும் ஆகும்.

கலைச்சொல்லாக்க முயற்சியில் ஆரம்ப நிலையில் ஒருவித வேதனையை எல்லா மொழிகளும் அனுபவித்து வருகின்றன. ஒரு மொழியில் ஒரே விதமாக ஒரு சொல்லையே எல்லாரும் எல்லா நூல்களிலும் பயன்படுத்தும் முறை மேற்கொள்ள வேண்டும் எனும் வாதம், இதற்கு அனுசரணையாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி அறிஞர்களுடைய ஒத்துழைப்புடன் கலைச் சொற்களை வெளியிடுவது. இந்த முறையை இஸ்ரேல் பின்பற்றி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அங்கே அறிஞர், பொதுமக்களுடைய ஒத்துழைப்புடன் ஒரு பிறமொழிச் சொல்லுக்கு ஹீப்ரு மொழியில் நேர்ச்சொல் எது என்று செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, எழுத்து மூலம் வினவுகின்றனர். அறிஞர்களும், இந்நற்பணிக்கு முதலிடம் கொடுத்துத் தமது கருத்தைத் தெரிவிக்கின்றனர். ஒரு சொல்லுக்குச் சில நேர்ச் சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் பொது மக்களிடம் அந்தச் சொற்களை வாக்கிய அமைப்பில் பயன்படுத்தி அவர்களுடைய எண்ணம் யாது என அறிகிறார்கள். இதற்கு, வானொலி, செய்தித்தாள் முதலிய மக்கள் தொடர்பு சாதனங்கள் துணை செய்கின்றன. ஒரே தரமாக எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கலைச் சொற்கள் அங்கே பயனாகின்றன.

கீழை நாடாகிய, ஜப்பானில், ஆசிரியர்கள் தாமே கலைச் சொற்களை உருவாக்கி, பிற்சேர்க்கையாக மூல மொழிச் சொற்களையும், பெயர்ப்பு மொழிக் கலைச் சொற்களையும் கொடுக்கின்றனர். மாநாடுகளில் கூடும்போது ஒரு சொல்லுக்குப் பல ஜப்பானிய ஆக்கங்கள் இருக்குமாயின் ஒருமைப்படுத்த முயல்கின்றனர். இம்முயற்சியில் பலர் ஒத்துழைக்கின்றனர். சிலர் ஒத்துழைக்காது தமது கலைச் சொல்லே சிறந்தது என்று பிடிவாதம் பிடிப்பதும் உண்டு. அவ்வாறு சிக்கல் ஏற்படும்போது, நாளாவட்டத்தில் மாணவர்களும் பொது மக்களும் எந்தச் சொல்லைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அதை அறிஞர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இஸ்ரேல் நாட்டிலும், ஜப்பான் நாட்டிலும் இம்முறை இன்றும் வெற்றிகரமாகச் செயற்படுவதற்குக் காரணம் பொது மக்களின் ஒத்துழைப்பு, அறிஞர்களின் மெய்மறந்த ஈடுபாடு நிறுவனத் தீர்ப்பிற்கு மதிப்பு ஆகியவையாகும்.

ஆனால், அதுபோல் தமிழ்நாட்டில் இல்லை. சமுதாயத்தின் தேவைக்கேற்ப மொழியில் புதிய சொற்கள் தோன்றுகின்றன. தமிழ் மொழி அமைப்பை உணர்ந்த மொழியியல் அறிஞர்களும், பிற துறை அறிஞர்களுடன் இணைந்து செயல்பட்டால் தமிழ்க் கலைச்சொல்லாக்கப் பணி வெற்றிபெறும். சிறப்புப் பெயர்கள், குறியீடுகள், சமன்பாடுகள், வாய்ப்பாடுகள், அனைத்துலகச் சொற்கள் ஆகியவற்றை அப்படியே எடுத்தாளுவது பொருந்தும். கலைச் சொல்லாக்கச் சிக்கல்களை ஆய்ந்து தீர்வு காண அனைத்துத்துறை அறிஞர்களைக் கொண்ட ஒரு குழு தேவை. இதனுடன் கணிப்பொறியும் பேருதவி செய்யும்.

நல்ல பல கலைச் சொற்களை அறிய ஆங்கிலம் - தமிழ் அகராதி ஒன்று சுமார் 1,200 பக்கங்களில் சென்னைப் பல்கலைக் கழகத்தால் 1963-இல் வெளியிடப்பட்டது. தமிழ்ப் பல்கலைக் கழகம் 50,000-க்கு மேற்பட்ட மருத்துவக் கலைச் சொற்கள் அடங்கிய அகராதி ஒன்றை வெளியிட உள்ளது. இதுபோல் தனியார் துறையினராலும் மூன்று புத்தகங்கள் வெளிவந்துள்ளன. மேலும் தற்போது புதிய புதிய கலைச் சொல்லாக்க முறைகளைக் கையாண்டு புதிய புதிய சொற்கள் தமிழில் வந்த வண்ணமாகவே உள்ளன. (எ.கா.) பெப்டிக் அல்சர் என்ற சொல்லுக்கு, குடற்புண், வயிற்றுப்புண், இரைப்பைப் புண் என்ற சொற்கள் தமிழாகத் தரப்படுகின்றன.

