பிப்ரவரி மாதம் 8 முக்கிய துறைகளில் உற்பத்தி சரிவு

பதிவு செய்த நாள் : 01 ஏப்ரல் 2021 12:55

புதுடெல்லி

கடந்த பிப்ரவரி மாதம் மின்சாரம், இரும்பு, உருக்கு, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, கச்சா எண்ணெய் உற்பத்தி, நிலக்கரி உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி, இயற்கை எரிவாயு உற்பத்தி, உரங்கள் உற்பத்தி ஆகிய 8 உற்பத்தி துறைகளிலும் உற்பத்தி 4.6 சதவீதம் சரிந்துள்ளது.

இந்த சரிவு காரணமாக ஒட்டுமொத்த தொழில்த் துறையிலும் வரும் காலங்களில் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எட்டுத் துறைகளிலும் உற்பத்தி தொடர்பான புள்ளிவிவரங்கள் புதன்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ளன. அந்தப் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் உற்பத்தி சரிவு கணக்கிடப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சரிவு 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஏற்பட்ட படைப்புகளில் மிகவும் அதிகமானதாக அமைகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 8 அடிப்படை துறைகளிலும் உற்பத்தி குறைந்து எதிர்மறையில் வளர்ச்சி ஏற்பட்டது இந்த எதிர்மறை வளர்ச்சி அளவு 6.9 சதவீதமாக அமைந்தது. இந்த வளர்ச்சி சரிவு படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது கடந்த ஜனவரி மாதத்தில் இந்த எட்டு துறைகளிலும் உற்பத்தி 0.9% அதிகரித்தது.

புதன்கிழமை வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்படி நிலக்கரி உற்பத்தி 4.4 சதவீதமும், கச்சா எண்ணெய் உற்பத்தி 3.2 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 1 சதவீதமும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் கிடைக்கும் பொருட்களின் உற்பத்தி 10.9 சதவீதமும், உரங்கள் உற்பத்தி 3.7 சதவீதமும், இரும்பு உருக்கு உற்பத்தி 1.8 சதவீதமும் குறைந்தன.

மத்திய தொழில் வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி 2020 - 21 ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் 8 அடிப்படை துறைகளில் உற்பத்தி 8.3 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் முந்திய நிதியாண்டின் இதே ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் உற்பத்தி 1.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி மார்ச் மாதத்தில் இந்த 8 அடிப்படை முறைகளில் உற்பத்தி 9 முதல் 11 சதவீதம் உயரும் என்று இந்த சிமெண்ட் இன்ஃபர்மேஷன் மற்றும் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி - ICRA அறிவித்துள்ளது.