கோவில்களுக்கு விடுதலை! – சத்குரு அழைப்பு

பதிவு செய்த நாள் : 09 மார்ச் 2021

தேர்தல் பரபரப்பில் தமிழகம் இயங்கிக் கொண்டு இருக்கும் நேரத்தில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஆன்மீக குரு சத்குரு ஜக்கி வாசுதேவ், தமிழர்களின் வாழ்வியலோடும், ஆன்மாவோடும் கலந்த கோவில்களை மீட்டெடுக்க வேண்டிய தேவை குறித்த தனது கோரிக்கையை முன்னிலைப்படுத்தி உள்ளார்.

‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க கூடாது‘ என்ற நமது பழமொழி, ஆயிரமாயிரம் ஆண்டு காலமாக கோவில்கள் நமது வாழ்க்கை முறையோடு ஒன்றியிருப்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது.

கோவில்கள் தமிழர்களின் வரலாற்று பெட்டகங்களாக திகழ்ந்து வருகின்றன.

நாம் பல கோவில்களை தரிசித்து கடவுள்களின் ஆசியை பெற்று வருகின்றோம். சிதிலமடைந்த கோவில்களை நாம் பார்க்கும்போது, சில நிமிட வருத்தத்தோடு நாம் அதைக் கடந்து சென்று விடுகிறோம். ஆனால், கோவில்களின் கட்டுப்பாடு, பராமரிப்பு மற்றும் அதில் இருக்கும் அரசியல் குறித்து நாம் அறிய முயற்சிப்பதில்லை..

தமிழக மக்களின் ஓட்டுகளைப்பெற, அவர்களைக் கவரும் பல அறிவிப்புகளை, வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. இந்த ஆறிவிப்புகளில் பல மக்களுக்கு இலவசங்கள், பண உதவிக்கு உறுதி அளிப்பவையாக இருக்கின்றன.

இந்நிலையில், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்துக் கோவில்களை, பக்தர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சத்குரு தெரிவித்துள்ளார்.

இது பற்றி அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதை அவைகள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது சம்மந்தமான கடிதத்தை கடந்த 5ம் தேதி முதல்வர் பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதில், அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை பக்தர்கள் வசம் ஒப்படைப்போம் என்ற வாக்குறுதியை தங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார். அடுத்து தமிழகத்தில் அரியணை ஏறும் எந்த அரசாக இருந்தாலும் இந்து கோவில்களை விடுப்பதை முக்கியத் திட்டமாகக் கொள்ள வேண்டும் என்பதே அவர் கோரிக்கை.

கோவில்கள் விடுதலை தொடர்பாக சத்குரு டுவிட்டரில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘நமது தமிழ் கலாச்சாரத்துக்கு மூலமானது நமது கோவில்கள், நமது நெஞ்சில் இருக்கும் பக்தி. நமது மாநிலத்தின் அடையாளமாக கோவிலை வைத்திருக்கிறோம். தமிழ் கலாச்சாரத்தில் கோவில் என்பது ஆன்மா மாதிரி. இந்த ஆன்மா, அரசின் கையில் அடிமையாக இருப்பது மிகவும் மன வருத்தத்தைத் தருகிறது.

தோராயமாக 300 வருடங்களுக்கு முன்னர்  நம்மை ஆண்ட பிரிட்டிஷாரின்

கிழக்கு இந்திய கம்பெனி முதலில்  நமது கோவில்களை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. ஆன்மீகத்தினாலோ, பக்தியினாலோ இதை அவர்கள் செய்யவில்லை. கோவில்களின் கையில் இருந்த தங்கம், வைரம், நிலம்,  போன்ற சொத்துக்களுக்காக, பேராசையின் காரணமாக அவர்கள் கோவில்களைப் பிடித்துக் கொண்டனர்’, என்று சத்குரு கூறினார்.

