ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐநாவுக்கான மியன்மார் தூதர் நீக்கம்

பதிவு செய்த நாள் : 28 பிப்ரவரி 2021 19:35

யங்கூன்,

மியன்மாரில் ஜனநாயக ஆட்சியை நீக்கிவிட்டு, ராணுவம் ஆட்சியை கைப்பற்றி இருப்பதற்கு கண்டனம் தெரிவித்ததற்காக ஐக்கிய நாடுகளுக்கான தூதரை ராணுவம் நீக்கி உள்ளது.

மியன்மாரில் பிப்ரவரி 1ம் தேதி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஜனநாயக ஆட்சியில் முக்கிய பொறுப்பு வகித்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனால், ஆங் சான் சூ கி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் சிறையில் உள்ளனர்.

ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டங்களை ராணுவம் அடக்கி வருகிறது. போராட்டத்தின் போது கண்ணீர் புகை குண்டு வீசுவது, தண்ணீர் பீரங்கிகள், ரப்பர் குண்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கலைத்து வருகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை அன்று ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய மியன்மார் தூதர் க்யாவ் மோய் துன், ராணுவ ஆட்சிக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், மியன்மாரில் மீண்டும் ஜனநாயகத்தை நிறுவ சர்வதேச சமூகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். மியன்மாரில் இருக்கும் சகோதர – சகோதரிகள் தொடர்ந்து போராட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இறுதியாக தனது உரையை முடிக்கும்போது, புரட்சி வெல்ல வேண்டும் என்று கூறியபடி, மூன்று விரல்களைக் கொண்டு சல்யூட் செய்தார். ராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்கள் இந்த முறையில் சல்யூட் செய்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியை அடுத்து சனிக்கிழமை இரவே, ஐக்கிய நாடுகளுக்கான மியன்மார் தூதர் என்ற பொறுப்பில் இருந்து க்யாவ் மோய் துன்-வை ராணுவ அரசு நீக்கியது. இந்த அறிவிப்பை அரசு தொலைக்காட்சி வெளியிட்டது.

அரசு கொடுத்த உத்தரவுகளை முறையாக பின்பற்றவில்லை என்றும், நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும் காரணம் கூறப்பட்டது.