இதில் வழக்கில் உள்ள வயிற்றுப் புண் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இந்நோயைக் கண்டு பிடிக்க உதவும் கருவியான (esophago Gastro Duodeno Endoscope) என்பதற்கு இரைப்பை அகநோக்கி என்று பொதுவாகக் கூறப்படுகிறது. அதே நோய்க்கு செய்யப்படும் அறுவைக்கு Gastro-Jejuno Anastomosis என்ற அறுவை சிகிச்சைக்கு இரைப்பை இடைச் சிறுகுடல் - இணைப்பு என்று கலைச் சொல்லாக்கப்பட்டு பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இதை நோக்கும் பொழுது புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் புதிய புதிய சொற்கள் உருவாகி வருகின்றன என்பது தெளிவாகும்.

தமிழில் ஆய்வுக் கட்டுரைகள்

அடுத்து, ஆய்வுக்கட்டுரைகளைத் தமிழில் எழுதினால் மேலை நாட்டினருக்குப் புரியாது. நம் கண்டுபிடிப்புகளை எப்படி அவர்கள் புரிந்து கொள்ள முடியும் என்பது ஆங்கிலம் தெரிந்த அனைவராலும் கேட்கப்படும் ஒரு கேள்வியாகும். உலகின் அறிவியல் ஆய்வுகள் - அனைத்தும் ஆங்கிலத்தில் வெளிவருவதில்லை. சுமார் 50 விழுக்காடு ஆங்கிலத்திலும், மீதி 50 விழுக்காட்டில் சுமார் 20 விழுக்காடு ரஷ்ய மொழிகளிலும், வெளிவருகின்றன. இம்மொழியிலிருந்து வெளிவரும் ஆய்வுக் கட்டுரைகளைப் பார்க்கும் பொழுது இச்சிக்கல் மிக எளிதாகத் தீர்க்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகப் புரிகிறது. கட்டுரை ஆரம்பத்தில் கட்டுரையாளர்களின் விவரம், கட்டுரைச் சுருக்கம், ஆய்வு நடைபெற்ற ஆராய்ச்சி நிலையம், நாடு ஆகியவற்றுடன் நூலடைவும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. கட்டுரை மட்டும் தாய்மொழியில் எழுதப்பட்டுள்ளது.

(எ.கா.) ஜப்பான் மொழியில் வெளிவரும் ஜப்பான் முடநீக்கியல் கழகச் சஞ்சிகை. ஜப்பான் மொழியில் எழுதப்பட்ட கட்டுரையில் மூலப் பகுதிகளில் இடை இடையே சில சொற்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. இதைக் கண்ணுறும் பொழுது, இரண்டு மொழிபெயர்ப்புகளில் எழுதும் நிலையில் ஆரம்பத்தில் தமிழில் ஆய்வுக் கட்டுரைகளையோ, புத்தகங்களையோ எழுதுவதில் தடையேதும் இல்லை. மருத்துவத்தில் தமிழ்ப் பயன்பாட்டைப் பெருக்குகின்ற இந்நிலையில், “தாய் மொழியிலும் விஞ்ஞானக் கலைகள் கற்பிக்கப்படும் காலமே தமிழ்நாட்டின் பொற்காலம்,” என அறிஞர்கள் கண்ட கனவு நனவாகி வர ஆரம்பித்துள்ளது புலப்படும்.

இந்த நிலையில், இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் அன்றி நான்காம் தமிழாம் அறிவியல் தமிழின் உதவியால் மருத்துவ இயல் தழைத்தோங்கும். அறிவியல் மொழி வளர்ந்து அதன் பயன் பெருகும் பொழுது, மருத்துவத்தில் மொழி பெயர்ப்பு என்பது போய் சுயபடைப்புகள் தாமே பெருகும். எனவே, மூல நூல்கள், சிறந்த கலைச் சொற்கள், வேண்டிய அகராதிகள், வேண்டிய அளவு இருந்தும், மொழிபெயர்ப்பு சிக்கல்கள் உண்டு என்று மருத்துவம் அல்லது எந்த அறிவியலும் தமிழ் வழியில் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் யார் என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம்.

170 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் மருத்துவ நூல்கள்

தமிழகத்தில் 1960-ஆம் ஆண்டுக்கு முந்தைய கால கட்டம் வரை தமிழால் முடியும் என்று வெற்றி பெற்று காட்டியவர்களிடமிருந்து தமிழ் அகன்று ஆங்கிலம் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. வட மொழியைத் தமிழகத்தில் வழக்கிழக்கச் செய்த தமிழ், தன்னியல்பு மாறாது இன்னும் வாழும் மொழியாகவே உள்ளது. இந்த வளர்ச்சியைக் காணப்பெறாத வடமொழி சார்பினர் தமிழை வீழ்த்த ஆங்கிலத்தைக் கருவியாகப் பயன்படுத்தினர். தமிழுக்காக வாழ்வதாகச் சொன்ன இயக்கங்கள் “Hindi never, English Ever’’ என்ற புதிய முழக்கத்தை வைத்தனர். இதன் காரணமாக 1970-இல் கல்லூரிகளில் தமிழ் பயிற்சி மொழித் திட்டத்தை விரிவுப்படுத்தும் ஆணையை எதிர்த்து மதுரையில் மாநாடு நடைபெற்றது. இவர்களுடன் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுத் தமிழ் திணிப்பு என்றனர். அச்சமயத்தில் இதைக் காரணம் காட்டியே தமிழகத்தில் ஆங்கிலம் சார்பாக ஓர் இயக்கம் உருவெடுத்தது.

