பேகசுஸ் விசாரணை கோரும் மனுக்கள்: வியாழக்கிழமை உச்சநீதிமன்றம் பரிசீலனை

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2021 11:09

புது டில்லி, 

இஸ்ரேல் நாட்டில் என்.எஸ்.ஓ. என்ற அமைப்பு உருவாக்கிய பேகசுஸ் என்ற மொபைல் உளவு சாப்ட்வேர் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பு உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரும் மனுக்கள் அனைத்தையும் வரும் வியாழக்கிழமை அன்று உச்சநீதிமன்றம் பரிசீலனை செய்ய உள்ளது.

பேகசுஸ் பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன வழக்கறிஞர் எம்.எல். சர்மா மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

மாநிலங்களவை மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளார்.

பத்திரிக்கையாளர்கள் என். ராம், சசிகுமார் மூன்றாவது மனுவை தாக்கல் செய்துள்ளனர். மூத்த பத்திரிக்கையாளர்கள் சார்பாக பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் மனுவைத் தாக்கல் செய்தார்.

பேகசுஸ் உளவு சாஃப்ட்வேர் மக்களின் அடிப்படை உரிமையை சம்பந்தப்பட்டதாகும் எனவே உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

பேகசுஸ் பிரச்சனை குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மூன்று மனுக்களும் ஒன்றாக வரும் வியாழக்கிழமை அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

உச்சநீதிமன்றம் வரும் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் மனுக்களில் பட்டியலை ஜூலை மாதம் 31ஆம் தேதி வெளியிட்டது அப்பட்டியலில் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி வியாழக்கிழமையன்று பேகசுஸ் பிரச்சனை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்பி ரமணா மற்றும் நீதிபதி சூரியகாந்த் அடங்கிய அமர்வு மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.