எரிப்பொருள் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பதிவு செய்த நாள் : 02 மார்ச் 2021 14:56

திருவனந்தபுரம்,

எரிபொருள் விலை தொடர்ச்சியாக உயர்த்தப்படுவதை எதிர்த்து பல்வேறு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த அழைப்பின் பேரில் இன்று கேரளாவில் 12 மணிநேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பொது போக்குவரத்து முடங்கியது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. தனியார் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட போதிலும், சாலைகள் வெறிசோடி இருந்தன.

பாஜகவின் பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்) தவிர, அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

வேலைநிறுத்தத்தை கருத்தில் கொண்டு, அன்றைய தினம் திட்டமிடப்பட்ட 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் உட்பட பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டாக்சிகள், ஆட்டோக்கள் மற்றும் லாரிகள் தங்கள் சேவைகளை நிறுத்தி வைத்தன. திறந்திருந்த கடைகளும் பின்பு மீண்டும் இழுத்து மூடப்பட்டன.  

இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், உயர்ந்து வரும் எரிபொருள் விலை, சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களின் செயல்பாட்டு விலையை உயர்த்துக்கின்றன. இதனால் பல ஊழியர்கள் வேலையில்லாமல் உள்ளனர் என்று குற்றம்சாட்டியுள்ளது,

பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் உயர் மத்திய வரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இதனால் இந்த விவகாரம் ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது.

இருப்பினும், மாநில அரசுகள் எரிபொருள் மீதான வரியை குறைக்குபடி  என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

ஆனால் கேரள அரசு மாநில வருவாய் பாதிக்கப்படும் என்பதால் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க முடியாது என தெரிவித்துவிட்டது.