முன்னுரிமை கடன் துறை கடன் வரம்பு ரூ.75 லட்சமாக உயர்வு: சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 07 ஏப்ரல் 2021 21:22

மும்பை

விவசாயிகளுக்கும் முன்னுரிமை கடன் துறையை சார்ந்தவர்களுக்கும் கடன் வழங்கும் உச்ச பட்ச அளவு ரூ50 லட்சத்தில் இருந்து 75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தலைவர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கமிட்டி இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி. பணவீக்கம் .ஏற்றுமதி-இறக்குமதி ஆகிய துறைகள் குறித்து கவனம் செலுத்தியதோடு தொழில்துறையின் உற்பத்தி பெருகவும் விவசாயத்துறையில் உற்பத்தி பெருகவும் அடிப்படையான சில மாறுதல்களை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார் .

விவசாயிகளுக்கான கடன் தொகை உயரவேண்டும் என்பதற்காக  தனிப்பட்ட விவசாயிகளுக்கு அனுமதிக்கப்படும் கடன் தொகையின் அளவு ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.75 லட்சமாக  உயர்த்தப்பட்டு இருப்பதாக சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டார் .இதற்காக விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சேமிப்பு கிடங்குகளில்( NWR/electronicNWR) வைத்திருப்பதற்கான ரசீதுகளை காட்டி அடமான கடனாக ரூ. 75 லட்சம் வரை கடன் பெறலாம். பதிவு செய்யப்பட்ட சேமிப்பு கிடங்குகள் வழங்கும் எலக்ட்ரானிக் ரெசிப்ட்கள் இந்த கடன் தொகையை பெறுவதற்கு போதுமான ஆவணமாக கருதப்படும்.

மற்ற சேமிப்பு கிடங்கு ரசீதுகள் அடிப்படையில் முன்புபோல ரூ.50 லட்சம் வரை தனிப்பட்டவர்கள் கடன் பெறலாம்.

வங்கிகளின் சுமையை குறைக்க…

 வங்கிகள் கையில் கடன்களுக்கு ஈடுகட்ட ஒப்படைக்கப்பட்ட சொத்துகளின் அளவு பெருகி வருகிறது .அந்த சொத்துக்களை பராமரிப்பதும் அவற்றை விற்று கடன் தொகைக்கு உரிய தொகைகள் வங்கிகளுக்கு கிடைக்கவும் உதவ  இரண்டு கம்பெனிகள் அமைக்கப்படும் என்று வரவு-செலவுத் திட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார் .அதற்கிணங்க இந்திய ரிசர்வ் வங்கி இரண்டு கம்பெனிகளை துவக்கு வதாகவும் சக்திகாந்த தாஸ் கூறினார்.

ஏற்கனவே வராக்கடன் சொத்துக்களை பராமரிப்பதற்காக பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன இந்த நிறுவனங்கள் இயக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக நிபுணர்கள் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழு தீர்மானித்துள்ளதாக சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டார்

தனியாருக்கு அனுமதி

காசோலைகள் நிதி ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பணம் வழங்குவதற்காக சென்டிரலைஸ்டு பேமெண்ட் சிஸ்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி நடத்திவருகிறது இந்த சிஸ்டத்தில் தனியார் நிதி அமைப்புகளுக்கு இடம் இதுவரை தரப்படவில்லை இந்த நிலையை மாற்றி குறிப்பிட்ட வகை தனியாருக்கு மட்டும் இடம் அளிப்பது என்றும் நாணயக் கொள்கை கமிட்டி முடிவு செய்திருப்பதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார் இதன்மூலம் ஆவணங்களுக்கு காசோலைகளில் பணம் கிடைப்பதற்கான கால அவகாசம் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.