பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் 7 % உயர்வு

பதிவு செய்த நாள் : 01 மார்ச் 2021 20:58

புதுடெல்லி,

நாட்டின் பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வரி வசூல், கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 7 சதவீதம் அதிகரித்து இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து 5வது மாதமாக ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளது. இது கொரோனா காலத்துக்கு பிறகு பொருளாதாரம் விரைவாக மீண்டு வருவதைக் காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் ரூ. 1.13 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வரி வசூலை விட 7 சதவீதம் அதிகமாகும்.

இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 21, 092 கோடியும், மாநில ஜிஎஸ்டி ரூ. 27,273 கோடியும் வசூல் ஆகி உள்ளது. சரக்கு இறக்குமதிக்கான ரூ. 24,382 கோடி உள்பட ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி ரூ. 55,253 கோடி வசூல் ஆகி உள்ளது. செஸ் வரி ரூ. 9,525 கோடி வசூலாகி இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் சரக்கு இறக்குமதி மூலம் கிடைக்கு ஜிஎஸ்டி 15 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அரசு கூறியுள்ளது.

ஆனால், கடந்த ஜனவரி மாதம் உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வசூலான ரூ. 119,875 கோடியை விட குறைவே என்று கூறப்பட்டு உள்ளது.