நாஞ்சில் நாடு கண்ட நம் டி.வி.ஆர்.,

பதிவு செய்த நாள் : 21 ஜூலை 2021

தனக்கென தனித்தன்மை கொண்டிருந்த நாஞ்சில் நாடான இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தை, கேரளாவிடம் இருந்து மீட்டவரான, 'தினமலர்' நிறுவனர் டி.வி.ஆரின் 37வது நினைவு தினம் இன்று (21-7-2021)

பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன், இந்தியா என்பது, 565 பெரியதும், சிறியதுமான சமஸ்தானங்களைக் கொண்டிருந்தது. இந்த சமஸ்தானங்களை ராஜாக்களும், நவாபுகளும் ஆண்டு கொண்டுஇருந்தனர்.

இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு, அன்றைக்கு நாஞ்சில் நாடு என்று பெயர்; திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது; பத்மநாபபுரம் தான் இதன் தலைநகர். இப்போதும் இங்கு அரண்மனை, கோட்டைகள் என்ற பழங்கால நினைவு சின்னங்களை காணலாம்.விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்தது நாஞ்சில் நாடு. நாட்டின் பெயரே அதை ஒட்டி எழுந்தது தான். பார்க்கும் இடமெல்லாம் பச்சைக் கம்பளம் விரித்தது போல வயல் வெளிகள், மேகம் தொட்டு விளையாடும் மலைகள், ஆண்டு முழுதும் பெய்யும் மழை, முக்கடல்கள் சங்கமம்என்று தனி வளங்களை கொண்டிருந்தது.மொழி வாரியாக மாநிலங்களை பிரித்த போது, 'நாஞ்சில் நாடு ஞங்களோடது' என, மலையாளம் பேசும் மக்கள், நாஞ்சில் நாட்டை விட்டுத்தர முடியாது என தீவிரமாக இருந்தனர்.

இதில் என்ன தப்பு?

'நாஞ்சில் நாட்டில், யார் தமிழ் பேசுகின்றனர்...' என்று தமிழகத்தின் தலைநகரில் இருந்தவர்களே, நாஞ்சில் நாடு பற்றி கவலைப்படாமல், அலட்சியமாக இருந்தனர். அகில இந்தியப் பத்திரிகைகளும், தமிழகப் பத்திரிகைகளும், எங்கோ இருந்துகொண்டு, தென் திருவிதாங்கூர் தமிழர்களின் நியாயப்பூர்வமான உணர்வுகளையோ, கோரிக்கைகளையோ, உணராமல் உபதேசங்களைச் சொல்லி வந்தன.இந்த நேரத்தில், நாஞ்சில் நாடு தமிழகத்துடன் தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, இதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர் தான், 'தினமலர்' நிறுவனர் டி.வி.ஆர்.,

சுதந்திரம் பெறுவதற்கு முன்னும், பின்னும் இருவகையான தலைவர்கள் உருவாயினர். அரசை எதிர்த்து இயக்கம் நடத்தி, இன்னலும், சிறைவாசமும் அனுபவித்து உருவான அரசியல் தியாகத் தலைவர்கள் ஒரு வகையினர். அந்த வகையில், தமிழகத்தில் ராஜாஜி, காமராஜர் முதலியவர்களைக் கூறலாம். மற்றொரு சாரார், சமுதாயத் தொண்டு, அரிஜனங்கள் முன்னேற்றம், தொழிற்சாலைகளைத் தோற்றுவித்து பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவது, குடிதண்ணீர், போக்குவரத்து வசதிகளை அமைத்துக் கொடுத்தல்.மேலும், விதவை விவாகம், கல்விப்பணி முதலியவற்றில் ஈடுபட்டு, சமுதாயத் தலைவர்களாக உருப்பெற்றனர். அதற்கு, டி.வி.ஆர்., போன்ற வர்களை உதாரணமாகக் கூறலாம்.

மஹாராஷ்டிராவில் திலகர் அரசியலிலும், ரானடே சமூக நலன் பணிகளுக்கும் தலைமை தாங்கினர். காந்தியடிகள் இந்த இரண்டு துறைகளிலும் தலைமையிடத்தைப் பெற்றார்; ஆனால், அரசியல் தரும் அதிகாரம் முதலிய பவிசுகளைப் பெற மறுத்து விட்டார்.இப்படி, சமுதாயம் நலம் பெற உழைத்த டி.வி.ஆர்., அதற்கான போர்க்கள கருவியாக உருவாக்கியது தான், 'தினமலர்' நாளிதழ். நாஞ்சில் மண்ணை தமிழகத்துடன் சேர்க்க, பலமான ஆயுதம் வேண்டும்; அந்த ஆயுதம், பத்திரிகை தான் என்பதை உணர்ந்தார். அவரது பூர்வீகச் சொத்துக்கள், வருமானம் என அனைத்தையுமே பத்திரிகை என்ற ஆழ்கடலில், நாஞ்சில் மக்களுக்காக கொட்டினார். இதைக் கண்ட மற்றவர்கள் எல்லாம் இரங்கல் கருத்துத் தெரிவித்தனரே தவிர, செயலளவில் ஒத்துழைப்பு தரவில்லை. அவர் தன்னந்தனியாக நின்று போராட வேண்டி வந்தது.

வேற்றுமை உணர்ச்சி

'தினமலர்' மட்டுமே தமிழர்களுக்குப் போர்வாளாக இருந்து வந்தது. அது மட்டும் போதாது என உணர்ந்த டி.வி.ஆர்., திருவிதாங்கூர் தமிழர் தலைவர்களை, சென்னை சென்று, அங்கிருந்து வெளியாகும் பத்திரிகை அதிபர்களைச் சந்தித்து, நிலைமையை விளக்க வற்புறுத்தினார்.பின், சென்னையில் இருந்து பிரபல நாள், வார, மாத இதழ் பத்திரிகையாளர்களை வரவழைத்து, தமிழ் பகுதி முழுதும் சுற்றுப்பயணம் செய்ய ஏற்பாடு செய்தார். இதன் பிறகே, மலையாளப் பத்திரிகைகள் தவிர, மற்ற அகில இந்திய, தமிழகப் பத்திரிகைகளின் எழுத்தில் மாற்றம் ஏற்பட்டது.இதன் எதிரொலியாக 1950ல், கன்னியாகுமரியில் தென்குமரி எல்லை மாநாடும் நடைபெற்றது. மாநாட்டில் நாஞ்சில் நாடு தமிழகத்தோடு இருப்பது தான் சரியாக இருக்கும் என்பது, பலவித எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டது.

அந்த மாநாட்டில், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பேசியதாவது:திருவிதாங்கோட்டுத் தமிழர்கள், அண்மையில் இருக்கும் தாய்த் தமிழகத்தோடு இணைய விரும்புகின்றனர். தமிழ் நாட்டவரும் இவர்களைச் சேர்த்துக்கொள்ள ஆசைப்படுகின்றனர்.இந்நிலையில் இவ்விருசாராரையும் இணைத்து வைப்பது ஒன்றே, ஆளும் அதிகாரிகளின் கடமை. கேரளர் இதில் தலையிட்டுக் கலைக்க முயல்வது ஒரு சிறிதும் நியாயமாகாது.'தமிழர்கள் ஏன் பிரிந்து போக வேண்டும்... வேற்றுமை உணர்ச்சியின்றி இன்று போல் என்றும் இருந்தால் என்ன?' என்று சிலர் கேட்கின்றனர்.

ஜீவாவும், டி.வி.ஆரும்...

தமிழன் என்றும் மலையாளி என்றும் வேற்றுமை பாராத ஒரு பொது மன்னர், ஒரு பொது அரசாங்கம் இருந்த காலம் வரை யாருக்கும் இந்தப் பிரிவினை உணர்ச்சி உண்டானதில்லை.'நாம் மலையாளிகள்; மலையாளப் பகுதிகள் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டி ஒரு மலையாள மாகாணம் அமைக்க வேண்டும்' என, எப்போது மலையாளிகள் கருதி விட்டனரோ, அன்றே வேற்றுமை உணர்ச்சி வேரூன்றி விட்டதல்லவா?அதற்கு மேல், சிறுபான்மை சமூகத்தினரான தமிழர்கள் ஆட்சியாளர்களின் தயவை எதிர்பார்த்து வாழ்வதைத் தவிர நியாயமான உரிமையைப் பெற்று வாழ முடியுமா?இந்த சந்தேகம் தமிழர்கள் உள்ளத்தில் எழுவது இயல்பு தானே?

இதற்குள் தமிழர் இகழப்பட்டு விட்டனர்; புறக்கணிக்கப்பட்டு விட்டனர். இதை நிரூபிக்க எத்தனையோ சான்றுகள் தர முடியும்.இன்று, திருவிதாங்கோடு முழுமையும், 'ஒரே நாடு... ஒரே நாடு' என்று சொல்வதெல்லாம், குப்பிகளில், தண்ணீரும், எண்ணெயும் நிறைத்து, 'கார்க்'கினால் இறுக மூடி, ஒன்றெனக் காட்டுவதற்கு ஒப்பேயன்றி வேறல்ல. உண்மை யாவரும் அறிந்ததே.

செந்தமிழ்ச் செல்வர்களே... நீங்கள் தமிழகத்தின் எல்லையை வாதிட்டு, வழக்காடி நிலைநாட்டி விட்டீர்கள். 'மதராஸ் மனதே' என்ற தெலுங்கர்களின் பேச்சு அடங்கிவிட்டது. இப்போது தென் எல்லைக்கு வந்திருக்கிறீர்கள்.இங்கும், 'நாஞ்சில் நாடு ஞங்களோடது' என்ற பேச்சையும் அடக்கி, வெற்றிக் கொடியேற்றி, வீரத் தமிழர் முரசை முழக்குவீர் என்பதில், யாதும் ஐயமில்லை எனக்கு.இவ்வாறு, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை முழங்கினார்.

ஆந்திரர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கும், போலிக் கண்ணீருக்கும், மத்திய சர்க்கார் பணிந்து, சென்னையை ஆந்திராவின் தற்காலிகத் தலைநகராக்கத் தீர்மானித்திருந்தது. ராஜாஜி ஒருவர் முழு பலத்தோடு எதிர்த்ததன் பயனாக, பகீரதன் கங்கையைக் கொண்டு வந்தது போல, சென்னையைத் தமிழர்களுக்குக் கொண்டு வந்தார். அது போலத் தான் கொஞ்சமும் சோர்ந்து போகாது, 'தினமலர்' மூலமாக தலையங்கம், கட்டுரைகள், செய்திகள் என்று எழுதி எழுதி, நாஞ்சில் நாட்டை நம் நாடாக்கினார் டி.வி.ஆர்.,இதற்காக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கும், டி.வி.ஆர்., பின்புலமாக இருந்தார். இவரது பள்ளிக்கால பால்ய நண்பர் தான் கம்யூ., தலைவர் ஜீவானந்தம். தன் நண்பருக்காக பல முறை, மேடைகளில் ஏறி ஆவேசமாக பேசினார்.

அவரது பேச்சின் ஒரு பகுதி: இன்று, சரித்திரம் கண்டறியாத எழுச்சி அலை வீசுகிறது. விடுதலைப் போராட்டத்தில் மக்கள் ஊழிக்காலக் கடல் போல கொந்தளிக்கின்றனர். மூணாற்றில் இருந்து குமரி முனை வரை உணர்ச்சி வெள்ளம் கடல் மடை திறந்து பாய்கிறது.'வெற்றியின்றேல் வீரமரணம்' என்ற வீர எக்காளம்,பழம்பெரும் தேச பக்தர் எம்.ஈ.நாயுடுவின் திருவாயிலிருந்து, ஆரம்பப் பாடசாலை சின்னஞ்சிறு மாணவன் சிறுவாய் வரை முழங்கி, பூமியைக் கிடுகிடுக்கச் செய்கிறது. 'ஐக்கிய தமிழகம் அடைந்தே தீருவோம்' என்ற பேரிகை, ஜாதி, மத, கட்சி பேதங்களைத் தாண்டி ஒலியும், எதிரொலியுமாக முழுங்குகிறது. தமிழ் மக்களின் இதய கீதம் உச்சஸ்தாயியில் பரணி பாடுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

நாஞ்சில் நாடு நம் கையைவிட்டு போய்விடும் என்றால், அதற்கு, 'தினமலர்' தான் காரணம் என்று, பெயர் சொல்லாமல், அன்றைய திருவிதாங்கூர் முதல் அமைச்சர், 'பட்டம்' தாணுப்பிள்ளை கடுமையாகசாடினார்; எச்சரிக்கை விடுத்தார்.அரசுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும் என்று பயமுறுத்திப் பார்த்தார். ஆனால் எதற்கும் டி.வி.ஆர்., அஞ்சவில்லை, அசரவில்லை. மாறாக, முன்னிலும் வேகமாக இந்த பிரச்னையில் அணுகினார்.

நினைவை போற்றுவோம்

'இது நம் ஜீவ மரணப் போராட்டம். ஒவ்வொருவரும் ஒரு வீரன் எனக் கச்சை கட்டிப் போராட்டத்தில் இறங்க வேண்டும்; கோழையாகக் கூடாது. உரிமைப் போராட்டம் நாட்டுக்கான போராட்டம் என்ற தன்னம்பிக்கையோடு இறங்க வேண்டும்' என்று போராட்டத்தை தன் எழுத்தால், மக்கள் போராட்டமாக்கினார்.திருவிதாங்கூர் தமிழர்கள் தாய்த் தமிழகத்துடன் இணைவதற்கான போராட்டம், நவம்பர் 1, 1956ல் வெற்றி பெற்றது. அன்று, கன்னியாகுமரி மாவட்டம் முழுதும், தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.சரித்திரம் கண்டிராத முறையில், திருவிதாங்கூர் தமிழகத்தில் உள்ள வீடுகளும், வீதிகளும், அரசாங்க அலுவலகங்களும் மற்றும் பொது நிறுவனங்களும் கொடி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

கன்னியாகுமரி முதல், களியக்காவிளை வரை, பிரதான சாலையில் நூற்றுக்கணக்கான அலங்கார வளைவுகள் போடப்பட்டிருந்தன. நாஞ்சில் நாடு உதயமானது. இன்று, கன்னியாகுமரி மாவட்டமாக பொலிவு பெற்று, தேசத்தின் பெருமைமிகு அடையாளமாக விளங்குகிறது.இதற்கு காரணமான, 'தினமலர்' நிறுவனர் டி.வி.ஆர்., நினைவை போற்றுவோம்.நன்றி: கடல் தாமரை -'தினமலர்' நிறுவனர் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு நுால்.


கட்டுரையாளர்: எல்.முருகராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation