தமிழ்நாட்டின் எல்லா தொகுதியிலும் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

பதிவு செய்த நாள் : 02 மார்ச் 2021 13:30

சென்னை:

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், ஒரு வீடியோ கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு வீடியோ கண்காணிப்பு குழுவும் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் எனவும் தற்போது தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளில் 702 பறக்கும் படைகள் தங்களுடைய கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள்.

  நிலையான கண்காணிப்பு குழுக்களை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 702 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

   மேலும் சட்டமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளை பொறுத்தவரை, துணை ராணுவப்படையை சேர்ந்த 330 கம்பெனிகள் பாதுகாப்பு பணிக்கு தேவைப்படுவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி, இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளார்.