உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம்

பதிவு செய்த நாள் : 06 ஏப்ரல் 2021 14:29

புதுடில்லி

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்து உத்தரவு பிறப்பித்து உள்ளார். இவர் ஏப்ரல் 24ம் தேதி முதல் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.  

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியான எஸ்.ஏ. போப்டேவின் பதவி காலம் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யாரை நியமிப்பது என்பது குறித்து பரிந்துரை அளிக்கும்படி தற்போதைய தலைமை நீதிபதியான போப்டேவிற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் அனுப்பினார்.

இதற்கு, உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி. ராமணாவின் பெயரை போப்டே பரிந்துரை செய்து அனுப்பினார். எஸ்.ஏ போப்டேவுக்கு அடுத்தப்படியாக உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருப்பவர் என்.வி. ராமணா.

ஆனால் இந்த பரிந்துரைக்கு எதிராக ஆந்திரபிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மனு தாக்கல் செய்தார்.

ஆந்திர உயர்நீதிமன்ற வழக்குகளில் நீதிபதி என்.வி ரமணா தலையிட்டு தனது அரசை நிலைக்குலைய செய்ய முயன்றதாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டினார். ஆனால் அவரது இந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் எஸ்.ஏ. பாப்டேவின் பரிந்துரை   ஏற்கப்பட்டு உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி ரமணா நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது பதவிக்காலம் ஏப்ரல் 24ம் தேதி முதல் துவங்கும். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

என்.வி ரமணா உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்கவுள்ளார். இவர் 2022 ஆகஸ்ட் மாதம் வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியில் இருப்பார்.

ஆந்திர மாநிலத்தில் பிறந்த என்.வி.ரமணா  விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.