ஆப்கானிஸ்தானில் செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்த 3 பெண்கள் சுட்டுக்கொலை

பதிவு செய்த நாள் : 03 மார்ச் 2021 20:23

ஜலாலாபாத்,

கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளூர் செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்த மூன்று பெண்கள் செவ்வாய்க்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக ஆப்கன் நகரமான ஜலாலாபாத்தில் உள்ள எனிகாஸ் ரேடியோ மற்றும் டி.வி.யில் பணியாற்றிய 3 பெண்கள் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, இரண்டு தனித்தனி தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் பெயர்கள் முர்சல் ஹக்கிமி (25), சாடியா (20) மற்றும் ஷானாஸ் (20) ஆகும்.

மேலும் ஒரு பெண் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மாகாண மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மீது பல்வேறு தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இந்த தாக்குதலுக்கும் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தலிபான்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.