1997-ஆம் ஆண்டு தமிழில் பொறியியலைப் பயிற்றுவிக்கும் முயற்சி தோல்வியுற்றது. இதற்கு அடுத்த கட்டமாக 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழிக் கல்வி என்று அறிவித்து அரசு சட்டம் இயற்றாமல் ஆணை பிறப்பித்தது. இதற்கு மெட்ரிகுலேசன் பள்ளி நடத்துபவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் தடை வாங்கினர். இதனால் பாதிக்கப்படுபவர்கள் தமிழ்வழி பயின்ற ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள், இதனைப் பற்றிய கவலை தமிழகத்தைக் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்களுக்கு இல்லை. ஆனால் 170 ஆண்டுகளுக்கு முன்பு இக்கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதமாக எளிய முறையில் மருத்துவக் கருத்துக்களைச் சொல்லுந்திறன் தமிழுக்குண்டு என்பதை யாழ்ப்பாணத்தில் தாய்மொழி தமிழ் மூலம் மருத்துவக் கல்வி புகட்டுவதே சிறந்தது என்று துணிந்து செயலாற்றியவர் ஒரு தமிழரல்லர். ஓர் அமெரிக்க சிலோன் மிஷன் மருத்துவப் பாதிரியாரான டாக்டர் சாமுவேல் ஃபிஷ்கிறீன் ஆவார். மேலும் இவரே, ஆங்கில மருத்துவக் கல்வியைத் தமிழ் மூலம் புகட்டி, தகுதி வாய்ந்த “33” மருத்துவர்களை உருவாக்குவதில் வெற்றி கண்டவர். இதில் ஒரு சிறப்பு என்னவெனில், அவர் காலம், அறிவியல் கலைகளை யெல்லாம் தமிழில் சொல்லவும் கூடுவதில்லை என்று எண்ணிய 170 ஆண்டுகளுக்கு முந்தைய காலம்.

டாக்டர் ஃபிஷ்கிறீனினால் தமிழ் வழி மருத்துவம் போதிக்க வட்டுக்கோட்டைக்கு வந்த பின் எட்டு மாதங்களுக்குள் தமிழை இலகுவாகப் பேசக் கற்றுக்கொண்டார். பிறகு தமிழில் மேனாட்டு மருத்துவ அறிவைப் பரப்பும் முயற்சியில் 1880-ஆம் ஆண்டிலேயே திட்டமிட்டு அடியெடுத்து வைத்தார். இக்காலகட்டத்தில் டாக்டர் கிறீன் இலங்கை மானியப்பாயில் ஆங்கில மொழியின் வாயிலாக ஐரோப்பிய மருத்துவக் கல்வியை ஆங்கிலத்தில் கற்பித்தார் என்றாலும் 1852-ஆம் ஆண்டு இரண்டாம் தொகுதி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி வகுப்புகளைத் தொடங்கிய போது தமிழில் கற்பிக்க வேண்டும் என விரும்பி இதற்கு நிதியுதவி கோரி இலங்கை தேசாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார். இதற்குத் தேசாதிபதி “அமெரிக்க மிஷன் நடைமுறையில் மேற்கொண்டிருக்கும் ஆங்கிலம் தவிர்க்கும் கொள்கை பேராபத்தானதும் தற்கொலைக்கு ஒப்பானதுமாகும்,” என்று கூறி தமிழில் நூல் வெளியிடுவதற்கு எவ்வித உதவியும் அளிப்பதற்கு மறுத்துவிட்டார். ‘’ஆம், கடவுள் எமக்கு ஆயுட் பலந்தரின் காலப்போக்கில் இம்மாகாணத்தை மேனாட்டு வைத்தியங் கற்ற சுதேசிகளால் நிரப்பிக் காட்டுவேன்,’’ என்று மார்தட்டிப் புத்தகங்களை அமெரிக்க - இலங்கை மிசன், தென்னிந்தியக் கிறித்தவப் பாடசாலை புத்தக சங்கம் ஆகியவை புத்தகம் வாங்கி உதவியதன் வாயிலாக வெற்றி கண்டு தமிழில் மேனாட்டு மருத்துவத்தை டாக்டர் ஃபிஷ்கிறீன் நடத்தினார். இக் காலகட்டம் ஆங்கிலம் அரசு மொழியாக இருந்த காலம். ஆங்கிலம் படித்தால் அரசு வேலை என்ற நிலை, அறிவியலைப் படிக்கக் கூடாது என்று சொல்லாத, கட்டுப் பாட்டுடன் இந்துக்கள் வாழ்ந்த காலம். மேலும் அறிவியல் கிறித்துவத்துடனும் கிறித்துவ மிஷனரிகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது என்று இப்பழமைவாதிகள் எண்ணிய காலத்தில்தான் டாக்டர் கிறீனின் வழியாகத் தமிழர்களுக்கு மேலை நாட்டு மருத்துவம் தமிழில் போதிக்கப்பட்டது.

