இந்தியாவில் 10 ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் என்ற இலக்கை விரைவில் அடைவோம் – பிரதமர் மோடி உறுதி

பதிவு செய்த நாள் : 07 மார்ச் 2021 13:46

புதுடெல்லி,

நாடு முழுவதும் 10 ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் அமைக்கும் இலக்கை விரைவில் அடைந்து  விடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.


மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 7,500-வது ஜனஅவுசதி கேந்திரா என்ற மக்கள் மருந்தகத்தை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். சுகாதாரம் மற்றும் மருத்துவ அறிவியலுக்கான வடகிழக்கு இந்திரா காந்தி பிராந்திய நிறுவனத்தில் (NEIGRIHMS),  திறந்து வைக்கப்பட்டது.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

மக்கள் மருந்தகத்தில், ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம். இந்த 7500வது மருந்தகத்துக்கு சில்லாங்கில் திறப்பு விழா நடக்கும் இன்று, வடகிழக்கு மாநிலங்களுக்கு பொது சுகாதார அமைப்புகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன என்பது தெளிவாகிறது. இந்த மருந்தகம் மலைகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

நாட்டில் உள்ள மக்கள் மருந்தகங்களின் விலை 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும். இந்த மருந்தங்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் உருவாகும். மக்கள் மருந்தகங்களுக்கான ஊக்கத்தொகை ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மருந்தக உள்கட்டமைப்புக்கு கூடுதலாக ரூ.  2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.  

இதனுடன், உற்பத்தி அதிகரிக்கப்படும் போது வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைந்த விலையில் நல்ல மருத்துவம் கிடைக்க அரசு மிகுந்த கவனம் செலுத்துவதோடு உள்கட்டமைப்பையும் மேம்படுத்துகிறது.

நாடு முழுவதும் மேலும் 2, 500 மக்கள் மருந்தகங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. 10 ஆயிரம் மருந்தகங்கள் என்ற இலக்கை விரைவில் அடைந்து விடுவோம்.

அரசின் மருத்து நலத்திட்டங்கள் ஏழை மக்களின் செலவை ஆண்டுக்கு ரூ. 12,500 கோடி சேமித்து தந்துள்ளது.  ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் 50 கோடி மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ சிகிச்சை பெற உதவுகிறது. திட்டத்தின் வாயிலாக 1.5 கோடிக்கு மேலானவர்கள் பயனடைந்து இருக்கின்றனர். இதன் மூலம் மக்களுக்கு ரூ. 30,000 கோடி சேமிக்கப்பட்டு இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

ஜனஅவுசதி, ஆயுஷ்மான் பாரத் மற்றும் மலிவு விலை மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் என அரசின் அனைத்து சுகாதார நலத்திட்டங்கள் மூலமாக ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி சேமித்துள்ளனர்.

இன்று, நாட்டில் அரசு மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் ரூ.  250 என்ற மலிவு விலைக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. நமது மருத்துவர்களை எண்ணி பெருமை கொள்கிறோம். இந்தியாவில் தாயாரிக்கப்பட்ட மருந்துகள் நமக்கும் உலகத்துக்கும் பெரும் உதவியை செய்துள்ளன. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளுக்கான தேவை உலக அளவில் அதிகரித்துள்ளது.

மருத்து கல்வியை விரிவாக்கம் செய்ய கடந்த 2014ம் ஆண்டுக்கு முன் 55,000-மாக இருந்து மருத்துவ இடங்களுடன், 6 ஆண்டுகளில் 30,000 இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன. அதே போல், 30,000 மாக இருந்த மருத்துவ உயர்கல்வி இடங்களுடன் 24, 000 புதிய இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

என்று பிரதமர் மோடி கூறினார்.

ஜனஅவுசதி வாரம் மார்ச் 1ம் தேதி தொடங்கப்பட்டு இன்று வரை நடத்தப்பட்டது. இதன் மூலம் மக்கள் மருந்தகங்கள் திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.