ஒலிம்பிக் போட்டி - மகளிர் 49 கிலோ பளுதூக்குதல் எடை பிரிவில் இந்தியாவுக்கு முதல் வெள்ளி பதக்கம்

பதிவு செய்த நாள் : 24 ஜூலை 2021 12:09

டோக்கியோ

டோக்கியோவில் இன்று நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 49 கிலோ பளுதூக்குதல் எடை பிரிவில் இந்திய வீராங்கனை மீரா பாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள மீராபாய் சானுவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர்  நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத்தந்த மீராபாய் சானுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெண்கள் பளுதூக்குதல் 49 கிலோ பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் வெற்றி கணக்கை தொடங்கிவைத்தார் மீராபாய் சானு. 

மணிப்பூர் தலைநகர் இம்பாலைச் சேர்ந்த 26 வயதான மீராபாய் சானு, டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் ஒட்டு மொத்தமாக 202 கிலோ எடையை தூக்கி 2ம் இடத்தை பிடித்தார்.

ஸ்நேச்சில் 87 கிலோவும்,

க்ளீன் அண்ட் ஜெர்க்கில் 115 கிலோ எடையையும் தூக்கி மீராபாய் அசத்தியுள்ளார்.

க்ளீன் அண்ட் ஜெர்க் போட்டியில் முதல் அட்டம்டெட்டில் 110 கிலோ,

இரண்டாவது அட்டம்டெட்டில் 115 கிலோ எடையைச் சரியாகத்தூக்கியவர், மூன்றாவது அட்டம்டெட்டில் 117கிலோ எடையைத் தூக்க சிரமப்பட்டார். இதனால் வெள்ளி பதக்கமே வெல்லமுடிந்தது.

தங்கப்பதக்கத்தை சீனாவைச் சேர்ந்த ஹு ஜிஹுயி வென்றுள்ளார். அவர் மொத்தம் 210 கிலோ எடை தூக்கியுள்ளார்.

வெண்கலப் பதக்கத்தை இந்தோனேசியாவை சேர்ந்த விண்டி காந்திகா வென்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் ஆந்திர மாநிலம் கர்ணம் மல்லேஸ்வரி 2000ல்வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். பெண்கள் எடை தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு கர்ணம் மல்லேஸ்வரியை மிஞ்சி உள்ளார்.

ஒலிம்பிக்கில் இந்தியாவின்  கடைசி 6 பதக்கங்களில் 5 பெண்களால் வந்தவை.

2012 இறுதி 3 - சாய்னா, மேரி கோம், யோகேஷ்வர் தத்

2016 - சிந்து, சாக்‌ஷி மாலிக்

2021 - மீராபாய் சானு