உலகிலேயே அதிக கோடீஸ்வரர்களை கொண்ட 3வது நாடு இந்தியா : ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை தகவல்

பதிவு செய்த நாள் : 07 ஏப்ரல் 2021 19:13

நியூயார்க்,

பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் புதிய பட்டியலின்படி, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக கோடீஸ்வரர்களை கொண்ட 3வது நாடாக இந்தியா உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஆசியாவின் பணக்காரர் என்ற இடத்தை மீண்டும் பெற்றுள்ளார்.  ஒரு வருடத்திற்கு முன்பு இந்த இடத்தை சீன வணிகர் ஜாக் மா பெற்றது குறிப்பிடத்தக்கது.  

ஃபோர்ப்ஸின் 35 வது ஆண்டு உலகின் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்.

அமேசான் பங்குகளை உயர்த்தியதன் விளைவாக அவரது நிகர மதிப்பு 17,700 கோடி டாலர். இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட 6400 கோடி டாலர் அதிகம் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் இடம்பெற்றுள்ளார். டாலர் அடிப்படையில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 15,100 டாலராக உயர்ந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பை விட 1,260 கோடி டாலர் அதிகமாகும். அவர் கடந்த ஆண்டு 31 வது இடத்தைப் பிடித்த நிலையில் ஒரே ஆண்டில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெஸ்லா பங்குகளில் 705 சதவீத ஏற்றம் ஏற்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என்று ஃபோர்ப்ஸ் கூறியுள்ளது.

இந்தியாவின் பணக்காரர் மற்றும் ஆசியாவின் செல்வந்தரான முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளார்.

8450 கோடி டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் பணக்காரர் என்ற இடத்தை அவர் மீண்டும் பெற்றுள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னர் ஆசியாவின் பணக்காரரான சீனாவின் ஜாக் மாவை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது பணக்காரரான அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் 5,050 கோடி டாலர் சொத்து மதிப்புடன் 24 வது இடத்தில் உள்ளார்.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான பூனவல்லா குழுமத்தின் தலைவரும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் நிறுவனருமான சைரஸ் பூனவல்லா, ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 169 வது இடத்தில் உள்ளார். இவரது சொத்துக்களின் நிகர மதிப்பு 1270 கோடி டாலர் ஆகும்.

சைரஸ் பூனவல்லா இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில் ஏழு இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் மூன்றாவது பணக்காரரான ,எச்.சி.எல் டெக்னாலஜிஸின் நிறுவனர் சிவ் நாடார், உலகளவில் 71 வது இடத்தில் உள்ளார். இவரது நிகர மதிப்பு 2350 கோடி டாலர் ஆகும்.

"மூன்று பணக்கார இந்தியர்கள் மட்டும் அவர்களுக்கு இடையே 10,000 கோடி டாலர்களைச் சேர்த்துள்ளனர்" என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு 3வது இடம்

உலகளவில் மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் மொத்தம் 724 கோடீஸ்வரர்கள் உள்ளனர் (கடந்த ஆண்டு 614 ஆக இருந்தது). சீனா 698 கோடிஸ்வரர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டு 456 ஆக இருந்தது.

"சீனாவில் கிடைத்த லாபங்களின் விளைவாக, பெய்ஜிங் உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு அதிகமான கோடீஸ்வரர்களைக் கொண்டுள்ளது, இது நியூயார்க் நகரத்தை முந்தியுள்ளது" என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

அதிக எண்ணிக்கையில் கோடீஸ்வரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 140 பணக்காரர்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது, அடுத்தப்படியாக ஜெர்மனி 136, ரஷ்யா 117 ஆகியவை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் முதல் 10 கோடீஸ்வரர்களில் டிமார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமானி, கோட்டக் மஹிந்திரா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி உதய் கோட்டக், ஆர்சலர் மிட்டலின் லட்சுமி மிட்டல், ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திலீப் ஷாங்க்வி மற்றும் பாரதி எண்டர்பிரைசின் நிறுவனர் சுனில் மிட்டல் ஆகியோர் அடங்குவர்.