உச்ச நீதிமன்றத்தில் சோதனை முறையில் நேரடி வழக்கு விசாரணை; மார்ச் 15 முதல் தொடங்குகிறது

பதிவு செய்த நாள் : 06 மார்ச் 2021 22:12

புதுடெல்லி,

உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைப் பொறுத்து நேடியாகவும் வீடியோ கான்பிரன்சிங் முறையிலும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. வரும் மார்ச் 15ம் தேதி முதல் சோதனை முறையில் இது செயல்படுத்தப்பட உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பெருந் தொற்றைத் தொடர்ந்து, மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் வீடியோ கான்பிரன்சிங் மூலமே நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வழக்குகளை நேரடியாக விசாரிக்கும் முறை உடனடியாக மீண்டும் கொண்டுவர வேண்டும் என பல அமைப்புகளும், வழக்கறிஞர்களும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து மார்ச் 15ம் தேதி முதல் வழக்கின் இறுதி விசாரணை அல்லது சாதாரண விசாரணையை நேரடியாகவும் வீடியோ கான்பிரன்சிங்கும் இணைந்த ஹைபிரிட் விதத்தில் நடத்தலாம். இதன்படி செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வரும் வழக்குகள் இந்த வகையில் விசாரிக்கப்படும். எந்த வழக்கை எப்படி விசாரிக்கலாம் என்பதை நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும். வழக்கில் உள்ள கட்சிக்காரர்களின் எண்ணிக்கை, நீதிமன்ற அறையின் அளவு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு இந்த முடிவை எடுப்பார்கள். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விசாரணைக்கு வரும் வழக்குகள் வீடியோ கான்பிரன்சிங் முறையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.