மருத்துவர் சாமுவேல் ஃபிஷ்கிறீன் ஏறக்குறைய 4650 பக்கங்கள் தமிழில் ஆங்கில மருத்துவத்தைத் தன் மாணவர் உதவியுடன் மொழிபெயர்த்துள்ளார். காது, கை, கால், தோல், வாய், உடல் சுத்தமாய் இருக்க, வாந்தி பேதி, காலரா உதவிக் குறிப்புகள் ஆகிய சிறு கை நூல்களும், சிறு வெளியீடுகளும் ஆகும். இவர் முதன் முதலில் மொழிபெயர்க்கத் தொடங்கிய நூல் கல்லின் கற்றரின் என்ற நூலின் தமிழாக்கமான அங்காதி பாதம், சுகரணபாதம், உற்பாலனம் என்ற நூல். இதுவே தெளிவான படங்களுடன் 1852-ஆம் ஆண்டு 204 பக்கங்களுடன் வெளியிடப்பட்ட முதல் மேனாட்டு மருத்துவ நூல் ஆகும். இதனைத் தொடர்ந்து பத்து நூல்கள் வெளியிடப்பட்டன.

தமிழை முன்னிறுத்திய டாக்டர் கிறீன்

எல்லா நூல்களிலும் கிறீன் வைத்தியர் என்று தன்னைக் குறிப்பிட்டுக்கொள்ளும் இம்மருத்துவர் தாமே மொழிபெயர்த்தது நான்கு நூல்கள் மட்டுமே. இவற்றிற்கு இவருடைய மாணவர்கள் உதவியுள்ளனர். ஆனால் எல்லா நூல்களும் இவரால் பார்வையிடப்பட்டுத் திருத்தப்பட்டதாக நூலின் முதல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இது இவர்தம் பெருந்தன்மையைக் காட்டுகிறது. கிறீனின் கலைச் சொல்லாக்கம் கிறீனின் வார்த்தையிலேயே இக்கருத்தைக் கூற வேண்டுமெனில், ‘’அரும்பதங்களுள், சில செந்தமிழ்ச் சொற்கள், சில சமஸ்கிருதச் சொற்கள் அநேகம் தமிழ் எழுத்தில் அமைந்த இங்கிலீஷ் சொற்களாயிருக்கும். பதம் ஒவ்வொன்றும், தனித்தனியாக ஆராய்ந்து சேர்க்கப்பட்டது. ஆயினும், தாய் நூலில் உள்ள இங்கிலீஷ் சொல்லைத் தமிழில் எழுதும் போதெல்லாம் அது குறையவும், அதற்குரிய ஓசை கெடாமல் ஏற்ற கோலங் கொள்ளவும் தக்கதாய் இயற்றி இருக்கும்,” என்று கூறுகிறார். ஆனால், 1872இல் அவர் வெளியிட்ட கலைச்சொல் பட்டியல் Belly - வயிறு போன்ற புதிய தமிழ்ச் சொற்கள் காணக் கிடைக்கின்றன.

அங்காதிபாதம் - சுகரண வாதம் உற்பாலனம் என்ற நூலில் துணையாளியின் கடமை என்ற அதிகாரத்தில் அறுவை மருத்துவரை சாத்திர வைத்தியன் என்றும், வேகம் என்பதற்கு சடுதி என்றும், குளியலுக்கு ஸ்நானம் என்றும், வடமொழியிலே அன்றைய நிலையில் கருத்துத் தெளிவுடன் இலகு தமிழில் கருத்துப் பரிமாற்றம். உள்ளது. மேலும் இந்நூலை மொழிபெயர்க்கும் போது, நாட்டாருக்கு வேண்டாதவற்றை நீக்கித் தேவையான உள்நாட்டு முறைகளைக் கூட்டி எழுதியுள்ளதாக அவரே தனது பாயிரத்தில் குறிப்பிடுகிறார். இந்நூலில் சொல்வரிசை, தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்ற முறையில் அமைந்துள்ளது.

அந்நாளிலே டாக்டர் கிறீன் மாணவர்கள் மேல்நாட்டு மருத்துவக் கல்வியைத் தமிழில் படித்தால் பயனுண்டா என சற்று சலனமடைந்தனர். ‘’எனது மாணவர்கள் ஆங்கிலத்திலிருந்து மாறித் தமிழில் கற்பது பற்றிச் சலனமடைந்துள்ளனர். அரசு சேவையில் ஈடுபட்டுச் சம்பளம் பெறும் வாய்ப்புக் குன்றுமென அவர்கள் எண்ணுகிறார்கள். உண்மை . ஆனால் வைத்தியர்களை அவரவர் கிராமத்தில் நிலைபெறச் செய்தலே எதிர்கால நோக்கமாகும். எனவே, பத்து நாட்கள் ஓய்வு, கொடுத்து வைத்தியக் கல்வியைத் தொடர்வார்களா அன்றேல் வேறு தொழிலை நாடுவார்களா எனத் தீர்மானிக்க அவர்களுக்கு அவகாசம் கொடுத்துள்ளேன்,’’ எனக்கூறியுள்ளார். இக்கூற்று ஒவ்வொருவராலும் எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

நினைவில் நிறுத்துங்கள், 170 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் ஆங்கில மருத்துவம் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ள போது, இன்று ஏன் முடியாது?

சொந்த நாட்டு உடையுடன் மருத்துவக் கல்வி

மாணவர்கள் தங்கள் படிப்பை அவர்கள் கலாச்சார உடைகளான வேட்டி சால்வை, தலைப்பாகை ஆகியவைகளுடனே படித்துள்ளனர். இதற்குக் காரணம், டாக்டர் கிறீனின் எண்ணமே ஆகும். “வேட்டி காற்சட்டையாகவும், சால்வை மேற்சட்டையாகவும், தலைப்பாகை தொப்பியாகவும், தாவர போசனம் மாமிச போசனமாகவும், குடிசை வீடாகவும் மாறுகின்றன என்றே நான் எண்ணுகின்றேன். ஐரோப்பியர் நடையுடை பாவனைகளைப் பின்பற்றும் இந்துக்களைவிட கிறித்துவ இந்துக்களைக் காண ஆசைப்படுகின்றேன். கிறித்தவராதல் என்பது தேசியத்தை இழப்பதல்ல,” என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளார்.

தமிழ்வழி மருத்துவம் என்ற கொள்கையின் தீவிர பற்றுக் காரணமாக டாக்டர் கிறீன் 1866-ஆம் ஆண்டு ஒரு செய்தியைப் பெருமையுடன் கூற முடிந்தது. தமிழிலே மேலை நாட்டு மருத்துவக் கல்வியைக் கற்பித்தல் மாத்திரமல்ல, எல்லாம் தமிழ் மயமாக நடத்துதலுஞ் சாலும் என்று தமிழின் திறமையை எடுத்துக்காட்டிய மாபெரும் வெற்றிச் செய்தி அது. “இப்பொழுது எல்லா விசயங்களும் தமிழிலே நடைபெறுகின்றன. மருந்துகளின் பெயர், நோய்களின் பெயர், கிடாப்புகள், கணக்கு விவரங்கள், மருந்துக் குறிப்புகள் எல்லாம் தமிழிலேயே எழுதப்படுகின்றன,” என்று கூறுகிறார். டாக்டர் கிறீன் பணிபுரிந்த காலத்தில் காலரா பெரும் பலி வாங்கியது. அதற்காகத் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு தடுப்புமுறை மருத்துவத்தை கிறீன் இலங்கையில் அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அரசு அதன் நன்மைகளைப் புரிந்து கொண்டு துண்டு வெளியீடுகளைத் தமிழிலேயே எழுதுவதற்கும் வெளியிடுவதற்கும் கிறீனின் உதவியை நாடியது. இதுமட்டுமின்றி, கிறீன் எழுதிய நூல்களை 1870-இல் கிழக்கு மாகாண அரசு அதிபராகவிருந்த திரு. மொறிஸ் அரசுத் தரப்பில் வாங்கி மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தார்.

ஒட்டுமொத்தமாக டாக்டர் கிறீனைப் பார்க்கும் போது, மருத்துவம், வேதியல், தாவவியல், நூல்களைப் பெருமையோடு வெளியிட்டவர் எனவும், இவரே தமிழில் முதல் கலைச்சொல் கோட்பாட்டாளர் என்று கூறுவதும் பொருத்தமுடையதாகும். மேலும், தமிழ்க் கலாச்சாரத்தைச் சற்றேனும் குறைக்காது தமிழர்களிடையே நிலவிய அறிவியல் சார்ந்த சில நடைமுறை மருத்துவங்களையும் இணைத்து மேலை மருத்துவத்தைத் தமிழில் எழுதியதோடு நில்லாமல் மாணவர்களை முதன் முதலில் தமிழ்வழி மேலை மருத்துவம் படிக்கவைத்து மருத்துவராக்கிய பெருமையும் இந்த அமெரிக்க மருத்துவப் பாதிரியையே சாரும்.

இவர் தமிழ்மீது வைத்திருந்த மோகத்தை அறிய இவருடைய நினைவுக் கல் சான்றாக அமைகிறது. தான் வாழ்ந்த காலத்தில் அவர்தம் நாட்குறிப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “தமிழருக்கான மருத்துவ ஊழியர்” (“Medical Evangelist to the Tamils’’) எனப் பொறிக்க வேண்டும் என்பதே ஆகும். 1884 இல் டாக்டர் கிறீன் இறந்தபோது அவரது வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் உள்ள வூஸ்டன் கிராம அடக்கசாலையில் அந்த நினைவுக் கல்வெட்டு டாக்டர் கிறீனை நினைவுப்படுத்தி இன்றும் நிமிர்ந்து நிற்கிறது.

