5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு : தமிழகத்தில் 71.79% வாக்குகள் பதிவு

பதிவு செய்த நாள் : 06 ஏப்ரல் 2021 19:39

புதுடில்லி,

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுப்பெற்றது. தமிழகத்தில் 71.79 சதவீத வாக்குகளும் புதுச்சேரியில் 81.55 சதவீத வாக்குகளும் பதிவானது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாமில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மேற்குவங்கத்தில் மற்றும் அசாமில் இன்று மூன்றாம் கட்டமாக தேர்தல் நடந்தது.

இதைத் தவிர தமிழகம் மற்றும் கேரளாவில் மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கோவிட் 19 தடுப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. பல வாக்குச்சாவதிகளில் வாக்காளர்களுக்கு கையுறை, இலவச முக கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகள் வழங்கப்பட்டன.

தமிழகம்

மொத்தம் 234 தொகுதிகளில் தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. 

வாக்குப்பதிவு முடிவில் மொத்தம் 71.79  சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறினார். அதிகப்பட்சமாக கரூர் மாவட்டத்தில் 77.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.  

இந்த முறையும் மாநிலத்தில் மிக குறைந்தப்பட்சமாக சென்னையில் வெறும் 50.56 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. அதிலும் குறிப்பாக கீழ்பாக்கில் வெறும் 92 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். கடந்த முறை இங்கு 162 பேர் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் அதிமுக மற்றும் திமுக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அதிமுக எம்.எல்.ஏ வி ராஜேந்திரனின் கார் சேதப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மற்றப்படி வேறு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் தேர்தல் அமைதியாகவும் சுமூகவாகவும் நடந்து முடிந்ததாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொளத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் புதிய எந்திரம் வரும்வரை மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கன்னியாக்குமரியில் நடந்த மக்களவை இடைத்தேர்தலில் இன்று 62.41 சதவீத வாக்குகள் பதிவானது.

புதுச்சேரி

புதுச்சேரியின் 30 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிவில் 81.55 சதவீத வாக்குகள் பதிவானது. புதுச்சேரி மாவட்டத்தில் 81.84 சதவீதம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் 80.01 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

கேரளா

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 6 மணி முடிவில் 70.58 சதவீத வாக்குகள் பதிவானது. அதிகப்பட்சமாக கன்னூரில் 73.47 சதவீத வாக்குகளும் குறைந்தப்பட்சமாக பந்தனம்திட்டாவில் 65.36 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

அதேபோல் கேரளா, மலப்புரம் தொகுதியில் நடந்த மக்களவை இடைத்தேர்தலில் 69.58 சதவீத வாக்குகள் பதிவானது.

வாக்குப்பதிவின் போது ஆங்காங்கே ஏற்பட்ட சில வன்முறை சம்பவங்கள் நடந்தன. பயலூர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரி ஒருவர் கம்யூனிஸ்ட் தொண்டர்களால் தாக்கப்பட்டார்.  இதனால் வாக்குப்பதிவு அரைமணி நேரம் நிறுத்தப்பட்டது.

இந்த தேர்தல் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் மற்றும் இல்லாதவர்களுக்கு இடையேயான மோதல் என்று எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் நாயர் சேவை சமூக அமைப்பின் பொது செயலாளர் ஜி. சுகுமாரன் நாயர் கூறியதாக தாழ்த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஏ.கே. பாலன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இது போன்ற சம்பவங்களை தவிர்த்து பெரும்பாலும் வாக்குப்பதிவு அமைதியாகவே நடைபெற்றது.

மேற்குவங்கம்

மேற்குவங்கத்தின் 31 தொகுதிகளில் இன்று சட்டமன்ற தேர்தலின் 3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவில் 77.68 சதவீத வாக்குகள் பதிவானது.

வாக்குப்பதிவின் போது சில வன்முறை சம்பவங்கள் நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன.

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் சுஜாதா மொண்டல் மற்றும் நிர்மல் மஜ்ஹி ஆகியோர் தங்களை பாஜக தொண்டர்கள் தாக்கியதாக புகார் அளித்தனர். ஆனால் பாஜக இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

பிஷ்னுபூர் மற்றும் பாகனன் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தங்களை அச்சுறுத்தியதாக அப்பகுதி கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

அசாம்

அசாம் மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 40 தொகுதிகளில் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவில் 82.33 சதவீத வாக்குகள் பதிவானது.

வாக்குப்பதிவு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட விவகாரங்கள் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகித்துள்ளதால் இந்த சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இதற்கிடையில் ஏப்ரல் 1ம் தேதி நடைபெற்ற 2ம் கட்ட வாக்குப்பதிவின் போது பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக 5 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் இன்று கூறினர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அசாம் துணை சபாநாயகர் அமுனுல் ஹாக் லஸ்கரிடம் இருமுறை விசாரணை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.