துறைமுக முனையம் அமைக்க இந்தியா முதலீடு - இலங்கை அரசு ஒப்புதல்

பதிவு செய்த நாள் : 02 மார்ச் 2021 19:35

கொழும்பு,

இலங்கையில் துறைமுகம் அமைப்பதற்காக இந்தியா, ஜப்பான் இடையே போடப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை இலங்கை முறித்தது. இந்நிலையில், கொழும்புவில் புதிய துறைமுகம் அமைக்க இந்தியா முதலீடு செய்ய இலங்கை ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையில் கிழக்கு கண்டெய்னர் முனையம் அமைக்க இந்தியா, ஜப்பான் உடன் கடந்த 2019ம் ஆண்டு முத்தரப்பு ஒப்பந்தத்தை இலங்கை செய்து கொண்டது. துறைமுக முனையம் அமைப்பதில் வெளிநாட்டின் தலையீட்டுக்கு துறைமுக யூனியன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, கடந்த மாதம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா மற்றும் ஜப்பானை இலங்கை வெளியேற்றியது.

இந்நிலையில், கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கண்டெய்னர் முனையம் அமைக்க இந்தியா மற்றும் ஜப்பான் முதலீடு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது. திங்கட்கிழமை நடந்த இலங்கை அமைச்சரவையின் வாராந்திர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது இலங்கை அரசு.

இது குறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கெஹெலியா ரம்புக்வெல்லா பேசினார். அப்போது, இந்தியா மற்றும் ஜப்பான் பரிந்துரைக்கும் முதலீட்டாளர்களின் மூலமாக இந்த முனையம் கட்டமைக்கப்படும் என்றார். இந்தியா சார்பாக அதானி போர்ட்ஸ் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாகவும், ஜப்பான் தரப்பில் எந்த பரிந்துரையும் இதுவரை செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டு உள்ளது.

ரத்தான 2019ம் ஆண்டு ஒப்பந்த்தின் படி, கிழக்கு கண்டெய்னர் முனையத்தில் 51 சதவீத பங்குகளை இலங்கை துறைமுக ஆணையம் வைத்துக்கொள்ளும். 

தற்போது அனுமதி வழங்கப்பட்டு உள்ள மேற்கு கண்டெய்னர் முனையம் அமைப்பதில், இந்தியாவும் ஜப்பானும் கூட்டாக 85 சதவீத பங்குகளை வைத்துக் கொள்ளும். கொழும்பு சர்வதேச கண்டெய்னர் முனையத்தில் சீன நிறுவனம் 85 சதவீத பங்குகளை கட்டுப்படுத்துகிறது. இதே முறை தற்போது பின்பற்றப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.