5 மாநில சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் : உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

பதிவு செய்த நாள் : 06 மார்ச் 2021 21:14

புதுடில்லி,

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து 5 மாநிலங்களிலும் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல். சர்மா இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்றத்தின் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பாகவே தேர்தல் நடைபெற உள்ளதை சர்மா சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் சட்டமன்றத்திற்கான பதவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல்களை நடத்த வேண்டும் என கோரியுள்ளார்.

மேலும் பிரதமர் நாட்டு மக்களுக்கு பொதுவானவர் என்பதால், அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்றும் சர்மா தன் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்னிலையில் மார்ச் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.