பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான் கான் அரசு வெற்றி

பதிவு செய்த நாள் : 06 மார்ச் 2021 21:00

இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் சமீபதிதில் நடைபெற்ற செனட் சபை (மேலவை) தோ்தலில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் (பிடிஐ) வேட்பாளரும், நிதியமைச்சருமான அப்துல் ஹஃபீஸ் ஷேக் தோல்வி அடைந்தார்.

எதிர்க்கட்சியான பாகிஸ்தான் ஜனநாயக இயக்க(பிடிஎம்) கூட்டணியின் வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான யூசுஃப் ராஸா கிலானி அவரை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்த தோல்வி, பிரதமா் இம்ரான் கான் அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து, பிரதமா் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கின.

இதனால், தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருப்பதாக இம்ரான் கான் அறிவித்தார். நேற்று முன் தினம் மாலை தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான், நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், ‘‘பிடிஐ கட்சியைச் சோ்ந்த தேசிய சபை உறுப்பினா்கள் தவறாது கலந்துகொண்டு எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இன்று காலை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் தேசிய சபையில் அறிவித்தப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து எதிர்க்கட்சி கூட்டணிகள் வெளிநடப்பு செய்தன. இதனால், 342- உறுப்பினர்களை கொண்ட தேசிய சபையில் பெரும்பான்மைக்கு 172 வாக்குகள் தேவை என்ற நிலையில் 178-வாக்குகளை பெற்று இம்ரான் கான் அரசு வெற்றி பெற்றது.

இதன் மூலம் தனது அரசுக்கு பெரும்பான்மை உள்ளதை பிரதமர் இம்ரான் கான் நிரூபித்துள்ளார்.