இப்படி ஒரு தனிமனிதனால் மேலை மருத்துவத்தைத் தமிழில் எழுதி, தமிழ் படித்த மேலை மருத்துவர்களாக்கிய சான்றுகள் இருந்த போதிலும், மைய மருத்துவக் கழகம் (மெடிகல் கவுன்சில்) அன்று அறிவியல் தொழில்நுட்பக் கழகம் தாய்மொழிக் கல்வியை நடத்த அனுமதி அளிக்காது என்று ஒரு பொய் வாதத்தைக் கூறியே ஏமாற்றி வருவது கண்கூடாகத் தெரிகிறது. ஆனால் உலக அளவில் மெய்பிக்கப்பட்ட உண்மை என்ன? தாய்மொழிக் கல்வி என்பது சாத்தியமே இல்லையா?

தமிழால் முடியும்

அறிவியல் கலைகளையெல்லாம் தமது சொந்த மொழியில் கற்கும் நாட்டவர்கள் மிக வேகமாக முன்னேறியிருப்பதை கண்கூடாகக் காணலாம். ஜப்பான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் மிகையான முன்னேற்றத்தினால் அதை அறியவும் முடிகின்றது. இதற்குக் காரணம், தாய்மொழி உணர்வுடன் அந்நாட்டவர்கள் 60-70 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவியலையெல்லாம் தமது சொந்த மொழிகளில் புகுத்திவிட்டனர். அதனால், அந்நாட்டில் வாழ்ந்த எல்லாருக்கும் அறிவியல் கற்கும் வாய்ப்பு கிட்டியது. ஏழை, பணக்காரன் முன்னேற்றமடைந்த நகரங்களில் வாழ்பவன், பின்தங்கிய கிராமத்தில் வாழ்பவன் என்ற வேறுபாடின்றி அறிவியல் கற்றனர். ஆகவே, ஆர்வமும், ஆற்றலுமுடையவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு அறிவியல் கற்று முன்னேறும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் நாடு முன்னேறியதுடன் மொழியும் வளமடைந்து அறிவியலை எடுத்துக்கூறும் ஆற்றல் பெற்று வளர்ச்சியடைந்தது. இதன் பொருட்டு, மொழித் தடையோ விளக்கக் குறைவோ இன்றி அறிவு பெருக வாய்ப்புண்டாக்கியதுடன் தொழில் துறைகளும் வேகமாக முன்னேறி நன்மை விளைந்தது. 

தாய்மொழியில் கல்வி போதிப்பதைக் குறித்துக் கூறும் மகாகவி பாரதி, “கல்வி போதிப்பதற்கு ஒருவருக்குச் சொந்த தாய்ப் பாஷை மட்டுமே இயற்கையானதும் மனிதப் பண்பிற்கு ஏற்றதுமான போதனாப் பாஷையாகும்.” என்கிறார்.

மேலும், பாரதியார், “தமிழ்நாட்டில் தேசியக் கல்வி என்பதாக ஒன்று தொடங்கி, அதில் தமிழ் பாஷையைப் பிரதானமாகக் காட்டாமல், பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும், தமிழ் ஒருவித பாஷையாகவும் ஏற்படுத்தினால், அதே தேசியம் என்ற பதத்தின் பொருளுக்கு முழுவதும் விரோதமாக அமையும் என்பதில் ஐயமில்லை. தேச பாஷையே பிரதானமென்பது, தேசியக் கல்வியின் பிரதானக் கொள்கை. இதனை மறந்துவிடக் கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தமிழ்நாட்டிலிருந்து பரிபூரண ஸஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானால், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற்கருவியாக ஏற்படுத்தப்படும் என்று தம்பட்டம் செய்து அறிவிக்க வேண்டும்,’’ என்று கூறுகிறார்.

தாய்மொழியில் கல்வி கற்பது குழந்தைகளின் உணர்ந்தறிதல் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது என்று யுனெஸ்கோ வலியுறுத்துகிறது. நோபல் பரிசு பெற்ற பல விஞ்ஞானிகளுக்கு ஆங்கிலமே தெரியாது. உலகில் வளர்ந்த நாடுகள் அனைத்தும் தமது தாய்மொழி வழிக் கல்வியினாலேயே வளர்ந்து நாடுகளாயின. இன்றும் மேற்கூறிய நாடுகளைத் தவிர்த்து, ஜெர்மன், ஜப்பான், சீனா, துருக்கி, ரஷ்யா, தாய்லாந்து, அயர்லாந்து போன்ற பல முன்னேறிய நாடுகளும், கியூபா, வியட்நாம், நைஜீரியா போன்ற வளரும் நாடுகளும் தாய்மொழியிலேயே அனைத்து உயர் கல்விகளையும் கற்றுத்தருகின்றன.

தமிழ்வழிக்கல்வி தமிழர்களின் உரிமை

மருத்துவத் தமிழ்க் கல்வி வளர்ச்சியுறாததற்குப் பல்வேறு அரசியல் சமூகக் காரணங்கள் உண்டு. ஒரு சமூகத்தில் முழுமையான ஆட்சி மொழியாக, மலராத மொழியை அச்சமூகத்தினர் கல்வி மொழியாக ஏற்றுக் கொள்வதில் பல்வேறு சமூகத் தடைகள் உண்டென்பது வரலாற்று உண்மை.

அரசு எங்கும் தமிழ் என்பதை அறிவியல் கல்வி நிலையிலும் நடைமுறைப்படுத்த விழைந்தால், அதற்குக் கல்வி மொழி நிலைசார் தடைகள் இல்லை. இருக்கின்ற மிகச் சில தடைகளை அகற்றுவது மிக எளிதே. இருக்கின்றதை இல்லாதது போல் அங்கும், இங்கும் நடக்கும் சில மொழிபெயர்ப்பு தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டி எப்படியும் தமிழ்வழிக் கல்வி வரக்கூடாது என்பதில் கங்கணம் கட்டிக்கொண்டு எதிர்ப்பதில் ஏதோ சூட்சுமம் மட்டும் உள்ளது என்பது தெளிவாகப் புரிகிறது.

தமிழ்வழிக் கல்வி தமிழ்நாட்டில் விடுதலைக்கு முன்பே கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ஆங்கிலம் இரண்டாம் மொழியாக, ஆறாம் வகுப்புக்கு மேல் ஒரு மொழிப் பாடமாக மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்தது. 1941-இல் மாணவர்கள் முதலாவதாகத் தமிழ்வழிக் கல்வி பெற்று பள்ளியிறுதித் தேர்வினை எழுதினார்கள்.

பொதுக் கல்வியில் தாய்மொழி வழிக் கல்வி கட்டாயம் என்று ஒரு நிலை இருந்தது. ஆறாம் வகுப்பு முதல் ஆங்கிலம் ஒரு மொழிப் பாடமாக மட்டுமே கற்பிக்கப்பட்டது. விடுதலைக்கு முன்பே இங்கே நிலவிய இந்த நிலை கைநழுவிப் போனது தமிழகத்துக்குப் பெருமையளிப்பதாக இல்லை. தமிழக வரலாற்றில் எந்தக் காலகட்டத்திலும் ஒரு அயல்மொழியை கட்டாயப் பாடமாக்கி, இருபதாம் நூற்றாண்டுக்கு முன் எந்த ஆட்சியும் மக்கள் மீது திணித்ததில்லை. இருபதாம் நூற்றாண்டில், அதிலும் நாம் விடுதலை பெற்ற பின் தமிழ்நாட்டில் ஒரு அயல்மொழியை ஒரு கட்டாயப் பாடமாக்கிப் பொதுக் கல்வியிலேயே மக்கள் மீது திணித்திருக்கிறோம். அதே நேரத்தில் இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் சொந்தமான மொழியைப் புறக்கணித்துவிட்டுக்கூட ஒருவன் பட்டமும், பதவியும் பெற முடியும் என்னும் ஒரு அவலநிலை உருவாகத் தமிழகம் எப்படியோ இடம் கொடுத்துவிட்டது.

வடமொழி ஆதிக்க எதிர்ப்புச் சூழலையும், இந்தி ஆதிக்க எதிர்ப்புச் சூழலையும் நன்கு பயன்படுத்திக் கொண்டு, ஆங்கிலேயர்களே இந்நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில் ஆங்கிலப் பற்றாளர்கள், ஆங்கில ஆதிக்கத்திற்கு என்றுமில்லாத அளவுக்கு இங்கே வழிவகுத்து விட்டனர். பன்மொழிச் சூழலைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் ஒரு மொழியை மட்டுமே மேலே தூக்கி நிறுத்தி ஆதிக்க மொழியாக ஆக்குவது மக்களாட்சிப் பண்புக்குப் பொருந்தாது. ஒரு மொழி ஆதிக்க மொழியாகிவிட்டால், அது மற்ற மொழிகளின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிப்பதாக ஆகிவிடும்.

மருத்துவக் கல்வி தமிழில் முடியும் எனக் கூறும்போது, பன்னெடுங்காலமாக, தாய்மொழி வழிக் கல்வி குறித்த டாக்டர் பொற்கோவின் பொன் எழுத்துக்களால் குறிக்கப்பட்ட கருத்துக்களைக் காண்போம்.

தமிழ் வழிக் கல்வி என்பது கல்வியாளர்களும், தலைவர்களும், துறை வல்லுநர்களும், ஆட்சியாளர்களும் ஒருங்கிணைந்து முழுமூச்சோடு பாடுபட்டு நிறைவேற்ற வேண்டிய பணி.  மக்களாட்சியில் மக்கள் மொழியின் வாயிலாக மக்களுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும். மக்களாட்சியில் மக்கள் மொழி மதிக்கப்பட வேண்டும். மக்கள் மொழிக்கு உரிய உரிமைகள் யாவும் மகிழ்ச்சியோடு வழங்கப்பட வேண்டும். மக்கள் மேம்பாட்டுக்கும், நாட்டு முன்னேற்றத்திற்கும் மக்கள் மொழியைப் போல் எந்தமொழியும் உதவ முடியாது.

