இந்திய - சீன ராணுவ தளபதிகள் பேச்சு துவங்கியது

பதிவு செய்த நாள் : 31 ஜூலை 2021 20:02

புது டெல்லி, 

இந்திய - சீன எல்லையில் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கோபுர மற்றும் வெந்நீர் ஊற்றுக்கள் பகுதியில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை இன்று காலை 10:30 மணிக்கு துவங்கியது.

சீன ராணுவத்தின் மோல்டோ ராணுவ முகாமில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மோட்டோ சீன ராணுவ முகாம் கிழக்கு லடாக்கில் சுசுல் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்திய ராணுவ முகாமுக்கு எதிராக சீனப் பகுதியில் அமைந்துள்ளது.

இந்திய சீன ராணுவ தளபதிகள் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை ஜூலை மாதம் 26ஆம் தேதி வைத்துக்கொள்ளலாம் என்று சீன ராணுவம் தெரிவித்தது.

ஜூலை 26ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கார்கில் வெற்றி தினம் இந்தியாவினால் கொண்டாடப்பட்டு வருகிறது அதனால் அன்று இந்திய சீன ராணுவ தளபதிகள் பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்வது வசதியாக இராது என்று இந்திய தரப்பில் பதிலளிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து ஜூலை 31 ஆம் தேதி பேச்சு வார்த்தையை வைத்துக் கொள்ள இரு தரப்பினரும் சம்மதித்தனர் அதன்படி இன்று காலை பேச்சுவார்த்தை துவங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் பான்கோங்  இட்சோ ஏரிக் கரையில் இருந்து இந்திய சீன ராணுவங்கள் தங்கள் படை வீரர்களை விலக்கிக் கொண்டனர். அதற்குப்பிறகு ஜூலை மாதம் வரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

பதற்றம் நிலவும் பகுதிகளாக கருதப்படும் கோக்ரா, வெந்நீரூற்று பகுதிகள், டெம்சோக், டெப்சாங் ஆகிய பகுதிகளில் இருந்து அடுத்து படை விலக்கம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் எல்லாம் இடையில் ராணுவ விலக்க பகுதிகள்  (பஃபர் பிராந்தியம்)  உருவாக்கப்பட்ட காரணத்தினால் இந்திய சீன ராணுவத்தினர் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போயிற்று அதன் காரணமாக பதற்றத்துக்கு வாய்ப்பு ஏற்படவில்லை.

இன்று கோக்ரா, வெந்நீரூற்று பகுதிகளில் இருந்து இரு தரப்பும் ராணுவ வீரர்களையும் சாதனங்களையும் விலக்கிக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

பேச்சுவார்த்தை எதுவரை நீடிக்கும் என்று எந்த தகவலும் இல்லை.

மேஜர் ஜெனரல்கள் நிலையில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது படைவிலக்கம் குறித்த இறுதி முடிவு எட்டப்பட வாய்ப்பு உள்ளது.