தேர்தல் தொடர்பான குற்றங்களில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டிய குற்றங்கள் என்னென்ன - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 02 மார்ச் 2021 18:52

சென்னை, 

தேர்தல் சம்பந்தப்பட்ட குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டிய குற்றங்கள் என்ன, நடவடிக்கை எடுக்க அவசியமில்லாத குற்றங்கள் என்னென்ன என்பது குறித்து தேர்தல் ஆணையம் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:–

  உரிய அனுமதி பெற்று நடத்தும் தேர்தல் கூட்டத்தில் தகராறு உண்டாக்குவது என்பது மக்கள் பிரதி நிதித்துவ சட்டம் 1951ன்படி போலீசார் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். அவர் பெயர் சொல்ல மறுத்தோ அல்லது தவறான பெயர் முகவரி கொடுக்கிறார் என்ற சந்தேகம் வந்தால் அவரை வாரண்டு இல்லாமல் கைது செய்யலாம். கூட்டத்தில் தலைமை வகிக்க கூடியவரின் வேண்டுகோளில் பேரில் காவல்துறை அதிகாரி கைது நடவடிக்கை எடுக்கலாம்.

  தேர்தல் தேதிக்கு 24 மணி நேரத்துக்கு முன்பு தேர்தல் கூட்டம் நடத்தினால் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் நீதிமன்ற ஆணையின் பேரில் கைது நடவடிக்கை எடுக்கலாம்.

  ஓட்டுச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்குள் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்வது, விளம்பர சுவரொட்டிகள் வைப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வாக்குப்பதிவை நடத்தும் அதிகாரியால் பிடிக்கக்கூடிய குற்றம் ஆகும். வாக்குச்சாவடி அருகே ஒலி பெருக்கி அல்லது மெகாபோன் மூலம் ஒலி எழுப்பி வாக்குப்பதிவு செய்பவர்களுக்கு தொந்தரவு செய்வது பிரிவு 131ன்படி பிடிக்கக்கூடிய குற்றம் ஆகும். தேர்தல் அலுவலர் புகாரின் பேரில் அந்த நபரை கைது செய்யலாம். மேலும் ஓட்டுப்பதிவு நேரத்தில் வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரியின் சட்டப்பூர்வமான உத்தரவுக்கு கீழ்ப்படியாமல் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

  தேர்தல் அலுவலில் இருக்கும் அலுவலர் அல்லது காவலர் வேட்பாளருக்கு சாதகமாக பேசுதல் அல்லது ஓட்டு போடும்படி வற்புறுத்துதல் நீதிமன்ற ஆணையின் பேரில் தேர்தல் அதிகாரி அல்லது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம். வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு கொண்டு செல்லவோ திரும்ப கொண்டு வரவோ சட்டத்திற்கு புறம்பாக வாடகை வண்டி பயன்படுத்துதல் பிரிவு 158ன் படி பிடிக்கக்கூடாத குற்றம் ஆகும். ஆனால் நீதிமன்ற ஆணையின் பேரில் தேர்தல் அதிகாரியோ அல்லது காவல்துறை அதிகாரியோ நடவடிக்கை எடுக்கலாம்.

    ஓட்டுப்பதிவு செய்யும் இடத்திலும் ஓட்டு எண்ணும்  இடத்திலும் ரகசியத்தை வெளியிடுவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 128ன்படி பிடிக்க கூடாத குற்றம் ஆகும். ஆனால் நீதிமன்ற ஆணையின் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம். ஆள்மாறாட்டம் செய்து வாக்களிப்பது அல்லது வாக்களிக்க முயற்சி செய்வது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 171ன்படி கைது செய்யப்படக்கூடிய குற்றம் ஆகும். லஞ்சம் கொடுத்தல், விரும்பத்தகாத துாண்டுதல் செய்தல்  171 பி சட்டப்பிரிவின் படி நீதிமன்ற ஆணையின் படி பிடிக்கக்கூடிய குற்றம் ஆகும்.

  வாக்குச்சீட்டை திருட்டுத்தனமாக ஏமாற்றி எடுத்துச்செல்லுதல் அல்லது எடுத்துச்செல்ல முயற்சித்தல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 135ன்படி  கைது நடவடிக்கை எடுக்க கூடிய குற்றம் ஆகும். அதே போல கள்ளத்தனமாக வாக்குச் சீட்டை அசிங்கப்படுத்தி அழித்தல் ஓட்டுப்பெட்டியில் குறுக்கீடுகள் செய்தல் பிரிவு 136 (பி)ன்படி பிடிக்கக்கூடிய குற்றம் ஆகும். இது அரசாங்க அலுவலரால் செய்யப்பட்டால் பிடிக்கப்படவேண்டிய குற்றம் ஆகும். பொதுமக்களால் செய்யப்பட்டால் பிடிக்கப்படாத குற்றம் ஆகும். வாக்குப்பதிவு நடத்தும் அதிகாரியின் புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளலாம். மேலும் வேட்பாளரின் ஒப்புதலின்றி வேட்பாளருக்காக தேர்தல் செலவுகளை செய்தல் பிரிவு 171 (எச்) பிடிக்கக்கூடாத குற்றம் ஆகும். புகாரின் பேரில் நீதிபதியின் ஆணை பெற்ற பிறகு நடவடிக்கை மேற்கொள்ளலாம்.