அசாம் தேர்தல்; சிஏஏ எதிர்ப்பில் மாற்றமில்லை – முன்னாள் முதல்வர் பிரபுல் குமார் மஹந்தா உறுதி

பதிவு செய்த நாள் : 06 மார்ச் 2021 21:45

குவகாத்தி,

அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலில் சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என முன்னாள் முதல்வர் பிரபுல் குமார் மஹந்தா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக – அசாம் கன பரிசத் (ஏஜிபி) கட்சி கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன. இந்த தேர்தலில் ஏஜிபி கட்சிக்கு 26 இடங்களை பெற்றுள்ளது. இதில் போட்டியிடு பவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில்  மூத்த தலைவரான மஹந்தா புறக்கணிக்கப்பட்டார்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து அசாம் வந்து சேர்ந்தவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தற்போதும் குடியுரிமைச் சட்டமான சிஏஏவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என உறுதிபடத் தெரிவித்தார்.

அவருக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, எந்த கட்சி எனக்கு சீட் குடுக்கவில்லை? என எதிர்க்கேள்வி எழுப்பினார்.

ஏஜிபி கட்சியின் நிறுவனத் தலைவராக இருந்த மஹந்த், கடந்த 2005ம் ஆண்டு கட்சியில் இருந்து பிரிந்து வந்து ஏஜிபி பிரகதிஷில் (ஏஜிபி –பி) என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் அது 2008ம் ஆண்டு தாய் கழகமான ஏஜிபியுடன் இணைந்தது. ஆனால், சிஏஏ விவகாரத்தில் அதற்கு எதிரான கருத்தைக் கொண்டு இருந்ததால், கடந்த 3 ஆண்டுகளாக ஏஜிபி – பி சற்றே விலகி செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக ஏஜிபி – பி கட்சி உயிர்ப்பு பெற்று, அக்கட்சி சார்பாக அவர் களம் காணுவார் என்ற தகவல் உலா வந்து கொண்டு இருக்கிறது. இது குறித்து அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஏஜிபி – பி கட்சியின் பொதுச் செயலாளர் பிரணாப் கோசுவாமியும் கட்சி மீண்டெழுந்து மஹந்தா தலைமையில் தேர்தலில் போட்டியிட்டு சிஏஏ-வுக்கு எதிரான அரசை அமைக்க வேண்டும் என இன்று கோரிக்கை விடுத்தார்.

மஹந்தாவின் மனைவியும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெயஸ்ரீ கோசுவாமி, மாநிலத்தில் நிறத்தை காவி அபகரிப்பதை ஏஜிபி அனுமதித்துள்ளதாக கண்டனம் தெரிவித்து இருந்தார். அசாம் வரலாற்றில் முதன் முறையாக ஒரு பிராந்திய கட்சி, டெல்லிக்கு முன் மண்டியிட்டுள்ளது என சாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.