புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு

பதிவு செய்த நாள் : 03 மார்ச் 2021 13:27

புதுச்சேரி 

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பாரதீய ஜனதாவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்திய என்.ஆர். காங்கிரஸ்  தனித்து போட்டியிட தற்போது முடிவு செய்துள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலில் ஆட்சியை பிடிக்க பாரதீய ஜனதா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா கட்சிகளைக் கொண்ட கூட்டணிக்கு முயற்சி எடுத்து வருகிறது. ஆனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதால் பாரதீய ஜனதா கூட்டணியில் இடியாப்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. 18 தொகுதிகள் வேண்டும், முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முன்வைத்துள்ளார்.

ஆனால் பாரதீய ஜனதா 12 முதல் 14 தொகுதிகள் வரை மட்டுமே தர முடியும். மீதமுள்ள தொகுதிகளை பாரதீய ஜனதா, அ.தி.மு.க. பிரித்துக்கொள்ளும் என்று பேசி வருகிறது.

ஆனால் பாரதீய ஜனதா தரும் தொகுதிகளை ஏற்பதில் ரங்கசாமிக்கு திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது. முடிவு எடுக்க முடியாமல் ரங்கசாமி கட்சி நிர்வாகிகளுன் ஆலோசித்தார்.

என்ஆர் காங்கிரஸ் தனித்துப் போட்டி

இந்த நிலையில், புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நிறுவனர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. 

இதில் தேர்தலில் கூட்டணி மற்றும் தனித்துப் போட்டியிடுவது என குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.