சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 25 உயர்வு – சிலிண்டர் விலை 835 ரூபாயாக அதிகரித்துள்ளது

பதிவு செய்த நாள் : 01 மார்ச் 2021 10:46

சென்னை

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் வீட்டு உபயோக மானிய கேஸ் சிலிண்டர் விலை 835 ரூபாயாக அதிகரித்துள்ளது.

கேஸ் சிலிண்டர் விலை ரூ. 835

சமையல் கேஸ் சிலிண்டர்  விலை மார்ச் மாதம் துவக்கத்திலேயே ( மார்ச் 1ம் தேதி) இன்று மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சிலிண்டரின் விலை 835 ரூபாயாக அதிகரித்துள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

உயரும் கேஸ் விலை விவரம்

முன்னதாக, 2020 ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றின் விலை 734 ரூபாயாக இருந்தது. அதற்கு அடுத்த மாதத்திலேயே சிலிண்டரின் விலையானது 734 லிருந்து 881 ரூபாயாக உயர்ந்தது.

அடுத்து வந்த மாதங்களில் சிலிண்டர் விலை இறங்குமுகத்தில் காணப்பட்ட நிலையில், மே மாதத்தில் அந்த ஆண்டின் குறைந்தபட்ச விலையாக ஒரு சிலிண்டரின் விலை 569 ரூபாய் 50 காசாக விற்கப்பட்டது.

அடுத்து வந்த மாதங்களில் சிலிண்டர் விலை மாற்றமில்லாமல் காணப்பட்ட நிலையில்,

சென்ற செப்டம்பரில் சிலிண்டர் ஒன்றின் விலை 610 ரூபாயாகவும்,

டிசம்பர் ஒன்றாம் தேதி 660 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

டிசம்பர் 15ஆம் தேதி சிலிண்டர் ஒன்றின் விலை 710 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

பிப்ரவரி மாதத்தில் மட்டும் 3 முறை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி 4-ம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில்

பிப்ரவரி  15-ம் தேதி மேலும் 50 ரூபாய் அதிகரித்து கேஸ் சிலிண்டர் விலை 785 ரூபாயாக இருந்தது.

பிப்ரவரி  25-ம் தேதி மேலும் 25 ரூபாய் அதிகரித்து கேஸ் சிலிண்டர் விலை 810 ரூபாயாக இருந்தது.