புதிய சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அரசு கொள்முதலில் சலுகைகள்: அரசாணை வெளியீடு

பதிவு செய்த நாள் : 23 ஜூலை 2021 13:01

சென்னை:

தமிழகத்தில் புதியதாக தொழில் தொடங்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் கொள்முதலில் பங்கு கொள்ள உதவும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.புதிய  சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசாணை  22-7-2021 அன்று  வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருவதாக தொடர்ச்சியாக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது.  

சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பாதிப்பை சரிசெய்யும் வழியிலும் பல்வேறு தளர்வுகளை மற்றும் சலுகைகளை தமிழ்நாடு அரசு அறிவித்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய நிறுவனங்களின் 20 லட்சத்திற்கு குறைவான டெண்டரில் சிறு, குறு நிறுவனங்கள் பங்கேற்பதற்கு ஏற்கனவே வகுக்கப்பட்டிருந்த விதிமுறைகளைத்  தளர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கொள்முதலில் பங்கு கொள்ளமுன்வைப்பு தொகை  தேவையில்லை என்றும், வருடவரவு செலவு நிர்ணயம்  அவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

அரசு டெண்டரில் பங்கேற்கக்கூடிய நிறுவனங்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் startuptn, startuptamilnadu முகமையில் பதிவு செய்திருந்தால் மட்டும் போதும் என தமிழ்நாடு அரசு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.