சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சருடன் இந்திய தூதர் சந்திப்பு

பதிவு செய்த நாள் : 06 மார்ச் 2021 20:34

பீஜிங்,

சீனாவில் அந்நாட்டு வெளியுறவு துறை துணை அமைச்சரான லுவோ ஜாவோஹுயை அந்நாட்டுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார். அப்போது கிழக்கு லடாக்கில் இருந்து படைகளை திரும்ப பெறும்படி விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு மே மாதம் லடாக்கின் கிழக்கு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியதால் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் ஜூன் மாதத்தில் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வன்முறையில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இதனால் இந்திய – சீன எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இருநாடுகளும் எல்லையில் ராணுவ படைகளை குவித்தன. இந்த பதற்றத்தை தணிப்பதற்காக இரு நாட்டு ராணுவம் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள்  இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இதன் பலனாக கடந்த பிப்ரவரி 10ம் தேதி முதல் கிழக்கு லடாக்கில் இருதரப்பினரும் படைகளை திரும்ப பெற்றனர். குறிப்பாக அங்குள்ள பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைப்பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப்பெறப்பட்டன.

இந்நிலையில், சீனா தலைநகர் பீஜிங்கில் அந்நாட்டு வெளியுறவு துறை துணை அமைச்சர் லுவோ ஜாவோஹுய் மற்றும் சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பில், கிழக்கு லடாக்கின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து படைகளை முழுவதும் வாபஸ் பெற வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி விக்ரம் வலியுறுத்தினார்.

இதனால், எல்லை பகுதியில் அமைதி திரும்ப உதவியாக அமையும் என்றும் இருதரப்பு உறவில் வளர்ச்சிக்கான நிலைகளை வழங்கும் என்றும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்ததாக கூறப்படுகிறது.