2050ம் ஆண்டுக்குள் நான்கில் ஒருவருக்கு செவித்திறன் பாதிப்பு : உலக சுகாதார நிறுவனம் தகவல்

பதிவு செய்த நாள் : 02 மார்ச் 2021 20:54

ஜெனிவா,

உலகெங்கிலும் ஒவ்வொரு நான்கு நபர்களில் ஒருவர் அல்லது சுமார் 250 கோடி மக்களுக்கு 2050 க்குள் லேசான முதல் ஆழ்ந்த செவித்திறன் இழப்பை ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் 2020ம் ஆண்டுக்கான செவிட்டுத்தன்மை மற்றும் காது கேளாமை தொடர்பான அறிக்கையில் 70 கோடி மக்களுக்கு காது செயல்பாடுகள் தீவிரமாக பாதிக்கப்படும். இதனால் காது மற்றும் செவித்திறன் பராமரிப்புக்கு கூடுதல் கவனம் தேவை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வரும் மார்ச் 20, 2021 அன்று உலக செவித்திறன் நாளில் (World Hearing Day) முறையாக அறிமுகப்படுத்தப்படும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

அதிகப்படியான சத்தத்தை கேட்பது, மரபணு காரணங்கள், பிறக்கும்போது ஏற்படும் சிக்கல்கள், சில தொற்று நோய்கள், நாள்பட்ட காது நோய்த்தொற்றுகள், குறிப்பிட்ட மருந்துகளின் பயன்பாடு மற்றும் முதுமை ஆகியவை செவித் திறன் பாதிக்கப்படுவதற்கான காரணிகளாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உலகளவில் 110 கோடி இளைஞர்கள் (12-35 வயதுக்கு இடைப்பட்டவர்கள்) பொழுதுபோக்கு சாதனங்களில் அதிக சத்தத்துடன் பயன்படுத்துவதால் செவிப்புலன் இழப்பு ஏற்படும்.

உலக மக்கள்தொகையில் 5 சதவீதத்திற்கும் அதிகமானோர் – 43.2 கோடி பெரியவர்கள் மற்றும் 3.4 கோடி குழந்தைகள் – செவித்திறன் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், 2020 வரை, காது கேட்கும் கருவி தேவைப்பட்டவர்களில் 17 சதவீதம் பேர் மட்டுமே அவற்றை பயன்படுத்துகிறார்கள்.

குழந்தைகளிடையே செவித்திறன் இழப்பில் சுமார் 60 சதவீதம் தடுக்கக்கூடிய காரணங்களால் ஏற்படுகிறது. குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் தான் இந்த பாதிப்பு அதிகளவில் உள்ளது.

காது கேளாமை குறைபாடுகள் பெரும்பாலும் மக்களால் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.மேலும் பல நாடுகளில் இத்தகைய நோய்களைத் தடுப்பது மற்றும் சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ நிபுணர்கள் இல்லை.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், சுமார் 78 சதவீதம் பேருக்கு அல்லது 10 லட்சம் பேருக்கு ஒரு காது, மூக்கு மற்றும் தொண்டை (ஈஎன்டி) நிபுணர்களே உள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான சுகாதார அமைப்புகள் மருத்துவர்கள் பற்றாக்குறையைக் கொண்டுள்ளன, அவை காது நோய்களைச் சமாளிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.