பாதுகாப்புத் துறையில் இலங்கை - இந்தியா கூட்டாளிகள்: இந்திய தூதரகம் அறிக்கை

பதிவு செய்த நாள் : 01 மார்ச் 2021 19:31

கொழும்பு - 

பாதுகாப்பு துறையில் இலங்கை எங்களின் முதல் முன்னுரிமை கூட்டாளி என்று இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கை விமானப்படை தொடங்கப்பட்டதின் 70-வது ஆண்டு விழா நாளை (மார்ச் 2-ந் தேதி) நடக்கிறது. இதையொட்டி முதல் முறையாக அங்கு விண்வெளியில் போர் விமானங்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் இருந்து விமானப்படை மற்றும் கடற்படையின் 23 போர் விமானங்கள் கலந்து கொள்கின்றன.

இந்தியாவின் கூட்டாளி

இதையொட்டி கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறி இருப்பதாவது:-

பாதுகாப்பு துறையில் இந்தியாவின் முதல் முன்னுரிமை கூட்டாளி இலங்கை ஆகும். இலங்கைக்கு பாதுகாப்பு துறைக்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்பதை சமீபத்தில் முத்தரப்பு கடற்படை ஒத்துழைப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்ற இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இலங்கையின் தலைமையிடம் தெரிவித்தார்.

இந்திய விமானங்கள்

இலங்கை விமானப்படையின் 70-வது ஆண்டு விழா அணிவகுப்பில் இந்திய விமானப்படை மற்றும் கடற்படை விமானங்கள் பங்கேற்பது, இரு நாடுகளின் விமானப்படைகளுக்கு இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பு, தோழமை, நட்புறவை காட்டுகிறது.

நட்புறவின் பிணைப்பு

ஒற்றுமையின் அடையாளமாக, இரு தரப்பிலும் பல்லாண்டு காலம் இருந்து வருகிற நெருக்கத்தினை கருத்தில் கொண்டு, இந்திய விமானப்படையும், கடற்படையும் சாரங்க் நவீன லகுரக ஹெலிகாப்டர், சூரியகிரண் (ஹாக்ஸ்), தேஜஸ் போர் விமானம், தேஜஸ் பயிற்சி விமானம், டார்னியர் ரோந்து விமானம் ஆகியவை விமான அணிவகுப்பில் கலந்து கொள்கின்றன.

இது இரு தரப்பு நட்புறவின் பிணைப்பு மற்றும் நெருக்கமான இயங்குதலுக்கான சான்றாக அமைந்துள்ளது.அணிவகுப்பில் இடம்பெறுகிற விமானங்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. இந்த பிரதிநிதித்துவமானது, இந்திய ஆராய்ச்சி, வளர்ச்சி துறையிலும், இந்திய பாதுகாப்பு துறையில் உள்நாட்டு தொழில்நுட்ப வலிமை, தயாரிப்புகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றை குறிக்கிறது.

இவ்வாறு,  இந்திய தூதரகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.