மத்திய ரிசர்வ் படையினர் வாக்களிக்க வந்த பெண்களை தாக்கியதாக மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் : 07 ஏப்ரல் 2021 18:52

பானேஸ்வர்,

மேற்குவங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் பானேஸ்வர் என்ற பேரணியில் இன்று உரையாற்றிய முதல்வர் மம்தா பானர்ஜி, தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலின் போது மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பெண்களை துன்புறுத்தியதாகவும், மக்களை அடிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

"அவர்கள் வாக்களிக்க வந்த வாக்காளர்களைத் தடுக்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவ்வாறு செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்" என்று திருமதி பானர்ஜி சாடினார்.

நடந்து வரும் தேர்தல்களின் போது மாநிலத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மம்தா பானர்ஜி கூறினார்.

"தேர்தல் ஆணையம் நிர்வாகத்தை நடத்தி வருகிறது. வாக்குப்பதிவின் போது யாரும் கொல்லப்படுவதில்லை என்பதை தயவுசெய்து உறுதி செய்யுங்கள். இப்போது மாநிலத்தில் கடமையில் இருக்கும் சிஆர்பிஎஃப் பணியாளர்களை கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பெண்களை துன்புறுத்த அவர்கள் அனுமதிக்கக்கூடாது. பெண்கள் சி.ஆர்.பி.எஃப் வீரர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக வழக்குகள் உள்ளன’’ என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

செவ்வாயன்று மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின் போது இரண்டு பெண்கள் உட்பட ஐந்து வேட்பாளர்கள் தாக்கப்பட்டனர். கட்சி தொண்டர்கள் இடையே மோதல்கள் வெடித்தன.

அரம்பாக் தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சுஜாதா மொண்டல் சிலரால் வெட்ட வெளியில் துரத்தப்பட்டத்தை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டது. அவரது தலையில் குச்சிகளையும் இரும்புக் கம்பிகளையும் பயன்படுத்தி, அவர்கள் தாக்கினர். இதில் அவரது பாதுகாப்பு அதிகாரியும் காயமடைந்தார்.

இதேபோல் பாஜகவை சேர்ந்த பாபியா ஆதிகாரி மற்றும் ஸ்வாபன் தாஸ்குப்தா மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் டாக்டர் நிர்மல் மாஜி மற்றும் நஜ்முல் கரீம் ஆகியோரும் தாங்கள் பட்டப்பகலில் தாக்கப்பட்டதாக தெரிவித்தனர்.