சென்செக்ஸ் 1,148 புள்ளிகள் உயர்வு

பதிவு செய்த நாள் : 03 மார்ச் 2021 21:04

மும்பை,

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இன்று 1,148 புள்ளிகள் அதிகரித்தது. உலோகம் மற்றும் வங்குத்துறை புள்ளிகள் உயர்வைக் கண்டன.

கொரோனா தடுப்பூசி போடுவது விரிவுபடுத்தப்பட்டு உள்ளதால் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாக பங்குச்சந்தைகள் சிறப்பாக செயல்பட்டதாக வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.

சென்செக்ஸ் வர்த்தக நாளின் இறுதியில் 1,148 புள்ளிகள் அதிகரித்து 51, 445 ஆக நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 327 புள்ளிகள் அதிகரித்து 15, 246 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

தேசிய பங்குச் சந்தையில் வாகனத்துறை புள்ளிகள் 0.6 சதவீதம் சரிவைக் கண்டது. அது தவிர்த்த பிற துறை புள்ளிகள் உயர்ந்தன. உலோகத்துறை 3.3 சதவீதமும், பொதுத்துறை வங்கி புள்ளிகள் 3.1 சதவீதமும், தனியார் வங்கிகள் 2.7 சதவீதமும் உயர்ந்துள்ளன.

பங்குகளைப் பொறுத்தவரை டாடா ஸ்டீல்ஸ் நிறுவன பங்குகள் 5.3 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு ரூ. 774. 80 ஆக உயர்ந்தது. ஹிண்டால்கோ 3.9 சதவீதமும், ஜெ.எஸ்.டபிள்யூ ஸ்டீல்ஸ் பங்குகள் 3.2 சதவீதமும் உயர்வைக் கண்டன.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 4.8 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு ரூ. 2,207.10 க்கு வர்த்தகம் செய்தது. பஜாஜ் பின்செர்வ் பங்கு 4.9 சதவீதமும், பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் 4.2 சதவீதமும் உயர்ந்தது.