தமிழ்வழிக் கல்வி வேண்டும் என்பவர்கள் தமிழகத்தில் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை மாணவர்களுக்குத் தமிழ் வாயிலாகவே கல்வி வழங்கப்பட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்களே தவிர ஆங்கிலம், ஜெர்மன் போன்ற பிற மொழிகளை மாணவர்கள் படிக்கக் கூடாது என்று யாரும் எங்கும் எப்போதும் சொன்னதில்லை. தமிழுக்கு உள்ள இடத்தை இழக்காமல், தமிழுக்கு உள்ள உரிமைகளைப் பறி கொடுக்காமல் யாரும் எத்தனை மொழிகளையும் படிக்கட்டும். பயிற்று மொழி வேறு, மொழி அறிவு வேறு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மருத்துவத்துறையிலும், தொழில்நுட்பத் துறையிலும் தமிழ் பயிற்றுமொழி ஆகும் போதுதான் தமிழின் முழுமையான பயன்பாடு, தமிழ் மக்களுக்குக் கிடைக்கும்.

படிக்க வேண்டும். எந்தப் படிப்பையும் தமிழில் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கமுடியாது என்றால் எங்கே இருக்கிறது சுதந்திரம்? உள்ளபடியே தமிழ்நாட்டில் தமிழனுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்றால் எல்லா இடங்களிலும் தமிழ் செல்லுபடியாக வேண்டும். அதுதானே சுதந்திரம். தமிழில் பேச, தமிழில் எழுத, தமிழில் படிக்க, தமிழில் அறிவு பெற தமிழ்நாட்டில் தடை இருக்கிறது என்றால் நாம் சுதந்திரமாகவா இருக்கிறோம்?

அண்டை நாடுகள் எல்லாவற்றிலும் சுதந்திரம் கிடைத்தவுடன் மொழிச் சுதந்திரமும் கிடைத்தது. நமக்கு மட்டும் மொழிச் சுதந்திரம் கிடைக்கவில்லையே! ஆங்கிலேயன் நம்மை ஆண்டபோது ஆங்கிலத்துக்கு இருந்த செல்வாக்கு நமக்குத் தெரியும். இப்போது ஆங்கிலத்துக்குச் செல்வாக்கு இரண்டு மூன்று மடங்கு பெருகியிருக்கிறதே! இப்போது ஆங்கிலச் செல்வாக்கைப் பாதுகாத்து வளர்ப்பவர்கள் யாராக இருக்கும்?

ஒன்று, ஆங்கிலச் செல்வாக்கு குறைந்தால் என்ன ஆகுமோ என்று அஞ்சுகிற பயங்கொள்ளிகளாக இருக்க வேண்டும்.

இரண்டு, ஆங்கிலத்தை முன் நிறுத்தி மக்களை நிமிரவிடாமல் தடுத்துப் பின்தள்ளி ஏமாற்றுகிற நயவஞ்சகர்களாக இருக்க வேண்டும்.

மூன்று, தமிழில் அறிவும் திறமும் இல்லாமல் தமிழுக்கும் தமிழ் மேன்மைக்கும் அஞ்சித் தமிழ் மேம்பாட்டையே விரும்பாதவர்களாக இருக்க வேண்டும்.

நான்கு, தங்கள் சுகபோகத்துக்காக தங்கள் சுய லாபங்களுக்காகத் தமிழையும் தமிழ் மக்களையும் ஒடுக்கித் தங்கள் ஆதிக்க எல்லையை விரிவுபடுத்தும் கயவர்களாக இருக்க வேண்டும்.

எப்படி இருந்தாலும் மக்கள் மீதும் மொழி மீதும் உண்மையான அக்கறை கொண்டவர்கள் தடைகளையெல்லாம் கடந்து தமிழர் மேம்பாட்டுக்கும் தமிழ் மேம்பாட்டுக்கும் வழி கண்டு தான் ஆக வேண்டும்.

தமிழைச் செம்மொழி என்று உலகை ஒப்ப வைத்திருக்கிற நாம் தமிழைக் கல்வி மொழியாக்க ஏன் தயங்க வேண்டும்?

முன்னே தொட வேண்டியது தமிழ்வழிக் கல்வி. முன்னே நிறைவேற்ற வேண்டியது தமிழ்வழிக் கல்வி. முதல் வகுப்பிலிருந்து ஆராய்ச்சி அறிஞர் பட்டம் வரை தமிழ் வழிக் கல்வி நிறைவேற்றப்பட்டு விட்டால் அதுதான் தமிழகத்தின் வளமான வாழ்வுக்கு வலுவான அடித்தளம்.

நன்றி: காக்கைச் சிறகினிலே, இலக்கிய மாத இதழ் – ஆகஸ்ட் 2021.


கட்டுரையாளர்: மருத்துவர் சு. நரேந்திரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation