ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு தகுதியானவர் : ராகுல் காந்தி கருத்து

பதிவு செய்த நாள் : 07 ஏப்ரல் 2021 21:04

புதுடில்லி,

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தனது டுவிட்டரில் கோவிட் -19 தடுப்பூசி தொடர்பான மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷணின் கருத்துக்கு பதிலளித்துள்ளார். "தேவைக்கு எதிராக தேவை" என்ற விவாதம் நடத்துவது நகைப்புக்குரியது. ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பான வாழ்க்கைக்கான வாய்ப்பைப் பெற தகுதியுடையவர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்தியாவில் அனைவருக்கும் போடும் வகையில் தடுப்பு மருந்தின் அளவை அதிகரிப்பது சாத்தியமில்லை என தெரிவித்தார்.

இந்தியாவில் தடுப்பூசி போடுவது தொடர்பாக ஒரு அறிவியல் நெறிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதனால் திடீரென்று தடுப்பு மருந்துகளை அதிகரிக்க சாத்தியமில்லை.

அரசாங்கத்தின் நோக்கம் தேவையான அனைவருக்கும் தடுப்பூசி போடுவதே தவிர தடுப்பூசி விரும்புவோருக்கு அல்ல. மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களை குறிவைத்து மரணங்களைத் தடுப்பதே தடுப்பூசி போடுவதற்கான நோக்கம் என ராஜேஷ் பூஷண் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ராகுல் காந்தி "தேவைகள் மற்றும் விருப்பங்களை விவாதிப்பது நகைப்புக்குரியது. ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பான வாழ்க்கைக்கான வாய்ப்புக்கு தகுதியானவர் ”என்று டுவிட்டரில் இன்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு டுவிட்டில் இந்தூரில் முககவசம் அணியாததற்காக போலீசார் ஒருவரை இரக்கமின்றி அடித்த வீடியோவையும் ராகுல் பகிர்ந்துள்ளார்.

"கொரோனா விதிகளை அமல்படுத்துவது என்ற பெயரில், இத்தகைய வெட்கக்கேடான மனிதாபிமானமற்ற தன்மை நாட்டுக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது. காவல்துறையினர் மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக சித்திரவதை செய்யத் தொடங்கினால் மக்கள் எங்கே போவார்கள்? ” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில் மக்களவை எம்.பி. மனீஷ் திவாரி இளைஞர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்யுமாறு சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் டுவிட்டரில் கேட்டுக்கொண்டார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் செய்தியாளார்கள் சந்திப்பில், செய்தித் தொடர்பாளர் பவன் கெரா அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை மீண்டும் வலியுறுத்தினார். மேலும் பலவிதமான தடுப்பூசிகளைக் கொண்டுவர அதிக உற்பத்தியாளர்களை அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

"இது மிகவும் உணர்ச்சியற்ற கருத்து. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்கும் தடுப்பூசி அதை கொண்டு வரும் சாமானியருக்கு இல்லை என்பதை யார் முடிவு செய்கிறார்கள் என்று நான் கேட்கிறேன்" என்று பவன் கெரா கேள்வி எழுப்பினார்.