அதைத் தொடர்ந்து வந்த இந்திய அரசும் கோவில்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால், நாடு சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகள் கழிந்த பின்னரும் நமது கோவில்களின் மீதான கட்டுப்பாடு அதே நிலையில் இருக்கின்றது. கோவில்களின் நிலை சரிவடைந்து, பாதிக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை, கோவில் பராமரிப்பு குறித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையை சத்குரு சுட்டிக்காட்டினார். அதன்படி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 11,999 கோவில்களில் ஒரு கால பூஜை கூட நிகழாமல் அழிந்து வருகின்றன. ஏறத்தாழ 34,000 கோவில்கள் ரூ. 10 ஆயிரத்துக்கும் குறைவாக வருவாய் ஈட்டி போராடிக்கொண்டு இருக்கின்றன. 37 ஆயிரம் கோவில்களில் பூஜை, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளைச் செய்ய ஒரு ஊழியர் மட்டுமே உள்ளார் என்ற தகவல்களை அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையானது, அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் பரிதாபமான நிலையைக் காட்டுவதாக உள்ளது.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இந்த நிலை தொடர்ந்தால், 50 – 100 ஆண்டுகளில் முக்கியத்துவம் வாய்ந்த சில கோவில்களை தவிர மற்ற கோவில்கள் அனைத்தையும் அழித்துவிடுவார்கள் என்ற தனது அச்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கோவில்களை இடிப்பதை விட இது மிகவும் மோசமானது. கோவில்களை இடித்தால் மக்கள் தங்கள் மனோ பலத்தால் அதனை மீண்டும் கட்டிக் கொள்வார்கள். ஆனால், இது ஸ்லோ பாய்சன் மாதிரி, மெதுவாக அழித்துவிடும்.

இதே கோவில்கள் பக்தர்கள் கையில் இருந்தால், உயிரே போனாலும், கோவில்களை காத்துக் கொள்வார்கள். எந்த மதமாக இருந்தாலும் சரி, மதத்தைச் சார்ந்தவர்கள் தான் வழிபாட்டுத் தலங்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என அரசியலமைப்பு சொல்கிறது.

இந்த சுதந்திரம் மற்ற எல்லா மதங்களுக்கும் இருக்கிறது.

நமது கோவில்களுக்கு மட்டும் அடிமைத்தனம் வாய்த்துள்ளது. ’, என்றார் சத்குரு..

மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கும் நமது நாட்டில், கோவில்களின் இந்த அடிமை நிலையை மாற்றியே ஆக வேண்டும் என சத்குரு கூறினார். 

மதத்தில் அரசோ, அரசின் செயல்பாட்டில் மதமோ தலையிடக் கூடாது என்பதே மதச்சார்பின்மையின் தத்துவம் என்பதை நாம் மறக்கக் கூடாது என்றார் சத்குரு..

இந்த முறை தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்றால் அரசியல் கட்சிகள் ஆலயங்களை விடுவிப்போம் என்ற வாக்குறுதியை அளிக்க வேண்டும். அது பக்தர்கள் மற்றும் தமிழ் கலாசாரத்தின் மேன்மையில் அசையாத நம்பிக்கை உள்ள தமிழ் மக்களின் கையில்தான் உள்ளது. தமிழ் கோவில்களை அடிமைத் தனத்திலிருந்து விடுவிப்பதற்கான நேரம் இதுதான் என்று சத்குரு  வலியுறுத்தி உள்ளார்.

நீண்ட காலமாகவே இதனை வலியுறுத்தி வரும் சத்குரு , இந்த கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அவர்களின் ஆதரவை பெறவும் இயக்கத்தை தொடங்கி உள்ளார். மக்கள் ஆதரவைக் கோரி உள்ளார்.

தேர்தல் தருணத்தில், அரசியல் கட்சிகளின் கவனத்துக்கு இதனை ஜக்கி வாசுதேவ் கொண்டு சென்றுள்ளார். இந்திய அளவில் முக்கிய ஆன்மீகத் தலைவரான சத்குருவின் வேண்டுகோளுக்கு திராவிட அரசியல் பேசும் கட்சிகள் எந்த நிலைப்பாட்டை எடுக்கும் என்பது பெரும் கேள்விக் குறியே. ஆனால் அரசியல் கட்சிகள் ஆலயங்களின் விடுதலை குறித்த இந்த கோரிக்கையை ஒதுக்க முடியாமல் சாதகமாக பரிசீலிக்கச் செய்வது பக்தர்களின் கையில்தான் உள்ளது.

தமிழர்களின் வரலாற்றின் சான்றாகவும், வாழ்வியலின் மையமாகவும், கலாச்சாரத்தின் அடிப்படையாகவும், தமிழர்களின் ஆன்மாவாகவும் திகழும் கோவில்கள், வருமானம் ஈட்டுபவை, வருமானம் இல்லாதவை என எந்த வித்தியாசமும் பார்க்காமல் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டியவை. இதனை உணர்ந்து அரசியல் கட்சிகள் பிள்ளயார் சுழியிட்டு பணியைத் துவக்கவேண்டும் என்பதே இறை மாண்பு உணர்ந்தோர் அனைவரின் தாகமாகும்..


கட்டுரையாளர்: தொகுப்பு: ஆசிரியர் குழு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation