ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க தேவையான அரிசியை விரைந்து வழங்க தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வேண்டுகோள்

பதிவு செய்த நாள் : 09 ஏப்ரல் 2021 18:03

சென்னை

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்கத் தேவையான அரிசியை பள்ளிவாசல்களுக்கு விரைந்து வழங்குக என தமிழ்நாடு அரசு தலைமை செயலாளருக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா எழுதியுள்ள கடிதம் வருமாறு:

இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான். இஸ்லாமியர்களின் காலண்டரின் ஒன்பதாவது மாதம் புனித ரமலான் மாதம். நிலவின் நிலைகளை அடிப்படையாகக் கொண்ட சந்திர நாள்காட்டியை இஸ்லாமிய மக்கள் பின்பற்றுகின்றனர். அமாவாசை முடிந்து பிறை தெரியும் நாளில் இருந்து மாதம் தொடங்கும். இந்த ஆண்டு புனித ரமலான் மாதம் ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்குகிறது. மே 14ஆம் தேதிவரை நோன்பு கடைபிடிக்கின்றனர்.

பசியோடும் தாகத்தோடும் இறை நம்பிக்கையோடு நோன்பு இருப்பது ஒரு தவம். பசியை கட்டுப்படுத்துவதன் மூலம் மனிதன் சுய ஒழுக்கத்தையம் சுய தன் அடக்கத்தையும் பெறுகிறான். புனித ரமலான் மாதத்தில் விடியற்காலை 4 மணிக்கு சாப்பிட்டு, நோன்பை ஆரம்பிப்பார்கள். சூரிய உதயத்துக்கு முன்பாகவே காலை 5 மணிக்கு நோன்பு தொடங்கிவிடும். சூரியன் அஸ்தமனமான பிறகு மாலை 6 மணிக்கு பிறகு நோன்பை முடித்துக்கொள்வார்கள். நோன்பு திறப்பதற்கு இப்தார் என பெயர்.

இப்தார் திறப்பின் போது பள்ளிவாசல்களில் தரப்படும் நோன்பு கஞ்சி மற்றும் பேரிட்சம் பழங்கள் கொண்டு நோன்பை நிறைவு செய்கிறார்கள். நோன்பு நிறைவு செய்வதற்கு முந்தைய பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக இறைவன் வாக்குறுதி அளிக்கிறார். அதன் பொருட்டு இஸ்லாமிய மக்கள் இறைவனுக்காக நோன்பு இருக்கின்றனர்.

அந்த வகையில் இந்தாண்டு, 13-ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கவுள்ளது.  ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க தேவையான அனுமதியை கடந்த 2001 ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். அதன்படி ஆண்டுதோறும் நோன்பு கஞ்சி தயாரிக்க தேவையான அரிசியை  பள்ளிவாசல்களுக்கு தமிழக அரிசி தொடர்ந்து வழங்கி வருகிறது.

அந்த வகையில் வரும் 13ம் தேதி ரமலான் மாத நோன்பு தொடங்கவுள்ளதால், இது பள்ளிவாசல்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கப்படவில்லை. ஆகவே இனியும் காலதாமதம் செய்யாமல் நோன்பு கஞ்சி தயாரிக்க தேவையான அரிசியை பள்ளிவாசல்களுக்கு அளிக்குமாறு தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

10 மணி வரை தொழுகைக்கு அவகாசம்

அதே போன்று ரமலான் மாதத்தில் இரவு நேரங்களில் தராவீஹ் தொழுகை தொழுவது வழக்கம். ஆனால் 8 மணிக்குள் வழிபாட்டுத் தலங்களை மூடிவிட வேண்டுமென தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்புக்காக தற்போது அறிவித்ததை 8 மணிக்கு பதிலாக 10 மணி வரை என மாற்றி அறிவிக்க வேண்டுமெனும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.